Featuredஆய்வுக் கட்டுரைகள்

கறுப்பு ஜூலை: கட்டமைக்கப்பட்ட ‘மீட்பு’க் கதையாடல்களுக்கு அப்பால் | சஞ்சுலா பீட்டர்ஸ்

கட்டுரை | சஞ்சுலா பீட்டர்ஸ் | படம் | இணையம் | மொழியாக்கம் | அருள்கார்க்கி 

1983 ஜூலையின் இரத்தம் தோய்ந்த நிகழ்வுகள் ‘ஜூலை கலவரங்கள்’ அல்லது ‘இனக்கலவரங்கள்’ என வர்ணிக்கப்பட்டு நான்கு தசாப்தங்களுக்கும் மேல் கடந்துவிட்ட போதிலும், இன்றுவரை நீதி மறுக்கப்பட்ட அந்த கொடூரமான நாட்களைக் குறித்து எழுத வேண்டிய கட்டாயத்தில் நாம் இன்னும் இருக்கிறோம். நாம் எழுதுவது ‘இன பதற்றங்கள்’ அல்லது ‘இனக்கலவரங்கள்’ என்று சொல்லப்படும் மங்கிய புலம்பல்களைப் பற்றியல்ல; மாறாக, அவை ஏற்படுத்திய மரண அவலங்களையும், கற்பனை செய்ய முடியாத அநீதிகளையுமே ஆகும். 1983 ஜூலையில் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளின் பின்னர், கொலைகாரர்களும் குற்றவாளிகளும் நீதிக்கு முன் நிறுத்தப்பட்டது குறித்து எழுதுவதற்கு எதுவும் இருக்கவில்லை. மாறாக, ஒருபுறம் 2009 மே மாதம் வரை நீடித்த படுகொலைகளின் தொடர்ச்சியும், மறுபுறம் அந்த நிகழ்வுகளை அரசின் விருப்பத்திற்கு ஏற்ப வரலாற்றில் பதிவு செய்யும் முயற்சிகளுமே அரங்கேறின. இதன் விளைவாக, இன்று தென்னிலங்கையின் உரையாடல்களில் 1983 கறுப்பு ஜூலை என்பது நீதி வழங்கப்பட வேண்டிய ஒரு இன அழிப்பு (Pogrom) பற்றிய விவாதமாக இல்லாமல், அழகுபடுத்தப்பட்டு, திருத்தி எழுதப்பட்ட ஒரு வரலாற்று வடிவமாகவே எஞ்சியுள்ளது.

திருத்தி எழுதப்பட்ட வரலாற்றுப் பார்வை

இந்தக் கதையாடலின்படி, கறுப்பு ஜூலை என்பது ‘ஒரு சிறிய வன்முறைக் கும்பலால்’ தமிழர்கள் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட போது, அவர்களைக் காப்பாற்றிய ‘பெரும்பான்மை சிங்கள மக்களின்’ கதைகளின் தொகுப்பாக சுருக்கப்பட்டுள்ளது. இத்தகைய கதைகள், அரசிற்கும் சிங்கள மக்களாகிய நமக்கும் இடையிலான இன ரீதியான உடன்படிக்கையை வலுப்படுத்தி, நமது அரசியல் வாழ்வை மேலும் சௌகரியமானதாக மாற்றும் வசதியான புனைவுகளாகும். கவிதைகளாகவும், பாடல்களாகவும், நாவல்களாகவும், திரைப்படங்களாகவும், நாடகங்களாகவும் உருமாற்றம் பெற்றுள்ள இந்தக் கதையாடல்கள், சிங்களவர் என்ற வகையில் நமக்கு ஆறுதலையும் திருப்தியையும் அளிக்கலாம். ஆனால், 1983 ஜூலையில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளின் மூலம் அம்பலமான இலங்கை அரசின் கட்டமைப்பு ரீதியான அரசியல் பிரச்சனையை எதிர்கொள்ள அவை ஒருபோதும் நம்மைத் தூண்டுவதில்லை.

கறுப்பு ஜூலையின் புனைவு வரலாறுகள்:’வன்முறையாளர்களாக்கப்படும் மற்றவர்கள்’, ‘சகிப்புத்தன்மை மிக்கவர்களாகக் காட்டப்படும் நாம்’ 

வரலாற்றில் நாம் எதிர்கொள்ளத் தயங்கும் கடினமான பக்கங்களைத் திருத்தி, நமக்கு வசதியான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வடிவங்களில் மாற்றியமைப்பதன் மூலமே நாம் வரலாற்றுப் பார்வைகளைக் கட்டமைக்கிறோம். ஏனெனில், அவ்வாறு செய்யாவிட்டால் நமது கூட்டு அடையாளம் ஒரு பாரிய நெருக்கடிக்கு உள்ளாகிவிடும். கறுப்பு ஜூலை இன அழிப்பு குறித்த இந்தப் பெரும்பான்மைவாத வரலாற்றுப் பார்வையில், கறுப்பு ஜூலை என்பது தமிழ் மக்களால் கவனமாகத் திட்டமிடப்பட்ட ஒரு செயல் என்ற புனைவு முதல், அது அரச ஆதரவு பெற்ற ஒரு சிறிய வன்முறைக் கும்பலால் நடத்தப்பட்டது என்ற வாதம் வரை பல்வேறு கதைகள் அடங்கியுள்ளன. தென்னிலங்கை சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியில் நிலவும் ஆதிக்க சிந்தனையின்படி, கறுப்பு ஜூலை என்பது இந்தத் திருத்தப்பட்ட வரலாற்றைத் தக்கவைக்கத் தேவையான இத்தகைய கட்டுக்கதைகள் மற்றும் புனைவுகளின் தொகுப்பேயன்றி வேறில்லை.

சிங்கள சமூகம் மத்தியில் நிலவும் ஆதிக்கக் கதையாடலின்படி, 1983 இல் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள், பொதுமக்களுடன் எவ்வித தொடர்பும் அற்ற, அரச ஆதரவு பெற்ற வன்முறைக் கும்பலால் நடத்தப்பட்ட தனித்தனி சம்பவங்களாகும். ஆனால், கறுப்பு ஜூலை என்பது உண்மையில் ஒரு சிறிய குழுவால் இழைக்கப்பட்ட கொடூரமான குற்றம் என்றால், வரலாறு நமக்கு முன் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. அதாவது, அந்தத் தருணத்தில் பெரும்பான்மை சமூகம் என்ன செய்து கொண்டிருந்தது? இந்தக் கொடூரங்கள் நடந்து நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு அது குறித்துப் பேசும் இந்தச் சமூகம், அவை நடந்துகொண்டிருந்த போது என்ன செய்தது? சிங்கள சமூகத்தில் இருந்த அரசியல் கட்சிகளும் அரசியல் இயக்கங்களும் அந்தத் தருணத்தில் என்ன செய்து கொண்டிருந்தன? வீதிகளில் தமிழர்களை எரித்துக் கொன்ற ஆளுங்கட்சி மட்டும்தான் நாட்டில் இருந்த ஒரே ஒழுங்கமைக்கப்பட்ட சக்தியா? இல்லையென்றால், அந்த நேரத்தில் ஏனைய அமைப்புகளும் அரசியல் சக்திகளும் என்ன செய்து கொண்டிருந்தன?

பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்கள் ஊடாக இந்த வரலாற்றை ஆய்வு செய்யும் போது, அதுவரை தமிழ் மக்களுடன் தங்கள் அன்றாட வாழ்வைப் பகிர்ந்து கொண்ட சாதாரண சிங்கள மக்களும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளை சாத்தியப்படுத்துவதிலும், கட்டவிழ்த்து விடுவதிலும் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தனர் என்பது தெளிவாகிறது. உடைமைகளைக் கொள்ளையிடுவதிலும் திருடுவதிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டவர்கள் வெறும் ‘அரசாங்க ஆதரவு பெற்ற வன்முறையாளர்கள்’ மட்டுமல்ல; சாதாரண சிங்கள மக்களும் இதில் கணிசமான அளவு ஈடுபட்டுள்ளனர் என்பதையே பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

1983 குறித்த ஆதிக்கக் கதையாடலின்படி, யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் (LTTE) பதின்மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்த சிங்கள மக்களின் எதிர்வினையே கறுப்பு ஜூலையாகும். ஒருபுறம், இதுவே இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன வழங்கிய விளக்கமாகவும் இருந்தது. ஆனால் வரலாறு நம்மை முற்றிலும் மாறுபட்ட ஒரு யதார்த்தத்துடன் முரண்பட வைக்கிறது: அது 1956 ஆம் ஆண்டு முதலே தமிழ் மக்களுக்கு எதிராகத் தொடரும் அரச ஆதரவு பெற்ற இனப் பாகுபாடு மற்றும் வன்முறைகளின் கட்டமைக்கப்பட்ட வடிவமாகும். 1983 ஆம் ஆண்டை மட்டும் நாம் கணக்கில் எடுத்துக் கொண்டாலும், ஜூலை மாதத்திற்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே, அதாவது மார்ச் மாதம் முதலே, வடக்கிலும் கிழக்கிலும் படுகொலைகள் முதல் வீடுகளுக்குத் தீ வைப்பது வரையிலான பல வன்முறைச் சம்பவங்கள் தமிழ் மக்களுக்கு எதிராகப் பதிவாகியிருந்தன.

இந்த வரலாறு நமது கூட்டு அடையாளத்தை அசைத்துப் பார்ப்பதால், நாம் இதைத் தேடிச் செல்வதில்லை. இது வரலாற்று ஆதாரங்களோ அல்லது சான்றுகளோ இல்லாததால் அல்ல. மாறாக, நமது நுகர்வுக்காக வழங்கப்பட்டுள்ள திருத்தி எழுதப்பட்ட வரலாற்றின்படி, நமது கடந்த காலமானது கட்டமைக்கப்பட்டுள்ளது.இதனால்தான் கறுப்பு ஜூலை இன அழிப்பு என்பது ஒரு துயரமான, ஆனால் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு நிகழ்வாக வியாக்கியானம் செய்யப்படுகிறது.

நமது கட்டமைப்பு ரீதியான பிரச்சனை 

படம்: 1983 ஜூலை 25, கொழும்பு —  தமிழர்களின் வீட்டிலிருந்து பொருட்களைக் கொள்ளையிடும் சாதாரண சிங்கள அண்டை வீட்டார்.  

1983 ஆம் ஆண்டுக்குப் பிறகு ‘கறுப்பு ஜூலை’ போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடக்கவில்லை என்பது சிங்களவர்களாகிய நாம் கேட்க விரும்பும் மற்றொரு கதையாகும். இருப்பினும், 1983 கறுப்பு ஜூலைக்குப் பிறகு உண்மையில் நடந்தது என்னவென்றால், வன்முறைகள் அரசாலேயே மேலும் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு, சட்டபூர்வமாக்கப்பட்டன. அதன்படி, கறுப்பு ஜூலைக்குப் பின்னர், தமிழ் மக்கள் ஒழுங்கமைக்கப்படாத காடையர்களின் வன்முறைகளுக்கு இரையாகாமல், அரசால் உத்தியோகபூர்வமாகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளுக்கு இரையானார்கள். இதன் விளைவாக, 1983க்குப் பின்னர் நடைபெற்ற பெரும்பான்மையான கொள்ளைகள், பாலியல் வன்முறைகள் மற்றும் படுகொலைகள் உத்தியோகபூர்வ அதிகாரத்தைக் கொண்டிருந்த, அதன் காரணமாகவே சட்டரீதியான தண்டனை விலக்கினைக் (Legal impunity) கொண்டிருந்த ஆயுதப் படைகளாலேயே மேற்கொள்ளப்பட்டன. 2009 ஆம் ஆண்டின் உச்சக்கட்ட கொடூரங்களுடன் கூட முடிவுக்கு வராத இந்த ஒழுங்கமைக்கப்பட்ட, இனவாத அரச வன்முறைக்கு தமிழ் மக்களின் அன்றாட வாழ்வே சாட்சியாக நிற்கின்றது. முஸ்லிம் மக்களும் கூட இந்த மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறை வடிவத்திற்கு இரையானார்கள்.

2022 ஆம் ஆண்டு தென்னிலங்கை முழுவதும் பரவிய அரசாங்கத்திற்கு எதிரான எழுச்சிக்குப் பின்னரும், தொடர்ந்து போராடிய மாணவர்கள் மற்றும் வெகுஜன அமைப்புகள் உள்ளிட்ட ஒரு சில செயற்பாட்டாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அரச அடக்குமுறையானது, நாம் வாழும் அரசின் தன்மையைப் பற்றி நமக்குக் கற்றுத்தரும் ஒரு முக்கியமான பாடமாகும். அதாவது, இலங்கை அரசின் மையப் பகுதியிலேயே புதைந்துள்ள பேரழிவு தரும் ஆற்றல் அதுவாகும்.

ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள், தசாப்தம் தசாப்தமாக பாரிய கொடூரங்களை அரங்கேற்றிய ஒரு வரலாற்றை இலங்கை கொண்டுள்ளது. இந்தக் குற்றங்களைச் செய்வதற்கு அரசு தனது அடிப்படைத் தன்மையை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமிருக்கவில்லை. இதன் பிரதான பாதிப்பாளிகள் தமிழ் மக்கள் என்பதாலும், சிங்கள மக்கள் தாங்கள் கடந்த காலத்தில் வாழ்ந்த பாரிய வன்முறைகளை மறந்துவிடுவதற்கு கூட்டாக உடன்பட்டுள்ளதாலும், சிங்கள சமூகம் இந்த அழிவு ஆற்றல் என்பது நாம் வாழும் அரசின் கட்டமைப்பு ரீதியான பிரச்சனை என்பதை அரசியல் ரீதியாகப் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கிறது. இதன் விளைவாக, 1983 தமிழர்களுக்கு எதிரான கறுப்பு ஜூலை இன அழிப்பு என்பது வரலாறு வழமையாக நகர்ந்துகொண்டிருந்த போது தற்செயலாக நடந்த ஒரு விபத்து என்று நம்ப நாம் முனைகிறோம்.இதனால்தான், பாரிய வன்முறைகளின் இந்த உண்மையான வரலாற்றைத்  துல்லியமாக  திருத்தி, பண்பாட்டுக் காட்சிகளின் ஊடாக அதனை அழகுபடுத்த வேண்டிய தேவை எழுகிறது.

சிங்கள மக்களும், குறிப்பாக 1987-89 காலகட்டத்தில், அரச மிருகத்தனத்தை நேரடியாக அனுபவித்தனர். தென்னிலங்கையில் 1987-89 அரச வன்முறைகளுக்குப் பின்னர், அதனை அனுபவித்த அரசியல் இயக்கங்களும், அந்த இயக்கங்கள் தங்கியிருந்த சமூக வர்க்கங்களும் அரசு குறித்த இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ளும் ஆற்றலைக் கொண்டிருந்தன. இருந்தபோதிலும், அதன் பின்னர் அரச அடக்குமுறைக்கு இரையான அந்த அரசியல் இயக்கம் கூட, மற்றைய சமூகங்களை இலக்கு வைத்து அரசாங்கம் கட்டவிழ்த்து விட்ட கொடூரமான செயல்களுக்கு எதிராக எந்தவொரு ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பையும் முன்னெடுக்கும் பொறுப்பிலிருந்து வேண்டுமென்றே விலகிக் கொண்டது. அவர்கள் போராடக் கூடாது என்று முடிவு செய்தது மட்டுமன்றி, அந்தக் குற்றங்களுக்கு தீவிரமாகப் பங்களிக்கவும் செய்தனர். இன்றளவும் கூட, அரச குற்றங்களுக்கு எதிராக ஒரு வெளிப்படையான அரசியல் நிலைப்பாட்டை எடுக்க அவர்கள் தயாராக இல்லை. அரச குற்றங்கள் குறித்து மௌனம் காக்கும் இந்த கூட்டு உடன்பாடானது, சிங்கள மக்கள் அரச இயந்திரத்துடன் பகிர்ந்து கொள்ளும் இன ரீதியான பிணைப்பைக் காட்டுகிறது. இந்தப் பிணைப்பு, அரசின் மையத்திலேயே உள்ள குற்றவியல் தன்மையை அங்கீகரிக்கும் திறனை அவர்களிடமிருந்து பறிக்கிறது. அரச ஆயுதப் படைகளைக் கொண்டாடி, அவர்களுக்கு விசுவாசத்தை அறிவிக்கும் அதேவேளையில், அவர்களின் அடக்குமுறைகளுக்கு இரையாவது முதல், ‘அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது அரச இராணுவம் அல்ல’ என்று வாதிடுவது வரை தென்னிலங்கைப் போராட்டக்காரர்கள் கொண்டிருந்த அனைத்து முரண்பாடான நிலைப்பாடுகளும், அரசுடனான இந்த சமரசத்தின் உண்மையான தன்மையை வெளிப்படுத்துகின்றன.

யாராவது 1983 கறுப்பு ஜூலையையும், அதற்கு முன்பும் பின்பும் இருந்த இலங்கையையும் புரிந்து கொள்ள விரும்பினால், அரசின் பாரிய அழிவு ஆற்றல், குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை விலக்கு மற்றும் பெரும்பான்மை மக்கள் இது குறித்து எவ்வித கவலையும் இன்றி இருப்பது ஆகியவை வெறும் தற்செயலான நிகழ்வுகள் அல்ல, மாறாக அவை ஒரு கட்டமைப்பு ரீதியான அரசியல் பிரச்சனை என்பதை உணர வேண்டும். அரசால் இழைக்கப்பட்ட கொடூரமான குற்றங்களை நியாயப்படுத்தவும், அவற்றில் உடந்தையாக இருக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள், தென்னிலங்கையின் சமூகக் கட்டமைப்பிற்கும் அரச இயந்திரத்திற்கும் இடையிலான உறவில் உள்ள ஒரு ஆழமான கட்டமைப்புப் பிரச்சனையை வெளிப்படுத்துகின்றன.இந்தப் பிரச்சனையைத் தவிர்ப்பது என்பது, அடிப்படையில், நம்மை அடக்கி ஆளுவதற்கு அரசிற்கு நாமே அனுமதி வழங்குவதற்கு ஒப்பானதாகும்.

கலையம்சமாக்கப்படும் வரலாறு: ஒரு வசதியான மாற்றுப் பாதை  

கறுப்பு ஜூலை பிரதிபலிக்கும் இலங்கை அரசின் குற்றவியல் தன்மையை எதிர்கொள்வது, நமது கூட்டு இருப்பை ஒரு பாரிய நெருக்கடியில் தள்ளுகிறது. அரசின் குற்றவியல் தன்மையை எதிர்கொள்வது அரசுடனான நமது உடன்பாட்டைச் சிதைக்கிறது. இதன் விளைவாக, அடிப்படையில் ஒரு அரசியல் பிரச்சனையாக இருக்கும் அரசின் அழிவு ஆற்றலை, ஒரு அரசியல் பிரச்சனையாகக் கையாள்வதற்குப் பதிலாக, அதை முற்றிலும் மாறுபட்ட ஒரு தளத்திற்கு, அதாவது பண்பாட்டுத் தளத்திற்கு மாற்ற நாம் நிர்ப்பந்திக்கப்படுகிறோம். கறுப்பு ஜூலையின் குற்றங்களையும் இரத்தக் களரியையும் கவிதைகள், பாடல்கள், நாடகங்கள் மற்றும் தமிழர்களைக் காப்பாற்றிய சிங்களவர்களின் கதைகள் மூலம் மறைக்க நாம் முன்னெடுக்கும் நான்கு தசாப்த கால முயற்சியின் பின்னணியில் இந்தப் பிரச்சனையே உள்ளது. கறுப்பு ஜூலை குறித்த இந்த வசதியான கதையாடலில், குற்றவாளிகளுக்கு எந்த அடையாளமும் இல்லை, அதை எளிதாக்குவதற்கு செயற்பட்ட ஒரு இனவாத அரசும் அங்கு இல்லை. மாறாக, ஒரு சில கெட்ட சிங்களவர்கள் மற்றும் பெரும்பான்மையான நல்ல சிங்களவர்கள் பற்றிய ஒரு சோகக் கதை மட்டுமே அங்கு எஞ்சியுள்ளது.

தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்புகளின் வரலாற்றையும், அவை குறித்த பெரும்பான்மை சமூகத்தின் மௌனத்தையும் மறைத்து, இந்தப் பொய்யான கதையாடலைத் தக்கவைத்துக் கொள்ளவே மேலோட்டமான, காட்சிப் படுத்தப்படும் நல்லிணக்க நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. அரை நூற்றாண்டுக்கும் மேலாக முன்வைக்கப்படும் உறுதியான அரசியல் கோரிக்கைகளின் அடிப்படையில் தொடரும் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு தோளோடு தோள் நிற்பதற்குப் பதிலாக, ‘யாழ்ப்பாணத்தை நேசிப்போம்’ (Loving Jaffna) போன்ற வெற்று முழக்கங்களைச் சுற்றி  அதிக விருப்பம் காட்டப்படுவது இதனால்தான். ஒரு அரசியல் பிரச்சனை அரசியலற்றதாக்கப்பட்டு, இரண்டு இனக் குழுக்களுக்கு இடையிலான வெறும் பண்பாட்டுப் புரிதலின்மைப் பிரச்சனையாகச் சுருக்கப்படுவதும் இதனாலேயே ஆகும். மேலும், பலரும் தமிழ் மக்களை நமது அனுதாபத்திற்கும் அன்பிற்கும் ஏங்கும் ஒரு நிர்க்கதியான சமூகமாகப் பார்க்க விரும்புவதற்கும் இதுவே காரணமாகும்.

நாம் நமக்காக உருவாக்கிக் கொண்ட பாசாங்குத்தனமான, செயற்கையான மற்றும் அழகுபடுத்தப்பட்ட பண்பாட்டு மேடைகளில் ஏறி நின்று பேசுவதற்கு நமக்கு அனுமதி வழங்குவது, நாமே சுயமாக உருவாக்கிய இந்தக் கதையாடலை நாம் ஆர்வத்துடன் ஏற்றுக்கொள்வதேயாகும். இதன் விளைவாக, இந்தப் பண்பாட்டு விளக்கத்தை ஒரு ஆழமற்ற பொய் என்று கூறும் எந்தவொரு சிங்களவரையும் இன நல்லிணக்கத்தின் தடையாக முத்திரை குத்தவும், அவ்வாறே சிந்திக்கும் எந்தவொரு தமிழரையும் இனவாதி என்று முத்திரை குத்தவும் பலர் அவசரப்படுகிறார்கள். 1983 கறுப்பு ஜூலை இன அழிப்பு நடந்து 43 ஆண்டுகளுக்கும் மேல் கடந்துள்ள நிலையில், அதைச் சுற்றியுள்ள ஆதிக்கக் கதையாடலானது அந்த நிகழ்வுகளுக்குப் பின்னரால் உள்ள கட்டமைப்பு ரீதியான பிரச்சனைகளில் இருந்து தப்பிப்பதற்கான பாதையைச் சுத்தப்படுத்துகிறது. இலங்கையில் அரச குற்றவியல் என்ற கேள்வியைத் தொடுவதற்கு எச்சரிக்கையாக இருப்பவர்களுக்கு இந்த ஆதிக்கக் கதையாடல் ஒரு வசதியான கதையை வழங்குகிறது. இந்த ஆதிக்கக் கதையாடல் என்பது, சிங்கள மக்களின் மனிதநேயம் மற்றும் வீரத்தைப் பற்றி புனையப்பட்ட கற்பனைக் கதைகளைக் கொண்டுள்ளது, இது வெறுமனே நமது (சிங்களவர்களின்) கண்களில் கண்ணீரை வரவழைக்க மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது.

புனைவுகளை நுகர்வதற்கு நாம் இப்போது அடிமையாகிவிட்ட காரணத்தால்தான், தசாப்தங்களாக தமிழ் மக்கள் வலியுறுத்தும் ‘இன சமத்துவம் மற்றும் நீதிக்கான’ உறுதியான அரசியல் கோரிக்கைகளை, நல்லிணக்கத்திற்கு எதிரான பிரிவினைவாதிகளின் குறுகிய கோரிக்கைகள் எனவும், அந்தப் பிரிவினைவாதத்திற்கு உடந்தையாக இருப்பவர்களின் கோரிக்கைகள் எனவும் கூறி எளிதாகப் புறக்கணிக்க முடிகிறது.

ஆண்டுதோறும், 1983 கறுப்பு ஜூலையானது இலங்கையை மாற்றுவதற்காக அரசியல் செய்வதாகக் கூறிக்கொள்ளும் தனிநபர்களாலும் அரசியல் இயக்கங்களாலும் தட்டிக்கழிக்க முடியாத ஒரு வினாவை நம்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. அது, இந்த இனமையவாத அரசின் இன அழிப்பு அதிகாரத்தைத் தோற்கடிக்கக் கூடிய ஒரு அரசியல் மூலோபாயத்தைக் கட்டமைப்பதற்கு வழிகோலும் இனங்களுக்கு இடையிலான அரசியல் கூட்டுணர்வை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பதாகும்.

இதற்கான அடித்தளம் பண்பாட்டு ரீதியான துயரப் பகிர்வாக இருக்கக்கூடாது, மாறாக அரசியல் கூட்டுணர்வாகவே இருக்க வேண்டும். இந்தப் பாதையின் ஊடாக மட்டுமே, 1983 கறுப்பு ஜூலை உருவாக்கிய இருண்ட வரலாறு நமது நிரந்தரப் பாரம்பரியமாக மாறுவதைத் தடுக்க முடியும்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button