இன்னும் திறக்கப்படாத முப்பத்தொரு வருட சிறை வாழ்க்கை | ஜெரா
கட்டுரை | படங்கள் | ஜெரா
முன்குறிப்பு: 1996ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி, இலங்கை மத்திய வங்கி குண்டுவெடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்டார் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விக்கினேஸ்வரநாதன் பார்த்திபன் அவர்கள், கடந்த 31 வருடங்களாகத் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார். இலங்கை வரலாற்றில் மிக நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதியான இவரை மீட்பதற்காக அவர்தம் குடும்பத்தார் நடத்தும் கண்ணீர் ததும்பும் போராட்டம் பற்றிய கட்டுரை இது.
யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அடையாளமான நல்லூர் கந்தசாமி கோயிலின் மணியோசை கேட்கும் தொலைவில் உள்ள இடத்தில்தான் நடுத்தரவயதுடைய அப்பெண்ணுடனான சந்திப்பு இடம்பெற்றது. அவரின் பெயர் விக்கினேஸ்வரநாதன் வாஹினி. தின்னைவேலி என அழைக்கப்படும் திருநெல்வேலியை வசிப்பிடமாகக் கொண்டவர். மிகுந்த மனச்சுமையுடன் வந்தமர்ந்த அப்பெண்மணியின் கையிலிருந்த பொலித்தீன் பையில் மிகுதியான ஆவணங்கள் இருந்தன. அவை வெறும் காகிதங்கள் அல்ல. 31 வருடங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தன் தமையனான விக்கினேஸ்வரநாதன் பார்த்திபனை மீட்பதற்காக அவரும், அவரின் குடும்பத்தினர் அனைவருமாக இணைந்து நடத்திய போராட்டத்தின் வரலாறு அதற்குள் உள்ளடங்கியிருந்தது.

வந்தமர்ந்த அவர் முன் வழமையான அந்தக் கேள்வி விழுந்தது. ”உங்களின் அண்ணா எப்படி கைதானவர்?”
”..ம்..அவர் போகும்போது அவருக்கு 17 வயதுதான். எனக்கு 14 வயது. வெளிநாட்டுக்குப்போவதாக சொல்லிவிட்டுதான் போனவர். அந்நேரம் எங்களின் குடும்பத்தில் அக்கா, அண்ணாக்கள் ரெண்டுபேர் என எல்லோரும் கலியாணம் கட்டியிருந்தவ. நானும் அக்காவும் அண்ணாவும் தான் வீட்டில் இருந்தனாங்கள். அந்த காலத்தில் ஒரு தொடர்பும் இல்ல. வெளிநாட்டுக்கு போறதென்றால், வீட்ட விட்டு வெளிக்கிட்டவர் கடிதம் ஏதும் போட்டால் தான் அவரை பற்றி அறிஞ்சிகொள்ளலாம். இப்ப மாதிரி தொலைபேசி வசதிகள் எதுவும் இல்லாத காலம். அண்ணாவின் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தம்..” என கடந்த காலத்தை அசைபோட்டார். ஒரு காலத்தின் வரலாற்றை தன் நினைவின்வழியே கடத்த முயன்றார்.
”நாங்கள் 1995ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னிக்கு போனம். நாங்கள் வன்னியில் இருக்கும்போதுதான் தெரிஞ்ச ஆக்கள் வந்து, அண்ணாவை பிடிச்சி (கைதுசெய்து) வச்சிருக்கிறதாக சொல்லிச்சினம். பிறகு ஐ.சி.ஆர்.சி ஊடாக கடிதம் எழுதித்தான் அண்ணாவோட தொடர்பில் இருந்தனாங்கள். பிறகு அண்ணாவை களுத்துறையில் தடுத்து வைச்சிருக்கும்போது நானும், அம்மாவும், அக்காவும் போய் பார்க்கிறனாங்கள். அதுக்குப் பிறகு நாங்கள் திருப்பியும் யாழ்ப்பாணம் வந்திற்றம். இங்க வந்தவுடன அம்மா எல்லா இடமும் திரிஞ்சி அண்ணாவை விடசொல்லி கேட்டவா. எங்க ஜனாதிபதி வந்தாலும் கடிதம் எழுதிக்கொண்டு நானும் அம்மாவும் போவம். வன்னி இடப்பெயர்வோட அம்மா நோய்வாய்ப்பட்டுப்போனா. அவவுக்கு ஏலாது. அவவுக்கு தலையில் எல்லாம் ”ஷெல் பீஸ்” (எறிகணைத் துண்டு) இருந்தது. மற்றது, அண்ணாவை நினைச்சி சரியா கவலைப்படுவா. இரவிரவா யோசிப்பா. கடைசி வரைக்கும் அண்ணா வரவேணும் அண்ணா வரவேணும் என்று கேட்டுக்கொண்டிருந்தா…” அம்மாவின் நினைவை நீட்டித்துக்கொண்டிருந்தவரிடம் ”அப்பாவுக்கு என்ன நடந்தது?” என்கிற கேள்வியைக் கேட்டபோது, ”அண்ணா எப்ப வருவார் என்ற ஏக்கத்தோட இருந்த அப்பா 2017இல் இறந்துபோனார். அப்பாவின் இறப்புக்கு அண்ணாவை கூட்டிகொண்டு வந்தவை. சடங்குகள் ஒன்றும் செய்ய அனுமதிக்கேல்ல. ஆனால் அண்ணா கனகாலத்துக்கு பிறகு எங்கட வீட்ட வந்தவர். அண்ணா கைது செய்யப்பட்டு 26 ஆவது வருசம் (2022) வந்தபோது அம்மா இறந்து போனா. அம்மாவின் இறப்புக்கும் அண்ணாவை கூட்டி வந்தவை. அப்பா, அம்மா, நான் என்று மூன்று பேரும்தான் அண்ணாவை பார்க்க போவம். அவை ரெண்டு பேரும் இறந்த பிறகு நான் தனிச்சிப்போனன்..” என்றவர் தூரத்தே தெரிந்த வீதியில் பயணித்துக்கொண்டிருந்தவர்களை பார்த்தபடியே சிறிதுநேரம் அமைதியானார்.
பிறகு மௌனம் உடைத்து, ”சிறுவயதில் கைது செய்யபட்ட அண்ணா, ஒவ்வொருவரின் இறப்புக்கும்தான் வீட்டுக்கு வந்தார். இது அதிக கவலையை தந்தது. இப்பிடியே 30 வருஷம் அண்ணாவின் வாழ்க்கை சிறைக்குள்ளயே முடிஞ்சிது. நாங்கள் போன சுதந்திர தினத்தை நம்பி இருந்தம். அதிலாவது பொதுமன்னிப்பின் கீழ் அண்ணாவை விடுவினம் எண்டு. இந்த முறையும் நாங்கள் ஏமாற்றப்பட்டம். 20 வருசத்துக்கு மேலாக சிறையில் இருக்கிற கைதிகளை இந்த சுதந்திர தினத்தில் விடுதலை செய்யப்போவதாக சொன்னார்கள். அண்ணாவுக்கு 30 வருஷம் ஆகிற்றுத்தானே. இந்த வருஷம் கட்டாயம் விடுவாங்கள் என மலைபோல நம்பியிருந்தான். ஆனால் அண்ணாவை விடுதலை செய்யல்ல. என்னைப்போல நம்பியிருந்த பலரும் தொலைபேசியில் அழைப்பெடுத்து அண்ணாவை விட்டாச்சோ என்று கேட்டவை, கண்ணீரோட நான் இல்லை என்று சொன்னன்..”இப்போதும் அவரின் கண்கள் உலர்ந்த கண்ணீரை மலைபோல வரவழைத்தன.
பீறிட்டுக் கிளம்பும் அழுகையை – அதன் வழியே வழிந்த கண்ணீரை கைகளால் அழுத்திப் பிடித்துபடி தொடர்ந்தும் கதைத்தார். ”அம்மாவும் இப்பிடித்தான். போற இடமெல்லாம், என்ர பிள்ளைய விடுங்கோ, நான் சாக முதல் ஒருமுறை என்றாலும் என்ர கையால் சமைச்சி சாப்பாடு குடுக்க வேணும் என்று மன்றாடினா. அது நிறைவேறாமல் செத்தும்போனா. அழுதழுது, கடைசி கிழமை சாப்பிடாமல் விட்டுத்தான் செத்துப்போனா. அந்தநேரம் நானும் கலியாணம் முடிச்சிட்டன். அம்மா தனிச்சும் போனா. அந்தநேரம் அம்மா குடுக்கிற பேட்டிகளிலெல்லாம் ஒருக்கா என்ற மகனை விடுங்கோ. நான் என்ர கையால அவனுக்கு சாப்பாடு குடுக்க வேணும் என்று தான் சொல்லிக்கொண்டிருப்பா..” ஒவ்வொரு தாயினதும் நாளாந்த விருப்புக் கடமையாக இருக்கும் அடர்அன்புக் செயலைத்தான் இந்தத் தாயும் தன் மகனுக்குப் புரியக் காத்திருந்தார். ஆனால் அது நிறைவேறாமலே…!

தன் நம்பிக்கையையும், அது பொய்க்கும்போது ஏற்படும் சலிப்பையும் தொடர்ந்தும் பேசினார் வாஹினி. ”..நாங்களும் ஒவ்வொரு சுதந்திர தினத்தையும் நம்பிக்கொண்டிருக்கிறம். இன்னும் அண்ணாவுக்கு ஒரு வழி கிடைக்கேல்ல. இனி அவர் வெளியில வந்தாலும் முதியவர்தான். இப்பவே அவருக்கு வயசு 51. இப்ப அவர் வெளியில் வந்தால், நாங்கள் எங்கட பிள்ளையளுக்கு, இவர் உங்கட மாமா. இவரை நீங்கள்தான் பார்த்துக்கொள்ளவேணும் என்று சொல்லிக்கொடுக்கலாம். எங்கட பிள்ளையாலும் இல்லாட்டி யார் அவரை பார்க்கிறது. நாங்களும் வருத்தக்காரர். கடைசியா எங்கட செத்தவீட்டுக்குத்தான் கொண்டுவருவினமோ தெரியாது. அப்பிடிதான் நிலமைகள் இருக்கு. 31 வருஷமாக ஒருவருக்கு பொதுமன்னிப்பு கிடைக்காட்டி எப்பிடி? எத்தினையோ கொலைகள செய்தவனைகூட மன்னிச்சி விட்டிருக்கினம்…” எதிர்காலம் குறித்த பயத்தையும், நம்பிக்கையீனத்தையும் வார்த்தையாகக் கொட்டியபடி அடுத்த கேள்வியை எதிர்கொண்டார் அவர்.
அண்ணாவை எப்போதெல்லாம் பார்க்கப் போவீங்கள்?
”..எங்கள வருசத்தில ஒருநாள் அவரோட விடுவினம். அன்றைய நாள்தான் எங்களுக்கு சந்தோஷமான நாள். இந்த வருஷம் எங்களுக்கு அந்த சந்தோசம் கூட இல்ல. இன்னும் பார்க்க விடேல்ல. போனவருஷம் உள்ளுக்கு போய் பார்க்க விடேல்ல. ஏன் அப்பிடி செய்தவை என்றும் தெரியேல்ல. அன்றைய நாள் நாங்கள் அவர் விரும்பின சாப்படெல்லாம் செய்துகொண்டு போய் அவருக்கு தீத்திவிடுறனாங்கள். (ஊட்டிவிடுதல்) அவர் எங்களுக்கு பாசமா தீத்திவிடுவர். எங்கட பிள்ளையளுக்கும் தீத்திவிடுவார். என்ர மகனை கைகுழந்தையா கொண்டு போய் அண்ணாக்கு காட்டியிருக்கிறான். இப்ப அவனுக்கு கலியாணமும் முடிஞ்சிது. எங்கட நல்ல நிகழ்வுகள் எதிலையும் அண்ணாவின் முகமில்ல. ஒரு போட்டோ இல்ல. அம்மா ஒரு போட்டோவுக்கும் நிற்கமாட்டா. கட்டாயப்படுத்தித்தான் அவாவை போட்டோ எடுத்து, எங்கட குடும்ப நிகழ்வு படங்களை அண்ணாவுக்கு கொண்டுபோய் காட்டுறனான். அவருக்கு சொந்தங்கள் யாரையும் தெரியாது. சின்னன்ல போனதுதானே. போட்டோவை காட்டித்தான் சொந்தங்கள அடையாளம் காட்டுறனான்..”நீண்டகாலம் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல்கைதி ஒருவரின் வாழ்க்கை எப்படியெல்லாம் சீரழிந்திருக்கிறது, அவர்தம் குடும்பத்தின் வேரிலிருந்து எப்படியெல்லாம் பிடுங்கியெறியப்படுகிறார் என்கிற ஆய்வு ரீதியான கேள்விகளுக்கெல்லாம் அவரிடமும், அவரின் குடும்பத்தாரிடமும் அதிகமே அனுபவமிருந்தது.
இந்த அனுபவம் பற்றி சொல்வதற்கு வாஹினியிடம் மிகமிக அதிகமான விடயங்கள் இருந்தன. அவை எல்லாவற்றையும் சொல்லத்தொடங்கினார். ”..எங்கட அக்காவுக்கு பிள்ளைக்கும் பிள்ளையிருக்கு. அண்ணா அந்த பிள்ளையாளுக்கு தாத்தா. நாங்க எத்தின தலைமுறையா அவரை சிறையில் பார்த்துக்கொண்டிருக்கிறம். அந்த சின்ன பிள்ளையள் இவர் ஏதோ மோசமான குற்றவாளி என்றும், அதனாலதான் இவ்வளவு காலமும் சிறையில் அடைச்சி வச்சிருக்கினம் என்றும் யோசிக்குங்கள். அவரின்ர இளமைக்காலம் முழுமையாக முடிஞ்சிது. இனி அவருக்கு முதுமைதான் மிஞ்சிக்கிடக்கு. அந்த முதுமைக்கலத்திலயாவது ஒரு நோய் நொடி இல்லாமல் எங்கட பிள்ளையளோட வந்து வாழவேணும் எண்டுதான் போரடிக்கொண்டிருக்கிறாம். அவரால இனி தனிய இயங்கவும் ஏலாது. எங்கள நம்பித்தான் வாழவேணும். 15, 20 வருஷம் அங்க இருந்து வாற ஆக்களை நான் கண்டிருக்கிறன். ஒரு மாதிரிதான் இருப்பினம். 31 வருசமா ஒரே அறைக்குள் வெளி உலகம் தெரியாமல் இருந்தால் அவரின்ர வாழ்க்கை எப்பிடி இருக்குமென்று யோசிச்சிப்பருங்கோ. அதை யோசிக்கவே பயமாவும் இருக்கும். அவர் வந்த பிறகு அவரின்ர மிச்ச காலாதுக்கு நாங்கள் ஆசுப்பத்திரிக்குத்தான் அலைய வேணுமோ தெரியேல்ல…”

”..1976 ஆம் ஆண்டு ஏப்ரல் மாசம் முதலாம் திகதி பிறந்தவர். அவர் அந்த திகதியில் பிறந்ததால்தான் வாழ்க்கை நாசமாகினதோ தெரியேல்ல. அண்ணா பிறந்தவுடன அம்மா எல்லாருக்கும் சொல்லியிருக்கிறா. அந்த திகதியில் பிறந்ததால ஒருத்தரும் அதை நம்பேல்லயாம். அதேமாதிரி அவனின்ர வாழ்க்கையும் சீரழிஞ்சிற்று..” தன் அண்ணாவின் எஞ்சிய காலம் குறித்த பயம் அவரிடம் ஆழமாகவே தென்பட்டது.
ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்க குறித்து தமிழ் மக்களில் அனேகம் பேர் நம்பிக்கை கொண்டிருந்தனர். அதே நம்பிக்கையை வாஹினியும் கொண்டிருந்தார் என்பதை அவரின் வார்த்தைகள் உறுதிப்படுத்தின. ”..தேர்தல் பிரச்சாரத்துக்கு ஜனாதிபதி பாசையூர் வந்த நேரம், அண்ணாவை பொதுமன்னிப்பில் விடச்சொல்லி கடிதமும் எழுதிக்கொண்டு அங்க போனன். அங்க அவர் அரசியல் கைதிகள விடுதலை செய்வன் என்று சொன்னார். நான் அந்த இடத்தில் நின்று முருகனைக்கும்பிட்டன். வந்து ஒரு வருஷம் கடந்திற்று. இன்னும் ஒரு முடிவும் இல்ல. அது தான் பெரிய கவலை. கொண்டு போன கடிதத்தை அங்க நின்ற ஜனாதிபதியின் உதவியாளரிட்ட குடுத்தன். அந்த கடிதத்துக்கு பதில் கடிதமும் வந்தது. தங்களுக்கு கடிதம் கிடைச்சதாக அந்த கடிதம் இருந்தது. வேற ஒன்றும் இல்ல. பிறகு நீதியமைச்சரை சந்திச்சம். அவர் எங்கட வலி தனக்கு விளங்குது. கதைக்கிறன் என்றார். ஒரு முடிவும் இல்ல – என அரசுடனான தொடர் போராட்டத்தையும், சலிப்பையும் அடுக்கினார்.
இறுதியாகத் தன் இறுதி நம்பிக்கையை இப்படிச் சொன்னார். ”..எங்கட அண்ணா வந்தால் முருகனிட்ட தான் கொண்டு வந்து விடுவன் என்று முருகனிட்ட சொல்லியிருக்கிறன். அண்ணா ஒரு முருக பக்தன். அவர் சிறைக்கு போனதில இருந்தே கந்தசட்டி விரதம் என்றால் இளநியோடதான் இருப்பார். அந்த முருகனைதான் இப்ப நம்பியிருக்கிறம்.” – எனச் சொல்லிவிட்டு கனமான ஆவணங்கள் அடங்கியை பொலித்தீன் பையை எடுத்துக்கொண்டு நடக்கத்தொடங்கினார் வாஹினி. நல்லூர் கோபுரத்தின் பின்னால் சரிந்துகொண்டிருந்தது சூரியன்.



