Featuredநினைவுகள்

துயர நாட்களின் வலிமிகு இழப்பு | வேல்விழி

கட்டுரை | வேல்விழி | படம் |Tamilnet

“இஞ்சரப்பா சுதா ரீச்சரையெல்லே மா லைனிலை கண்டனான். எங்க, கதைக்கவும் நேரமில்லை. ஆனா, பெடிக்கு காலிலை காயமாமப்பா. பாவம், சின்னப்பிள்ளை”.

“என்னப்பா சொல்லுறியள்..? பெட்டைக்கோ பெடியனுக்கோ…?”

“ரெண்டாவது பெடியனுக்கு.. முந்தநாளடிச்ச செல்லிலை காலிலை எலும்பு முறிஞ்சுபோச்சாம்”.

“ஐய்யோ..வெறும் பச்சை மண்ணப்பா அது. ஒரு வயசு கூட ஆகியிருக்காது. ஒம்பது மாசம் தான் வருமெண்டு நினைக்கிறன்.”

“ம்ம்… நாளைக்கு காயக்காறரை ஏத்தவாற ஐ.சி.ஆர்.சி கப்பலிலை ஏத்தப்போகினமாம். அங்கால புல்மோட்டைக்கு கொண்டுபோய்த்தான் வைத்தியம் செய்யோணுமாம்.”

“ஆரோட அனுப்பப்போகினமாம்?”

“ரீச்சரோட தான். பெட்டையை அம்மம்மாக்காறியோட விட்டுட்டு அவாவும் பெடியனும் போப்போகினமாம்”.

“ஒரேதா பெட்டையையும் கூட்டிக்கொண்டு போனாச்சுகம் தானே. பிறகு, அவளைத்தனியா இங்கை விட்டுட்டுப்போய்… ஏதாவதொண்டு நடந்தாலும்…”

“என்னெண்டப்பா… அதுவே காயக்காறரை ஏத்துறதுக்காக வாற கப்பல். அதிலை ஏத்தேலாதளவுக்கு இங்கை ரத்துமும் காயமுமாய்ச் சனம் கிடந்து உத்தரிக்குது.. சரி, ஏதோ நல்லதா நடக்கட்டும், கடவுளே…”

“குழந்தைப்பிள்ளை வைச்சிருக்கிறாக்களுக்கு நாளைக்கு பால்மா குடுப்பாங்களாம்” என்று சனம் சொன்ன கதையைக்கேட்டு அதிகாலை மூன்று மணிக்கே எழும்பி வரிசைக்குப்  போன அப்பா, இரவு பதினொருமணிக்கு வெறுங்கையோடு திரும்பிவரும்போது காவி வந்த செய்தி அது.  எங்கள் வீட்டில் குழந்தைகள் இல்லை. ஆனாலும் அப்பாவின் மருமக்கள், பெறாமக்கள் அத்தனை பேர் குடும்பங்களிலும் கைக்குழந்தைகள் கிடந்து பசியில் கீச்சிட்டுக்கொண்டிருந்தனர். அவர்களுக்காகத்தான் அப்பா சென்றிருந்தார். ஆனாலும், மதியம் போல் கிபிர் விமானங்கள் வந்து தாக்குதல் நடத்தியதில், அவ்விடமே களேபரமாகி, பின் மறுபடி வரிசைகட்டி காத்திருந்தாலும், பால்மா கிடைக்கவில்லையென வெறுங்கையோடு வீட்டுக்கு வந்திருந்தார்.

பச்சைத்தண்ணீரை (உப்புத்தண்ணீரை) கொண்டுபோய்க் கொடுத்தேன். வாங்கி மடக்மடக்கென்று குடித்தார். நாடியிலிருந்து ஒரு துளி வழிந்து நெஞ்சுப்பக்கமாக இறங்கியது.

“என்னப்பா சாப்பிட்டனியள்…?”

மறுபடி அம்மா தான் கேட்டார்.

நான் அதிலை பக்கத்திலை ரி.ஆர்.ஆர்.ஓக்காரர் பின்னேரம் வாய்ப்பன் குடுத்தவங்கள். வாங்கிப் சாப்பிட்டனான். எனக்குப் பசிக்கேல்லை. நீங்கள் படுங்கோ என்றுவிட்டு வெறும்மணலில் கையைத் தலைக்கு அணைவாகக் கொடுத்துப்படுத்தார். நான் திரும்பி தண்ணீர்ப் பாத்திரத்தைக் கொண்டுபோய் அம்மாவின் பக்கம் வைத்தேன். எனக்கு இப்போதெல்லாம் ஏனோ பேச்சுக்குறைந்திருந்தது. எதைத்தான் பேசுவது..?

“பாப்பம்… குழந்தைப்பிள்ளையள் வைச்சிருக்கிறாக்களுக்கு நாளைக்கு சிலவேளை திரும்பவும் ஏதாவது குடுப்பாங்கள் எண்டு நினைக்கிறன். எவடத்தடியிலை எண்டு கேட்டு லைனில போய் நிண்டுடோணும். நாங்களெண்டாலும் பரவாயில்லை. தண்ணியைக் குடிச்சிட்டுக்கிடக்கலாம். இந்த குஞ்சுகுருமனுகள் பாவமப்பா”.

சற்றுநேரத்தில் அப்பாவின் குறட்டைச்சத்தம் கேட்டது. உடல் அசதியின் தாக்கம் அவரைச் சுற்றிப் பாடும் நுளம்புகளைக் கூட தெரியாதளவுக்கு அவரை மாற்றியிருந்தது. மறுநாள் கண்விழித்தபோது திரும்பவும் அப்பாவைக் காணோம். இதுவொன்றும் புதிதல்ல. அரைக்கிலோ மாவுக்கோ சீனிக்கோ அல்லது கால்க் கிலோ பருப்புக்கோ இரவிரவாக, விடியவிடிய வரிசையில் நிற்பது வழமையாக மாறியிருந்ததால் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. தவிர, நேற்று அப்பாவே பால்மா விடயம் தொடர்பாக சொல்லியிருந்ததால் பெரிதாக ஒன்றும் யோசிக்கவில்லை.

அடுத்த ஒரு மணிநேரத்துக்குள் படபடவென பெருஞ்சத்தம். கிபிர் விமானங்கள் ஒருபக்கம், எறிகணைகள் இன்னொருபக்கம். எது எங்கே வெடிக்கிறதென்று தெரியாதளவுக்கு அத்தனை பக்கமும் அதிர்வுகள். மணல் மண்ணோடு குப்புறக்கிடந்து காப்பெடுத்துக்கொண்டோம். சற்று நேரத்தில் அப்பா வந்தார். வரும்போதே பதறிக்கொண்டு வந்தார்.

“இஞ்சரப்பா… அந்தக் குஞ்செல்லே செத்துப்போச்சு…”

“என்னப்பா என்ன சொல்லுறியள்..? விளக்கமாச் சொல்லுங்கோவன்..”

அப்பாவின் சட்டையைப்பிடித்து உலுக்கத்தொடங்கினா அம்மா.

“சுதா ரீச்சரும் பெடியனும்…”

“பெடியனும்..?”

“ஐயோ… ஐ.சி.ஆர்.சிக்காறரின்ரை காயக்காறரை ஏத்திக்கொண்டிருக்கிற கப்பலுக்குத்தானப்பா இப்ப கிபிர் வந்து மாத்தளனிலை அடிச்சுப்போட்டுப்போறான். அங்கை குஞ்சு குருமன் பட்டை சருகு எல்லாம் சரி… எல்லாம் சரி..”

“என்னப்பா? காயக்காறரை ஏத்துறதுக்குத்தானே கப்பல் விடுறெண்டானுகள்”.

“அதுக்குத்தான்… அந்தக்கப்பலுக்குத்தான் இப்ப வந்து கொள்ளி வைச்சட்டுப்போறானுகள். அந்தப் பச்சைக்குஞ்சும் தாயும்.”

அப்பாவுக்கு மேலே சொல்ல முடியாதபடி குரலும் கண்ணும் நடுங்கின.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button