Featuredமனிதவுரிமைகள்

நீதிக்காகக் காத்திருக்கும் கொலை

கட்டுரை | பார்தீபன் சண்முகநாதன் | படங்கள் | த.பிரதீபன்

“நீதி நேர்மை இல்லாம பச்சைப் பாலகனாக இருந்த பிள்ளையை, துடிக்கத் துடிக்கக் கொன்று விட்டார்களே ஐயா. இதற்கு ஒரு நீதி இந்த அரசாங்கமும் வழங்காது. இந்தக் கஷ்டப்படுபவர்களுக்கு ஒரு நீதியும் இல்லையோ? இந்த ஏழை பெற்ற பிள்ளைக்கு ஒரு நீதி இல்லையா ஐயா? என் பிள்ளைக்கு வந்தது இரத்தமில்லையா? என் வீட்டில் நடந்தது கொலை இல்லையா ஐயா? ஏன் பாதுகாக்கிறார்கள்? என் பிள்ளையைச் சுட்டவனை எதற்காக அரசாங்கம் பாதுகாக்கிறது? என் குடும்பமே அவரை நம்பித் தானே ஐயா இருந்தது” இவை, பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான 17 வயது சிறுவன் அல்பினோ அருள் பயாஸின் தாயாரான அல்பினோ ஜானகி கண்ணீர் மல்க எழுப்பிய கேள்விகள்.

பெப்ரவரி 10 ஆம் திகதி அல்லைப்பிட்டியில் நிறுத்தாமல் சென்ற வாகனத்தை நோக்கி ஊர்காவற்துறை பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவனான அருள் பயாஸ் உயிரிழந்தார். சிறுவனின் மரணம் குறித்து முன்னுக்குப் பின் முரணான பல தகவல்கள் வெளியாகிய நிலையில், விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு சந்தேகநபர்களான பொலிஸார் தண்டிக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாண பேருந்து நிலையத்தில் போராட்டம் ஒன்றும் நடத்தப்பட்டது. எனினும் சம்பவம் நடந்து நான்கு வாரங்கள் கடந்துள்ளன. இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. விசாரணைகள் கூட முன்னெடுக்கப்படவில்லை என்பது பாதிப்பபட்டவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு.

ஆரம்பம் முதலே பொய்யுரைக்கும் பொலிஸார்!

பெப்ரவரி 10 ஆம் திகதி பொலிஸார் வாகனத்தை நோக்கி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வேனில் பயணித்த 19 வயது இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு பெப்ரவரி 11ஆம் திகதி காலை 4 மணிக்கு வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. (படம் 01)  “2026.02.10 அன்று அதிகாலை ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான வேன் ஒன்றை நிறுத்துமாறு பொலிசார் சமிக்ஞை காட்டியபோது, அந்த வேன் நிறுத்தப்படாமல் சென்றதால் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறித்த வேனில் பயணித்த 19 வயதுடைய இளைஞர் காயமடைந்து யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.” என பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டிருந்தது. எனினும், உயிரிழந்த சித்தங்கேணியைச் சேர்ந்த அல்பினோ அயூப்ராஜ் அருள் பயாஸ், பிறப்புச் சான்றிதழ் (படம் 03) மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு அமைய, அவர் நவம்பர் 9, 2008 அன்று பிறந்துள்ளார் என்பது உறுதியானது. இதற்கமைய பொலிஸார் உயிரிழந்தவர் ஒரு இளைஞன் காட்ட முயற்சித்துள்ளனர் என்பது அம்பலமானது.

படம் 01

இது ஒருபுறமிருக்க, பயாஸின் வயதை உறுதிப்படுத்தும் உத்தியோகபூர்வ ஆவணங்கள் இருந்தபோதிலும், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இறந்த நபர் 19 வயது இளைஞர் என பெப்ரவரி 12ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு.கே. வூட்லர் தெரிவித்திருந்தார். இதுவும் பொலிஸார் உண்மையை மறைக்கவே முயல்கின்றனர் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியது.

உயிரிழந்த சந்தேகநபர் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது ஐஸ் மற்றும் ஹெரோயின் பயன்படுத்தியிருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எவ்வாறெனினும், சட்ட வைத்திய அதிகாரி ருத்ரபசுபதி மயோதரன், நீதிபதி எம்.என்.என். ஹுசைனுக்கு அனுப்பிய பிரேத பரிசோதனை அறிக்கையின் எந்தவொரு இடத்திலும், துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவரின் உடலில் போதைப்பொருள் இருந்ததாக குறிப்பிட்டிருக்கவில்லை. ஆகவே பொலிஸாரின் மரண பரிசோதனை அறிக்கை சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

படம் 02

அருள் பயாஸின் மரணத்திற்கான காரணம், “துப்பாக்கியிலிருந்து வெளியேறிய தோட்டாவால் மூளை சிதைந்தமை” (படம் 02) என சட்ட வைத்திய அதிகாரி ருத்ரபசுபதி மயோதரனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறெனின் பொலிஸார் வாகனத்தை நிறுத்தத்தான் துப்பாக்கிச் சூடு நடத்தினார்களா? என்ற கேள்வி எழுகிறது.

படம் 03

பொலிஸாரின் அராஜகம்

பொலிசார் செய்த படுகொலையை நியாயப்படுத்த பொலிஸார் உள்ளிட்ட ஏனைய தரப்பினர் பல்வேறு வழிகளில் செயற்பட்டு வருவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பேராசிரியர் திருவரங்கன் மகேந்திரன் தெரிவிக்கித்திருந்தார். யாழ்ப்பாணத்தில் கடந்த 22ஆம் திகதி சிறுவனின் படுகொலைக்கு நீதி கோரி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது அவர் இந்த விடயத்தை வலியுறுத்தினார்.

“வாகனம் ஓட்டிச் சென்றபோது அதனை நிறுத்தவில்லை என்ற காரணத்தை வைத்துக்கொண்டு பொலிஸார் அவரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். இன்று அந்தக் கொலையை பொலிஸாரும் ஏனைய தரப்பினரும் பல்வேறு வழிகளில் நியாயப்படுத்தி வருகின்றனர். இது பொலிஸாரின் அராஜகச் செயலாகும். இது பொலிசாரின் வன்முறை முகத்தை மீண்டும் ஒருமுறை எமக்குக் காட்டுகிறது. நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய பொலிசாரே, அந்த அதிகாரத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஒரு வறிய குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனைக் கொலை செய்திருக்கிறார்கள். இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தாங்கள் நல்லாட்சியை முன்னெடுப்பதாகவும், சிறப்பாகச் செயல்படுவதாகவும் கூறிக்கொண்டு இந்த கொலைக்கு தொடர்பில் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதனை ஒரு பாராமுகமான போக்காகவே நாம் காண்கிறோம்.

தமிழர் தாயகத்தின் தாய்மார் ‘கண்ணீருடன்’

தமிழ்த் தேசத்தின் ஒவ்வொரு தாயும் சித்தங்கேணி அல்பினோ அயூப்ராஜ் அருள் பயாஸின் தாயைப் போலவே கண்ணீர் வடிப்பதாக, இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட ஈழத்தமிழர் மகளிர் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்படுக்கான அமைப்பின் பணிப்பாளர்   வாசுகி சுதாகரன் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.

“மனித உரிமைகளும் அடிப்படை உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன. இந்தச் சிறுவனுக்கு 17 வயது. இந்த சிறுவனைப் படுகொலை செய்தது மட்டுமன்றி, அதற்காகப் பல்வேறு காரணங்களையும் நியாயங்களையும் முன்வைக்க அரச இயந்திரங்கள் முயல்கின்றன. உண்மையில் இந்த 17 வயதுச் சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தால், அதற்குப் பொறுப்பான அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த குடும்பத்தின் வலியைப் பார்க்கும்போது, தமிழ்த் தேசத்தின் ஒவ்வொரு தாயும் இதேபோன்று கண்ணீர் வடிக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் இவ்வாறான அநீதிகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. போதைப்பொருள் பாவனையைப் பரப்பிவிட்டு, பின்னர் அது பற்றிப் பல்வேறு காரணங்களைக் கூறி மௌனமாக இருக்கும் அரச இயந்திரங்கள், பிள்ளைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அவர்களைச் சுட்டுக் கொலை செய்கின்றன.”

சிறுவனின் படுகொலை நிகழ்ந்து நான்கு வாரங்கள் கடந்தும் கொலையாளிகள் கைது செய்யப்படாதது குறித்துக் கடுமையாக கேள்வியெழுப்பிய அவர், அனைத்துக் கொலையாளிகளுக்கும் தண்டனை வழங்கப்பட்டு வடக்கு, கிழக்கில் வாழும் தமிழினப் பிள்ளைகள், தமிழினப் பெண்கள் மற்றும் தமிழினக் குடும்பங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

“அரசாங்கத்தில், உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் அனைவரும் இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஏனென்றால் இந்த பிள்ளை இறந்து நான்கு கிழமைகள் முடிவுற்றுவிட்டது. ஆனால் இந்தச் சிறுவனுக்கான நீதியோ அல்லது அதைக் கொன்றவரை இதுவரை கைது செய்த நிகழ்வுகளோ எதுவுமே நடைபெறவில்லை என்பது மிக மனவருத்தத்திற்குரியது. இந்தப் பிள்ளை போன்று வடக்கு கிழக்கு தேசமெங்கும் இருக்கும் எங்களுடைய தமிழினப் பிள்ளைகளும், தமிழினப் பெண்களும், தமிழினச் சிறுவர்களும், தமிழினக் குடும்பங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்” – என்றார் அவர்.

துப்பாக்கிச் சூடும் நீதியும்

இலங்கையில் வீதிச் சோதனையில் ஈடுபடும் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவல்ல, பல நூறு சம்பவங்கள் இதற்கு முன்னர் இடம்பெற்றுள்ளன. எவ்வாறெனினும் துப்பாக்கிச் சூட்டினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட்ட – நீதிக்கான சாதகத் தன்மையை வெளிப்படுத்திய – நட்டஈடு வழங்கப்பட்ட சந்தர்ப்பங்களும் பதிவாகியுள்ளன.

கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் திகதி, குருநாகல் நாரம்மல பிரதேசத்தில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்றதாகக் கூறப்படும் லொறி மீது பொலிஸ் அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டனர். அப்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் உயிரிழந்தவரின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று முதற்கட்டமாக ஒரு மில்லியன் ரூபாய் நட்டஈட்டுக்கான காசோலையை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார். உயிரிழந்தவரின் மனைவி காமனி ரூபிகா பிரியங்கனி, தனது கணவரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்தார். இதில் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரசினால் 200 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றது.

இந்த அடிப்படையில் பார்க்கும்போது குறித்த சிறுவனுக்கு நீதியைப் பெற்றுக்கொள்வதற்காக சாதகமான சமிக்ஞைகள் தென்படுகின்றன. இவ்வாறான வழக்கு விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு வழக்குத் தாக்கல் செய்யப்ப வேண்டுமென்ற கோரிக்கை தற்போது தமிழர் தாயகத்தில் வலுப்பெற்று வருகிறது.

எப்போதெல்லாம் பொலிஸார் துப்பாக்கியை பயன்படுத்தலாம்?

இலங்கையில் பொலிஸார் துப்பாக்கியை பயன்படுத்துவது சட்டத்தால் கட்டுப்படுத்தப்பட்ட மிக முக்கியமான அதிகாரமாகும். இது பெரும்பாலும் குற்றவியல் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், அரசியலமைப்பு, பொலிஸ் திணைக்களம் மற்றும் பொலிஸ் மாஅதிபரின் வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவுகளின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தண்டனைச் (திருத்தச்) சட்டத்தின் ஊடாக தற்பாதுகாப்பிற்காக பொலிஸார் துப்பாக்கியை பயன்படுத்தலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது – உயிருக்கு அல்லது கடுமையான காயத்திற்குள்ளாகக் கூடிய ஆபத்து காணப்பட்டால் – அந்த ஆபத்தைத் தடுக்க தேவையான அளவு வலிமையை (துப்பாக்கியை) பயன்படுத்தலாம் எனக் குறிப்பிடப்படுகிறது. ஆபத்து கட்டத்தை தாண்டிய பின்னர் துப்பாக்கியை பயன்படுத்துவது சட்டவிரோதமாகும்.
1979 ஆம் ஆண்டின் குற்றவியல் நடைமுறைச் சட்டம் இல. 15 கீழ்: ஒருவர் கடுமையான குற்றச்சாட்டில் கைது செய்யப்படும்போது எதிர்ப்பு தெரிவித்து தப்பிச் செல்ல முயன்றால், தேவையான அளவு வலிமையை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது, ஆனால் உயிரை பறிக்கும் வலிமை, இறுதி வழிமுறையாக மாத்திரமே இருக்க வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைவிட சிறிய குற்றங்களுக்காக தப்பிச் செல்லும் நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவது நியாயமல்ல எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கலவரம் அல்லது ஆயுத ரீதியான தாக்குதல் ஏற்பட்டால் முதலில் எச்சரிக்கை வழங்கப்பட வேண்டும். கண்ணீர் புகை, நீர்த்தாரைப் பிரயோகம் போன்ற ஆபத்து குறைந்த முறைகள் பயன்படுத்தப்பட வேண்டும். உயிருக்கு நேரடி ஆபத்து ஏற்பட்டால் மாத்திரமே துப்பாக்கிப் பயன்படுத்தப்படலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மீது ஆயுதத் தாக்குதல் நடத்தப்படும்போது, உடனடி ஆபத்தை தடுக்க துப்பாக்கி பயன்படுத்தலாம்.
இது மூன்றாம் நபரின் உயிர் பாதுகாப்பு என்ற அடிப்படையில் நியாயப்படுத்தப்படுகிறது.
அதிக ஆபத்தான சூழ்நிலைகளில் – ஆயுதம் ஏந்திய தாக்குதல் நடத்தப்பட்டால் – உயிருக்கு உடனடி ஆபத்து இருந்தால் துப்பாக்கி பயன்படுத்தலாம். ஆனால் அதற்கான அவசியம் ஏற்பட வேண்டுமென அறிவுறுப்படுகிறது.
பொலிஸ் என்பது அமைதியைக் கட்டுப்படுத்தும் படை, ஆயுதப் படை அல்ல. அவர்கள் ஒரு தடியடியைத் தவிர வேறு எதையும் எடுத்துச் செல்வது சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே, ஒரு பொலிஸ் அதிகாரி உங்கள் மீது துப்பாக்கியை நீட்டினால், நீங்கள் அவர் மீது வழக்குத் தொடரலாம். நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க தேவைப்பட்டால் துப்பாக்கிகளைப் பயன்படுத்த ஒரு பொலிஸ் அதிகாரிக்கு அதிகாரம் உண்டு. மார்ச் 28, 2010 திகதியிடப்பட்ட ஐஜிபி சுற்றறிக்கை 843 (IGP Circular 843 dated 28th March 2010) இற்கு அமைய பொலிஸ் அதிகாரிகளுக்கு துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் அது தடைசெய்யப்படவில்லை.
இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சட்ட ஏற்பாடுகள் மற்றும் அறிவுறுத்தல்கள் பொலிஸார் துப்பாக்கியை பயன்படுத்துவதை தடுக்கவில்லை மாறாக ஏதோ ஒரு வகையில் பயன்படுத்தலாம் என்ற அனுமதியை வழங்கியுள்ளது. ஆகவேதான் பொலிஸார் இந்த கட்டுப்பாடுகளை தமக்கு சாதமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.

சர்வதேச தீர்மானம்

1990ஆம் ஆண்டு நடைபெற்ற குற்றத் தடுப்பு மற்றும் குற்றவாளிகளை நடத்துதல் குறித்த எட்டாவது ஐக்கிய நாடுகள் மாநாட்டின்போது, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் துப்பாக்கி மற்றும் வலிமையை பயன்படுத்துவதற்கான அடிப்படை கொள்கைகள் குறித்த கோட்பாடு நிறைவேற்றப்பட்டது. மனித உயிரையும் அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பதே வலிமை மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான முதன்மை நோக்கமாக இருக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையின் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் துப்பாக்கி மற்றும் படையை பயன்படுத்துவதற்கான அடிப்படை கொள்கைகள் குறித்த கோட்பாடு குறிப்பிடுகிறது.

அதிகாரிகள் தங்களின் கடமையைச் செய்வதில் சட்டம் மற்றும் மனித உரிமைகளை மதிக்க வேண்டுமென குறிப்பிடப்படுகிறது. வலிமை மற்றும் ஆயுதம் இறுதி வழிமுறையாக மாத்திரமே பயன்படுத்தப்பட வேண்டும். குற்றத்தை தடுப்பது, கைது செய்வது அல்லது ஆபத்தைக் குறைப்பதே நோக்கமாக இருக்க வேண்டும். எதிர்கொள்ளும் ஆபத்திற்கு ஏற்பவே வலிமை பயன்படுத்தப்பட வேண்டும். அதிகவலிமை அல்லது உயிருக்கு நேரடி ஆபத்து உருவாக்கும் செயல்கள் தவிர்க்கப்பட வேண்டு குறித்த கோட்பாடு வலியுறுத்துகிறது. வலிமையை, ஏனைய அனைத்து மற்றும் குறைந்த ஆபத்தான நடவடிக்கைகள் செயல்படாதபோது மாத்திரமே பயன்படுத்த முடியும். சாத்தியமான வரை, அதிகாரிகள் முன் எச்சரிக்கை கொடுக்க வேண்டுமெனவும் வலியுறுப்பப்படுகிறது. “நிறுத்துங்கள் இல்லையெனில் சுடுவோம்” போன்ற தெளிவான எச்சரிக்கை வழங்கப்பட வேண்டுமென, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் துப்பாக்கி மற்றும் வலிமையை பயன்படுத்துவதற்கான அடிப்படை கொள்கைகள் குறித்த கோட்பாடு அறிவுறுத்துகிறது.

உண்மையில் சர்வதேச கொள்கைகளும் அவசியம் ஏற்பட்டால் துப்பாக்கியைப் பயன்படுத்துங்கள் என பொலிஸாரை ஊக்கப்படுகிறது. ஆகவே பொலிஸார் அவசியம் ஏற்படாவிட்டாலும் துப்பாக்கிய பயன்படுத்திவிட்டு, அவசியம் ஏற்பட்டதாக அறிக்கை சமர்பித்துவிட்டு அடுத்த துப்பாக்கிச் சூட்டுக்கு தயாராகின்றார்கள்.

‘This is your Police’ (இது உங்கள் பொலிஸ்) என இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் இலங்கை பொலிஸ் எங்கள் பொலிஸ் தானா? என்ற கேள்வியை பயாஸின் மரணத்தை முன்னிறுத்தி எழுப்ப வேண்டும். நிறுத்தாமல் சென்ற வாகனத்தை நோக்கிப் பாய்ந்த தோட்டா பயாஸின் மூளையை எப்படி பதம் பார்த்தது? துப்பாக்கிச் சூட்டை நடத்திய பொலிஸ் அதிகாரிக்கே வெளிச்சம்.

மேலதிக இணைப்பு (13.03.2026)

17 வயது சிறுவனான அல்பினோ அயூப்ராஜ் அருள் பயாஸ் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாக ஊர்காவல்துறை பொலிஸார் நடத்தும் விசாரணையில் திருப்தி அடையாத நீதிமன்றம், விசாரணையை குற்றப் புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர் சார்பில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்தில் கொண்ட பின்னர், தற்போது நடைபெற்று வரும் விசாரணைகள் குறித்து தனது ஆழ்ந்த அதிருப்தியை வெளிப்படுத்திய நீதவான் நளினி சுபாஸ்கரன், விசாரணையை குற்றப் புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டதாக, பெப்ரவரி 10 ஆம் திகதி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சித்தங்கேணியைச் சேர்ந்த அல்பினோ அயூப்ராஜ் அருள் பயாஸ் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நேற்று  (மார்ச் 12) தெரிவித்தார்.

சிறுவனின் கொலைக்கு காரணமான பொலிஸ் அதிகாரிகளைக் கண்டித்தும், அவர்களை கைது செய்யக் கோரியும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குடிமை சமூக ஆர்வலர்கள் மார்ச் 10, 2026 அன்று அல்லைப்பிட்டி பொலிஸ் நிலையம் முன் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக போராட்டம் நடத்தினர்.

கொலை நடந்து ஒரு மாதமாகியும், கொலை செய்த அதிகாரிகளின் பெயர்கள் ‘பி’ அறிக்கையில் குறிப்பிடப்படாததும், துப்பாக்கித் தோட்டாவைக் கூட பொலிஸார் இதுவரை மீட்காமையும், விசாரணை எவ்வளவு மோசமாக நடைபெறுகிறது என்பதை எடுத்துக்காட்டுவதாக, ஆறு பேர் கொண்ட சட்டக் குழு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பபதிகாரி, பெப்ரவரி 10, 2026 அன்று நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகவும், அதில் பொலிஸ் கான்ஸ்டபிள் மாரசிங்க மற்றும் சல்மானின் துப்பாக்கிகளிலிருந்து துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், எனினும், இரு சந்தேகநபர்களை கைது செய்யாமை குறித்து பாதிக்கப்பட்டவரின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியதாகவும் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் குறிப்பிட்டார்.

தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்ததாகக் கூறிய சட்டத்தரணி, துப்பாக்கிச் சூடு தற்காப்புக்காக நடத்தப்பட்டிருந்தாலும், முதலில் அவர்களைக் கைது செய்து அவர்களின் விளக்கத்தின் அடிப்படையிலேயே பிணை வழங்க முடியுமென நீதிமன்றில் சுட்டிக்காட்டியதாக குறிப்பிடுகின்றார்.

அதன்படி, அருள் பயாஸ் கொலையில் சம்பந்தப்பட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகளையும் சந்தேகநபர்களாகக் குறிப்பிட்டு கைது செய்யுமாறு பாதிக்கப்பட்டவரின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிபதி, குறித்த தீர்மானத்தை அறிவித்ததாக சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் குறிப்பிட்டார்.

குறித்த வழக்கு விசாரணையின்போது பதினைந்து முதல் இருபது பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பார்தீபன் சண்முகநாதன்
சுயாதீன ஊடகவியலாளர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button