மக்கள் குரல்

தையிட்டி – போராடும் மக்கள்

கட்டுரை | North East Narrative
படம் | Sanjula Pietersz

“நான் இப்ப பதினெட்டாவது வீட்டில இருக்கிறன் தம்பி. 33 வயசில இந்த இடத்தவிட்டு
இடம்பெயர்ந்தம். இப்ப 78 வயசாகுது. இன்னமும் காணிகள விடுவிக்கேல்ல. நான்
பொம்புளயா இருந்தும் கஸ்ரப்பட்டுக் கட்டின வீடு வெறும் மண்மேடாய் கிடக்கு. எனக்கு
காசும் வேண்டாம். வேற காணியும் வேணாம். என்ர காணிய தாங்கோ” எனக் குழுமி
நின்று போர்க்குரல் எழுப்பிக்கொண்டிருந்த தையிட்டி காணி விடுவிப்புக்கோரிய
போராட்டக்காரர்கள் மத்தியில் நின்று கெமராக்கள் முன்பாக, ஒரு குழந்தைபோல
குமுறிக்கொண்டிருந்தார் கணபதிப்பிள்ளை ஓமேஷ்வரி என்கிற முதிய தாய். அந்தத்
தாயின் கோரிக்கையைத்தான் அங்கு போராட்டத்தில் கலந்துகொள்கின்ற அனைவரினது
கோரிக்கையாகவும் இருக்கிறது.

பௌத்த மக்களின் புனித வழிபாட்டு தினமான பௌர்ணமி நாளில், பௌத்த மதத்தின்
பெயரால் இராணுவமும் ஒரு பௌத்த பிக்குவும் இணைந்து அபகரித்துக்கொண்ட தம்
காணியை மீளத் தரக்கோரி போராட்டம் நடத்துபர்களின் கோரிக்கைதான் இது.
அந்தக்கூட்டுக்கோரிக்கையின் பிரதிநிதிதான் கணபதிப்பிள்ளை ஓமேஷ்வரி.
யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்கு பகுதியில், காங்கேசன்துறை சிறுநகரில் இருக்கிறது தையூர்
என அறியப்பட்ட தையிட்டி கிராமம். விவசாயத்தின் வாசனை வீசும் செம்மண்
நிலத்தைக்கொண்ட தையிட்டிக் கிராத்தைச் சேர்ந்த பலர் தற்போது புலம்பெயர்ந்துவிட்டனர்.
நாட்டில் இடம்பெற்ற போர், அதன் விளைவாக நீண்டகாலமாக அவர்களது காணிகள்
வழங்கப்படாமை, அச்சுறுத்தல்கள் போன்றன காரணமாக இந்தப் புலப்பெயர்வு
ஏற்பட்டிருக்கின்றது. இவற்றையும் மீறி தம் நிலத்திற்காக இன்றும்
போராடிக்கொண்டிருப்பவர்களில் ஒருவர்தான் தையிட்டியைச் சேர்ந்த கனகசபை மதியழகன்.
மதியழகனுக்கு தையிட்டிக்கு எப்படி பௌத்த விகாரை வந்தது என்கிற வரலாறு ஓரளவுக்குத்
தெரிந்திருக்கிறது. அங்கு பௌத்த விகாரை உருவாகிய கதையை பின்வருமாறு விளக்குகிறார்
அவர்.
”இந்த பௌத்த விகாரை புராதன விகாரையல்ல. தையிட்டியில் வசித்த நபர் ஒருவர்,
காங்கேசன்துறையில் வணிக நிலையமொன்றை நடத்தி வந்த உரிமையாளரிடம் தனது காணியை
ஈடு வைத்துள்ளார். அக்காணியை கடையின் உரிமையாளர் அந்தக் கடையில் வேலைசெய்த
முகாமையாளருக்கு அறுதி உறுதியாக்கி வழங்கியிருக்கிறார். அந்த முகாமையாளர்
களுத்துறையில் இருந்த பௌத்த விகாரைக்கு நன்கொடையளித்திருக்கிறார். அதன்படி 1946ஆம்
ஆண்டளவில் இதற்குரிய ஆவணம் எழுதப்பட்டிருக்கிறது. 1945ஆம் ஆண்டில் அந்தக் காணியில்
சிறியதொரு தங்குமிடத்தை அமைத்து, அங்கு பௌத்த பிக்கு ஒருவர் குடியேறியிருக்கிறார். அங்கு
தங்கியிருந்த பௌத்த பிக்கு அயலிலிருந்த தமிழ் மாணவர்களுக்கு சிங்களம் கற்பித்திருக்கிறார்.
1956ஆம் ஆண்டில் இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது நடத்திய வன்முறைகள் காரணமாக,

வடக்கில் தொழில் நிமித்தமும், கல்வி நிமித்தமும் தங்கியிருந்த சிங்களவர்கள் இங்கிருந்து
வெளியேறினர். இந்தப் பின்னணியில் தையிட்டியில் தங்கியிருந்த பௌத்த பிக்குவும் அங்கிருந்து
வெளியேறினார். அதற்குப் பின்னரும்கூட குறித்த காணியில் அந்தக் கட்டடம் இருந்ததாக
மூத்தவர்கள் சொன்னார்கள். ஆனால் எனக்கு விபரம் தெரிந்து, நான் பாடசாலைக்கு சென்ற
காலத்தில்கூட அவ்விடத்தில் பௌத்த வழிபாட்டிடம் ஒன்று இருந்தாக கேள்விப்பட்டிருக்கிறேனே
தவிர, கண்டதில்லை. அக்காலத்தில் அது அழிந்துவிட்டது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது
1985 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அங்கு எதுவுமே இருக்கவில்லை. அது புத்தகோயிருக்குரிய காணி
என்றே சொல்வார்கள். ஆனால் அங்கு புத்தகோயில் இருந்ததை நான் காணவில்லை. 1990ஆம்
ஆண்டு இலங்கை இராணுவம் மேற்கொண்ட படை நடவடிக்கை காரணமாக தையிட்டி உட்பட
வலிகாமம் வடக்கிலிருந்து அனைத்து மக்களுமே இடம்பெயர்ந்துவிட்டோம். பின்னர் 2016ஆம்
ஆண்டில்தான் மீண்டும் தையிட்டிக்குத் திரும்பினோம். அப்போதும்கூட அங்கு பௌத்த விகாரை
இருக்கவில்லை..”

மதியழகனின் நினைவுகளை உறுதிப்படுத்துவதைப்போலவே தையிட்டி கிராமத்தைப்
பூர்வீகமாகக் கொண்ட தம்பிராஜாவின் கதையும் இருக்கிறது.
“நான் இங்க இருந்த இடம்பெயரேக்க ஒன்பதாம் வகுப்பு
படிச்சிக்கொண்டிருந்தன். ஆனால் அப்போது வரைக்கும் இங்க ஒரு புத்தவிகாரை
இருந்ததை நான் காணேல்ல. இருந்ததெல்லாம் 1977 ஆம் ஆண்டுக்கு முன்னமே
சண்டையில் அழிஞ்சிற்று என்று எங்களுக்கு மூத்த ஆக்கள் சொல்லியிருக்கினம். அதோட
அது பெரிய விகாரையாக எல்லாம் இருக்கேல்ல. புத்தர் சிலைய வைச்சித்தான்
கும்பிட்டவை. அந்த நேரம் காங்கேசன்துறை சீமெந்து பக்ரரி, பேக்கரிகளில்
வேலைசெய்த சிங்கள ஆக்கள் கும்பிட வருவினம்” எனத் தனது வாழ்பனுவத்தைச்
சொன்னார் காணி உரிமையாளர்களில் ஒருவராகிய தம்பிராஜா.

1991 ஆம் ஆண்டு தையிட்டி கிராத்தைப் பூர்வீக நிலமாகக் கொண்ட மக்களை ஒரே
இரவில் வெளியேற்றிய இராணுவம் அந்தக் கிராமம் உள்ளடங்கிய வலிகாமம் வடக்கின்
பெரும்பகுதியை உயர்பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்தது. இராணுவம்
தையிட்டியைக் கைப்பற்றும்போது அங்கு விகாரையும் இருக்கவுமில்லை. புத்தர்
சிலையிருக்கவுமில்லை. 1991இல் வெளியேற்றப்பட்ட மக்கள், 2014ஆம் ஆண்டுவரை
அங்கு குடியமர அனுமதிக்கப்படவில்லை. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகிய
மைத்திரிபால சிறிசேனவின் காலத்திலேயே வலிகாமம் வடக்கின் சில பகுதிகள்
மக்களிடம் கையளிக்கப்பட்டன.

இதன் பின்னணியிலேயே தையிட்டியும் விடுவிக்கப்பட்டது. தையிட்டியில்  மக்களிடம்
கையளிக்கப்படாதிருந்த பகுதிக்குள் இடம்பெற்றிருந்த, 1946ஆம் ஆண்டில் பௌத்த
கோயிலுக்கு வழங்கப்பட்ட விகாரைக்குரித்தான காணியில்  கடந்த 22.08. 2018 அன்று
அப்போதிருந்த வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, பௌத்த விகாரை
ஒன்றுக்கான அடிக்கல்நாட்டு நிகழ்வை செய்திருந்தார். விகாரை அமைப்பதற்காக
அடிக்கல் நாட்டப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்பட்ட எதிர்ப்பினாலும், பிரதேச, மாவட்ட

ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட எதிர்ப்புத்
தீர்மானங்களினாலும், விகாரை அமைப்பு பணிகள் தற்காலிகமாகக்
கைவிடப்பட்டிருந்தன.

2019ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றினால் பீதியில் உறைந்து
கிடக்க, முன்னாள் முப்படைகளின் தளபதி சவேந்திரசில்வா, புதிய திஸ்ஸ
விகாரைக்கான அடிக்கல்லினை நாட்டினார். 1946ஆம் ஆண்டில் களுத்துறையைச்
சேர்ந்த பௌத்த பிக்குவிற்குத் தானமாக வழங்கிய காணியை விடுத்து, தமிழர்களுக்கு
உரித்துடைய காணியில் இந்தப் புதிய பௌத்த விகாரைக்கான கட்டுமானம்
ஆரம்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து அங்கு பௌத்த பிக்கு ஒருவரும்
குடியேறினார். அவரைப் பாதுகாக்க இராணுவக் காவலரண் ஒன்றும்
அமைக்கப்பட்டது. அயலிலிருந்த இராணுவ முகாம்களைச் சேர்ந்த இராணுவத்தினர்
இரவு பகலாக இலங்கையின் இரண்டாவது உயரமான பௌத்த விகாரையைக் கட்டியும்
முடித்தனர். இவ்வளவு காலத்திற்கும் தற்போது பௌத்த விகாரைக்காக
அபகரிக்கப்பட்டிருக்கின்ற 150 பரப்புக் காணியை உரித்தாகக் கொண்ட காணிகளின்
உரிமையாளர்கள் போராட்டங்களை நடத்தினர். அரச அதிகாரிகளைச் சந்தித்து காணி
விடுவிப்புக் குறித்து வலியுறுத்தினர். இராணுவ தளபதிகளைச் சந்தித்துப்
பேசினர். நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முறையிட்டனர். யாழ். மாவட்ட
அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்துரையாடினர். ஊடகச் சந்திப்புக்களை நடத்தி,
அந்நிலம் தங்களுடையது என்பதை ஆதரபூர்வமாக நிறுவினர். ஆயினும் இதுவரை
அந்நிலம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. பௌத்த விகாரை மாத்திரம்
வளர்ந்துகொண்டிருக்கிறது. கூடவே, உரித்துடைய தம் காணியை மீட்க தமிழ் மக்கள்
நடத்தும் போராட்டங்களும், கைதுகளும், விசாரணைகளும், வழக்குகளும் நாளுக்கு நாள்
அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button