
கட்டுரை | ஜெரா | படம் |The Island
1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை இலங்கை முழுவதும் தமிழர்களுக்கு எதிராக சிங்கள காடையர்கள் வன்முறைகளில் ஈடுபட்டனர். அரசு எவ்விதத்திலும் கட்டுப்படுத்த முயற்சிக்காத இதனை “ஜூலை கலவரம்” என அடையாளப்படுத்தினாலும், இங்கு உண்மையில் நடந்திருப்பது இனச்சுத்திகரிப்பாகும். கொழும்பு உள்ளிட்ட இலங்கையின் தலைநகர் பகுதி தொடக்கம் நாட்டின் தெற்கு பாகத்திலிருந்து அனைத்து தமிழர்களும் இலக்கு வைத்து தாக்கி படுகொலை செய்யப்பட்டனர். 3000 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலையானார்கள். அவர்தம் சொத்துகள் சிங்கள காடையர்களால் சூறையாடப்பட்டன. எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு எஞ்சிய தமிழர்களை கப்பல்களில் ஏற்றி வடக்கிற்கு (யாழ்ப்பாணத்திற்கு) அனுப்பிவைத்தனர். இதனை தானே இனச்சுத்திகரிப்பு என வரைவிலக்கணப்படுத்துகின்றனர். ஆகவே மக்களின் பேச்சு வழக்கில் அதனை “83 கலவரம்” எனவும், ஊடக எழுத்து வழக்கில் “ஜூலை கலவரம்” எனவும் குறிப்பிட்டாலும் இது தமிழகள் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு என அடையாளப்படுத்தப்படவேண்டியது.
இல்ல. நான் அப்ப மேல்மாடியில் நின்றேன். கீழ ஒரே சத்தமா இருந்துது. அவசரமா ஓடிவந்து எட்டிப் பார்த்தேன். ஆனந்தா கல்லூரி பெடியங்களும், கடையார்கள் மாதிரத் தெரிஞ்ச சிலபேரும் பெரிசா கத்திக் கொண்டு ரோட்டுல வாறாங்கள். கண்ணில பட்ட கடைகள், கண்ணாடி அலுமாரிகள், கதவுகள், யன்னல்கள் எல்லாத்தையும் அடிச்சு நொறுக்கிறார்கள். அப்ப ஒரு தமிழ் ஆள் கடை வாசலை எட்டிப் பார்த்து ஏதோ கதைச்சவர். முதல்ல அவங்கள் அவரோட ஏதோ கதச்சவங்கள். எனக்கு ரெண்டு தரப்பும் வாக்குவாதப்படுற மாதிரி தெரிஞ்சது. ஒரு கட்டத்தில பின்னால நீண்ட ஒருத்தன் அவரின்ற தலையில கம்பியொண்டால ஓங்கி அடிச்சான். அவர் அதைத் தடுக்க கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். கடைசில ஒருத்தன் கையில வச்சிருந்த கத்தியால அவரின்ற கழுத்தில ஓங்கி வெட்டினான்.
மறக்கமுடியாத நினைவு
மரவள்ளித் தோட்டம் ஒன்றிற்குள்தான் அவரைக் கண்டுபிடித்தேன். முகம் முழுதும் தோல்விகளினாலும், வலிகளினாலும் ரேகைகள் ஆழப்பதிந்திருந்தன. கண்கள் எப்போதோ ஒளியிழந்திருந்தன. இரண்டு பரப்பு அளவிலான காணிகளுள் நடப்பட்டிருந்த வாழைக்கும், மரவள்ளிக்கும் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார் அவர்.
“முப்பது வருஷம் தம்பி, இதுதான் என்ர தொழில். நாங்க 83ஆம் ஆண்டு கலவரத்தில அடிபட்டு யாழ்ப்பாணம் வந்திற்றம். வந்து ஆறு மாசத்தால அவர் “ஹார்ட் அட்டாக்” வந்து மோசம் போயிற்றார். அன்றையில இருந்து 6 பிள்ளையளையும் இப்படி வேலை செய்துதான் வளர்த்தேன். இப்ப பிள்ளைகள் எல்லாரும் நல்லாயிருக்கினம். வீட்டில இருந்தா வருத்தம், யோசனை வருமெண்டு இந்தத் தொழில விடாம செய்துகொண்டிருக்கிறேன். என்ர தேவைகளுக்கு இதில் வர்ற வருமானம் காணக்கூடியதாயிருக்கு. இந்த வருஷத்தோட இதையும் விடலாம் எண்டு நினைக்கிறேன்.”
என்று இந்த அறிமுகக் குறிப்பை அவர் தந்து முடிக்கின்றார். அவரிலும் 83இன் அனுபவங்கள் இருக்கின்றன. அதையும் அவரே சொன்னார்.
“நாங்க இரும்புக் கடை வச்சிருந்தனாங்கள். என்ர கணவர் இரும்புச் சாமான்கள் செய்யிற தொழிற்சாலையும், கொழும்பில இருந்து கொண்டு வர்ற இரும்பு சாமான்களை வேற இடங்களுக்கு வாகனங்கள்ல கொண்டுபோய் விற்க குடுக்கிற வேலையையும் செய்தவர். சிங்கள ஆக்கள்தான் எங்கட கடையில வேலை செய்தவை.
கலவரம் தொடங்கின பிறகு எங்கட கடையில வேலை செய்த ஆக்கள்தான் முதல்ல கொள்ளையடிக்க வந்தவையள். கம்பியள், கொட்டினுகள், நத்தியோட கொஞ்சபேர் எங்கட கடைக்குள்ள உள்ளடட்டிணம். எங்கட வீடு கடையோடதானிருந்தது. கடையார்கள் வந்ததும் பிள்ளையய தூக்கிக் கொண்டு அங்க இருந்து பின் பக்கத்தால ஓடினம். இவருக்கு தெரிஞ்ச சிங்களவர் ஒருத்தர் 3 நாள் ஒளிச்சி வச்சிருந்தவர். பிறகு கப்பலில ஏத்திவிட்டார். கடையப் பாக்காமல் கூட வந்தம். கடையில அவ்வள சாமான்களும், 18 லட்சம் ரூபா காசும் இருந்தது. (இன்றைய பெறுமதி அவை கோடியைத் தாண்டும்)
வந்து ஆறுமாதத்துக்குள்ள அந்தக் கவலையிலேயே அவர் செத்துப்போனார். அதுக்கப்பிறகு 30 வருசமா நான் பட்ட கஸ்டங்கள் கொஞ்ச நஞ்சமில்லை தம்பி…”
விழிகளில் கிளம்பிய கண்ணீர், ஒரு பெண் தமிழ் சமூகத்தில் தனித்து விடப்படுகையில் எதிர் கொள்ளும் முழுப்பிரச்சினையையும் உணர்த்திமுடித்தது.
கோயில் கோபுரத்தில் சிங்கக்கொடி
அவர் மலையகத் தமிழர். 1983ஆம் ஆண்டு கலவரத்தில் பாதிக்கப்பட்டு கிளிநொச்சி பாரதிபுரத்தில் தற்போது வசித்து வருகின்றார். கூலித் தொழிலாளியான இவர், கூலி வேலைக்கும், வீதி புனரமைப்பு வேலைக்கும் போவதாகக் கூறினார்.
“அந்தப் பகுதியில் ரெண்டு தமிழ் குடும்பம்தான் இருந்தீச்சு. மிச்ச எல்லாருமே சிங்களவங்க. நாங்களும், எங்களோட உறவுக்கார ஒரு குடும்பமும்தான். 83 கலவரத்துக்குப் பயந்து எங்கயாவது போயிரலாம்னு நெனைச்சோம். அதே மாதிரி ரெண்டு குடும்பமும் வெளியேறி போயிட்டாம். நாங்க போன பிறகு வீடுகள, வீடில இருந்த எல்லாதையும் சிங்களவங்க எரிச்சிட்டாங்க. கோழி, ஆடுன்னு கண்ணுல பட்ட எல்லாத்தையும் கொள்ளையடிச்சிட்டாங்க.
மாத்தள முத்துமாரியம்மன் கோவிலைக் கூட அவங்க விட்டுவைக்கல. அந்தக் கோவில் கோபுரத்தில ஏறி சிங்கள கொடிய பறக்க விட்டாங்க. கோவில், திருமண மண்டபம், ஐயர் வீடு எல்லாத்தையுமே நெருப்பு வச்சி எரிச்சிட்டாங்க. எரிஞ்சி கொண்டிருந்தத பார்த்துக்கொண்டே ஓடினம். எங்களுக்கு இருந்து 5 ஆமதுருமார் வெளிய வந்தாங்க. கலவரம் நடக்கும்போது அங்க, 28ஆம் திகதி ஒரு சிங்கள பொடியன யாரோ சுட்டுக்கொன்னுட்டங்க.
அந்தப் பொடியனையும் தமிழர்களே சுட்டுக் கொன்னுட்டாங்கன்னு சொல்லி வதந்தி பரவிச்சு. அதோட எங்கயோ இருந்து 3 லொரிகளில சிங்களவங்க வந்தாங்க. வீடுகளெல்லாத்தையும் அடிச்சு உடைச்சாங்க. என்னோட தம்பி வீட்டையும் எரிச்சிட்டாங்க. அதைக் கேட்டு ஓடி வந்த மற்ற தம்பியை வெட்டி வயலில போட்டிட்டாங்க. அவன ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக விடல. தடுத்து நிறுத்திட்டாங்க. வீட்டையும் கடைகளையும் அடிச்சி நொறுக்கீட்டாங்க. அம்மாவோட நகையெல்லாத்தையும் பறிச்சிட்டாங்க. மூக்குத்திய கழட்ட தொடங்கினாங்க. அது கழண்டு போக விடல, மூக்க அறுத்து எடுத்திட்டு போயிட்டாங்க. அம்மா கதறினாங்க.
அதுக்கு பிறகு நாங்க கிளிநொச்சிக்கு வந்திட்டாம்.
இங்க ஆரம்ப காலங்களில் கஷ்டமா இருந்தாலும் பிறகு ஏதாவது தொழில் செய்து வாழப்பழகிட்டாம். இந்த இழப்புகளோட சண்டையாலையும் நிறைய இழப்புகளை கண்டிட்டம். இது எதுக்குமே நட்டஈடு தரல.”
மறக்கக் கூடாத அனுபவங்கள்
ஈழத்தமிழர்கள் விரைவாக அழிக்கப்பட்டு வருவது போல, மறக்கப்பட்டும் வருகின்றோம். அண்மையில் நடந்தவைகூட நினைவுகளில் இல்லை. அழிக்கப்பட்டுவரும் இனமொன்றுக்கு இந்த மறதியும் கொடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். 83 கலவரத்தில் பாதிப்படைந்தவர்களைப் பற்றிய தேடல் தொடங்கி கிட்டத்தட்ட 3 வாரங்கள். இப்போதும் முழுமையான நபர்களைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. பலர் காலமாகிவிட்டனர். அதிர்ஷ்டவசமாகக் கண்டுபிடிக்கப்பட்டவர்களும் கதைகளற்று இருந்தனர். கலவரப் பொழுதுகள் நினைவில்லை என்று நழுவிவிட்டனர்.
இன்னும் சிலரோ முகத்திரையிட்டு பேசினர். கலவரத்தைக் காரணம் காட்டி பலர் பகையற்ற நாடுகளில் வாழ்கின்றனர் எனக் கொதித்தனர். அப்படியானவர்களின் இரண்டாம், மூன்றாம் தலைமுறையினர், இந்தக் கலவரத்தைப் பற்றிய அறிமுகமே கிடைக்காதிருந்தனர். ஆயினும் முயற்சியின் விளைவாக சில வலிஅனுபவங்கள் கிடைத்தன.
எனவே கலவரங்கள் பற்றிய ஓரளவான பதிவுகள் சாட்சியங்களாக வந்திருப்பினும், 83 கலவரங்கள் குறித்த பதிவுகள் வெளிவந்தமைக்கான சான்றுகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. அதனைப் பட்டுணர்ந்தவர்கள் பதிவுசெய்தல் வரலாற்று கட்டாயம். சிங்கங்களின் வரலாறு சிங்கங்களால்தான் பதிவுசெய்யப்படவேண்டுமே தவிர, வேட்டைக்காரர்களால் அல்ல. ஆனால் ஈழத்தமிழர்களின் விதியும், வரலாறும் வேட்டைக்காரரால் தீர்மானிக்கப்படுவது கொடுமையானதுதான்.



