Featuredமக்கள் குரல்

கடலை அழிக்கிறதா கரைவலை?

கட்டுரை மற்றும் படங்கள்  | ஜெரா, பிபிசி

அறிமுகக் குறிப்பு

“கரைவலை மீன்பிடி (Beach Seine Fishing) என்பது ஆழமற்ற கடற்கரைப் பகுதிகளில், கரையில் நின்றுகொண்டு நீண்ட வலையை கடலில் விரித்து, இருபுறமும் கயிறுகளைப் பிடித்து மனிதவலுவைப் பயன்படுத்தி இழுத்து மீன் பிடிக்கும் பாரம்பரிய முறையாகும்.” இம்மீன்பிடி முறையானது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைமுறையில் இருந்து வருகின்றது. தற்போது கடற்றொழிலில் நவீன மாற்றங்கள் பல நிகழ்ந்தமை காரணமாக கரைவலை மீன்பிடியிலும் மனிதவலுவிற்குப் பதிலாக உழவியந்திரங்களைக்கொண்டு வலை இழுக்கும் முறை பின்பற்றப்பட்டு வந்தது. ஆயினும் உழவியந்திரங்களைக்கொண்டு வலை இழுக்கும் முறை கடல் வளங்களை அழிப்பதனால் அதனை கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து இலங்கை அரசு தடைசெய்துள்ளது. இத்தடையை நீக்கக்கோரி அண்மையில் வடமராட்சி கிழக்கில் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. இப்போராட்டம் குறித்தும், உழவியந்திரங்களைக்கொண்டு கரைவலை இழுக்கும் முறையால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்தும் அப்பகுதி மீனவர்கள் சிலர் எமது தளத்திற்கு அளித்த கருத்துகள் சில இங்கே பிரசுரமாகின்றது.

உழவியந்திரம் மூலம் கரைவலை இழுத்தல்
மனித வலு கொண்டு கரைவலை இழுத்தல்

(கரைவலை இழுத்தல் தொடர்பான காணொலியைப் பார்க்க இங்கே அழுத்துங்கள்)  https://web.facebook.com/share/v/18J31uvo5w/

வடமராட்சி கிழக்கின் வத்திராயன் கிராமத்தில் வசித்துவருகின்ற சிவபாதசுந்தரம் சிவகுமார் அவர்கள் அப்பகுதியில் கரைவரைலத் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பின்வருமாறு விளக்குகின்றார்.

சிவபாதசுந்தரம் சிவகுமார்,  யாழ் மாவட்ட மீனவர் சம்மேளனத்தின் வடமராட்சி கிழக்கு உறுப்பினர், வத்திராயன் வடக்கு

“அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத கடற்தொழில்கள் அதிகரிச்சிக்கொண்டிருக்கு. இச்சட்டவிரோத கடற்றொழில்களுக்கு எதிராக, போரினாலும், சுனாமியாலும் பாதிக்கப்பட்டு, பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டிருக்கும் இப்பகுதி மீனவர்கள் போராட்டங்கள் பலவற்றை நடத்தியிருக்கிறம். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் கதைச்சிருக்கிறாம். அமைச்சரிட்ட சொல்லியிருக்கிறம். அண்மையில்கூட யாழ்ப்பாணத்தில் நடந்த ஆர்ப்படத்தில் கலந்துகொண்டம்”. 

தடையும் போராட்டமும்

“தற்போது என்றுமில்லாத அதிசயமாக நல்ல ஒரு சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கு. டிராக்டர்களைப் பயன்படுத்தி கரைவலை தொழில் செய்யிறதுக்குத் தடை விதிச்சிருக்கிறது தான் அந்த சட்டம். நாங்கள் அதை “விஞ்ச் (Winch)” என்று சொல்லுவம். இதை அறிஞ்சி இங்க பாரம்பரியமாகக் கடற்தொழில் செய்யிற மக்கள் சந்தோஷமாக இருக்கிற நிலையில, புத்தளம், உடப்பு பகுதிகளிலிருந்து தொழிலாளிகள கூட்டிவந்து வடமராட்சி கிழக்கு பகுதியில்  “விஞ்ச்” தொழில் செய்யிற ஆக்கள் அண்மையில போராட்டம் ஒன்றை நடத்தினவ.  அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஆக்கள் “விஞ்ச்” தொழில் செய்யிறதால என்ன பாதிப்பு என்றும் கெட்டிருந்தவ. கடற்தொழில் தெரியாத ஆக்கள்கூட இதே கேள்விய கேட்கினம். கடற்தொழில் நவீனமடையிரத்தில என்ன பிரச்சினை என்று கேட்கினம்”.

நியாயமற்ற போராட்டம்

“வடமராட்சி கிழக்கில இதுவரைக்கும் நவீன தொழிலுகள் இல்ல.  சின்ன படகுகள் வச்சித்தான் தொழில் செய்து வாறம். அதைவிட ஏராளமான சிறிய கரைவலை தொழில்கள் இருக்கு. இதில் கரைவலை என்றால் கரையில இருந்து ஒரு கிலோமீற்றருக்குட்பட்டு  வளைக்கிறது. வயோதிபர்கள், ஏலாத ஆக்கள், பொம்புளயள் என்று எல்லாரும் சேர்ந்து கரைவலை தொழில் செய்வினம். உண்மையிலேயே நல்ல வாழ்வாதரம் தரக்கூடிய கடற்தொழில் முறை இது. ஆனால் இப்ப அந்தத் தொழில் முறையையே அழிக்கிற நோக்கில உடப்பு, புத்தளம் பகுதிகளில இருந்து இங்க வந்து தொழில் செய்யிற ஆக்கள் “விஞ்ச்” தொழில செய்துகொண்டிருக்கினம். அதைத் தடைசெய்த பிறகு போராட தொடங்கியிருக்கினம். அவர்கள் தங்களுக்கு விருப்பமான தொழிலை உடப்பில செய்யலாம். இங்க வந்து எங்கட தொழில்கள அழிச்சி செய்யிறத நாங்கள் எதிர்க்கிறம். நாங்கள் சண்டையிலும் பாதிக்கப்பட்டு, இந்தியன் இழுவை படகாலும் அழிக்கப்பட்டு இவ்வளவு காலமும் போராடி தான் இவ்வளவுக்கு வந்திருக்கிறோம். இதை இங்க தொழில் செய்யிறதுக்காக வந்திருக்கிற உடப்பு மக்கள் விளங்கிக்கொள்ளவேனும்”.

“விஞ்ச்” தொழில் என்றால் என்ன?

இந்த “விஞ்ச்” தொழிலை காலைம 6 மணிக்கு கடலில் இறக்குவார்கள். இரண்டு படகுகளில் கிட்டத்தட்ட 5 கிலோமீற்றர் தூரம் வரை போய் கடலை வளைச்சி வலை போடுவினம். காலமை போடுற வலை மதியம் 12 மணியளவிலாதன் குறுகும் (சுருங்கும்). பாரமபரியமாக எங்கட மீனவர்கள் போடுற கரைவலைகள் ஒன்றரை மணித்தியாலத்துக்குள்ள குறுகும். பரந்தளவு கடலில் வலைகள விடுறதால அதை மனித வலுவைக்கொண்டு இழுக்க முடியாது. ஆகவே வலையின்ற ரெண்டு பக்கமும் டிராக்டர்களப் பொருத்தி இழுப்பினம். இப்பிடி இழுக்கும்போது கடலுக்கு அடியில இருக்கிற தாவரங்கள், பாசிகள், சின்ன சின்ன பாறைகள், மீன்களின் வாழிடங்கள் எல்லாம்  வலையோட அள்ளுப்பட்டுக்கொண்டு வந்திடும். கடல் வளமே மொத்தமாக அழிஞ்சிபோகும்.

“விஞ்ச்” தொழிலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்

“இப்பிடி பரந்த கடற்பகுதிய பிடிச்சி “விஞ்ச்” தொழில் செய்யிறதால, அந்த பகுதிக்குள் பாரம்பரியமாக தொழில் செய்துவரும் பத்திற்கும் மேற்பட்ட எங்கட கரைவலை மீனவர்கள் தொழில் செய்ய முடியாமல் இருக்கினம். பத்து கரைவலை என்றால் அந்த தொழிலை நம்பி கிட்டத்தட்ட 100 குடும்பங்களின்ற வீட்டில அடுப்பெரியும். ஆனால் இங்க அந்த பத்து பேர் கரைவலை வளைக்கிற இடத்தையும் வெளியில் இருந்து வந்த ஆட்களின் ஒரு படகு அள்ளிக்கொண்டு போகுது”.

“இந்தப் பெரிய கரைவலைகள் மணித்தியால கணக்கில் கடலில் கிடக்கிறதால, சின்ன சின்ன கரைவலைகளுக்கு மீன் படாது. எல்லா மீனும் மணிக்கணக்கில் கடலில் கிடக்கிற பெரிய கரைவலையில் தான்  படும். இவர்கள் எல்லா மீனையும் வழிச்சி துடைச்சி எடுத்திடுவார்கள்”.

“இது மட்டுமில்லாமல் கரைவலை வளைக்கிற பகுதிகளுக்கத் தான் எங்கட சிறு மீன்பிடி செய்யிற தொழிலாளர்களும் வள்ளம், கட்டுமரம் போன்றவற்றில தொழில் செய்யிற மீனவர்களுக்கும், கணவாய்க்கூடு செய்யிற வயோதிபர்களுக்கும்  ஒன்றும் கிடைக்காது. அவர்கள் கரையிலிருந்து சில மீற்றர்கள் தூரத்தில் தான் தொழில் செய்வினம். ஆனால் அவர்களின் தொழிலையெல்லாம் கடந்து பல கிலோமீற்றர்கள் துரத்திற்கு இந்தப் பெரிய கரைவலைகள் அதாவது “விஞ்ச்” தொழில் போடப்பட்டிருக்கும்”.

“எங்கட கிராமத்தில 400 குடும்பங்கள் இருக்கு. ஆனால் 50 படகுகள் தன் இருக்கு. மிகுதி எல்லாருமே சிறு தொழில் செய்யிற மீனவர்கள்தான். இந்த “விஞ்ச்” தொழிலால், இங்க இருக்கிற சிறுதொழில் செய்யிற அத்தனை மீனவர்களுமே வாழ்வாதரம் இழந்திருக்கினம்”.

இவர்கள் “விஞ்ச்” தொழிலுக்கு பயன்படுத்தும் கம்பான்கள் (வடம் அல்லது கயிறுகள்) மிகப்பெரியது. பல கிலோமீற்றர்களுக்கு வலை போடுறதென்றால் அப்பிடி பெரிய கம்பான்கள்தான் போடவேணும். இல்லாட்டி அறுத்துப்போடும். இந்த பெரிய கம்பான்கள் கடலுக்கு மேல் நிற்காது. ஒரு அடி, ஒன்றரை அடி ஆழத்தில கடலுக்கு தாண்டுதான் கிடக்கும்.  எங்கட பகுதிகளில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிக்காக போற மீனவர்கள் காலமைதான் கரைக்கு வருவினம். நித்திரை கலக்கத்தில் வரும் மீனவர்களின் படகுகள் இந்த கம்பான்களில் சிக்கி அதன் இயந்திரங்களின் காற்றடி சிதைந்த  சம்பவங்களும் உண்டு. அதேபோல இந்தக்  கம்பான்களில் மீனவர்களின் கால்கள் சிக்கி முறிந்த சம்பவங்களும் இருக்கு”.

கணபதிப்பிள்ளை சண்முகநாதன், அங்கத்தவர், வத்திராயன் கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கம் 

வத்திராயன் கிராமத்தில் வசித்துவரும் கணபதிப்பிள்ளை சண்முகநாதனும் உழவு இயந்திரத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கடற்றொழிலினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்.  அவரும் இத்தொழிலிலின் பாதிப்புகள் குறித்து விளக்கினார்.

“நான் மனித வலுவை கொண்டு இழுக்கிற கரைவலை தொழில் செய்து வருகிறேன். அண்மைக்காலமாக “விஞ்ச்” தொழில் அதிகரித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அவையும் கட்டைக்காட்டு பகுதியில் “விஞ்ச்” தொழிலை செய்து வருகினம். அங்க இருக்கிற “விஞ்ச்” தொழிலால் பாதிக்கப்பட்ட சிறு மீன்பிடி தொழிலாளர்கள் எங்களை தொடர்புகொண்டு போராட்டமெல்லாம் செய்தனாங்கள். ஆனால் அந்த நேரம் “விஞ்ச்” தொழில் செய்யிற ஆக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்ப அரசாங்கமே “விஞ்ச்” தொழிலை இலங்கை முழுவதும் தடை செய்வதாக அறிவிச்சிருக்கு. இது எங்கள போன்ற மீனவர்களுக்கு சாதகமான தீர்வு. உண்மையிலேயே இது நிறுத்தப்பட வேண்டிய தொழில் தான். இதனால சிறு கரைவலை தொழிலாளர்களுக்கு மட்டுமில்லாமல் சிறு தொழிலாளர்களுக்கும் ஆபத்தனதுதான். உதாரணமா “விஞ்ச்” தொழிலில் ஒரு பாடு வலை வளைக்க காலமை தொடங்கினால் பின்னேரம் நாலு மணி ஆகும் வளைச்சி முடிக்க. ஒரு நாள் முழுதும் நாங்கள் பல நூறு பேர் தொழில் செய்யிற கடலை ஒரே ஆள் பல கிலோமீற்றர்களுக்கு கடலை பிடிச்சி வலை படுப்பினம். இதனால மீன் கரைக்கு வராது. சிறு தொழிலாளர்கள், பாரம்பரிய கரைவலை தொழிலார்கள் (மனித வலுவை கொண்டு வலை இழுப்போர்) மிக மோசமாக பாதிக்கப்படுகினம். இதோட இந்த “விஞ்ச்” தொழில் நிரந்தரமாக நிறுத்தப்பட வேணும். ஆனால்  கடந்த அரசுகள் செய்ததுபோல இதுவும் ஒரு கண்துடைப்பு நாடகமோ என்ற ஐயப்பாடு இருக்கு”.

“உதாரணத்துக்கு தாழையடியில் ஒருவர் மெஷின் கரைவலை வளைக்க தொடங்கினால், எங்கட கடற்கரை தாண்டி ஆழியவளை கடல் தாண்டிதான் அந்த வலையை உயரகொண்டுபோய் வளைப்பான். இப்பிடி மூன்று கிராமங்களையும் உள்ளடக்கி ஒரே ஆள் வலை வளைப்பதால், இந் பகுதிகளை சேர்ந்த சிறு கரைவலை தொழிலாளர்கள் வலை வளைப்பதற்கு சந்தர்ப்பம் இல்ல. கரைவலை சூரிய வெளிச்சம் இருக்கிற நேரம் தன் செய்யவும் முடியும். பிறகெப்படி சிறு மீனவர்கள் இங்க வாழமுடியும்?”.

“இப்பிடி பிரச்சினைகள் வரும்போது நீரியல் வள  திணைக்களம் அவையலையும் எங்களையும் கூப்பிட்டு கதைச்சிருக்கு. இனிமேல் அப்பிடி செய்யமாட்டார்கள், 24, 25 கம்பான்கள் மட்டும்தான் வலை வளைப்பினம் என்று நீரியல் வளத் திணைக்களம் எங்களுக்கு முன்னால சொல்லும். ஆனால் அவை அப்பிடி செய்யமாட்டினம். ஒரு படகில வலை, இன்னொரு படகில  கம்பான் ஏத்திக்கொண்டு போவினம். படகுகள் கடலில் தேர்போல போகும்.”

தம்பிராசா ஸ்ரீஸ்கதராசா, மருதங்கேணி 

“பாரம்பரியமாகக் கரைவலைத்தொழிலில் ஈடுபட்டு வரும் மருதங்கேணி கிராமத்தைச் சேர்ந்த தம்பிராசா ஸ்ரீஸ்கந்தராசா இது குறித்து விவரிக்கையில்,  ”நாங்கள் பரம்பரை பரம்பரையாக கரைவலை தொழில் தன் செய்துவாறம். அதாவது மனித வலுவைக்கொண்டு வலை வளைக்கிற தொழில். சட்டத்துக்கு புறம்பவோ அல்லது கடலுக்குப் பாதிப்பவோ நாங்கள் எந்தத் தொழில்களையும் செய்யிறதில்ல. 2009இற்கு பிறகுதான் இங்க எல்லா சட்டவிரோத தொழில்களும் வந்திருக்கு.  தென்பகுதி மீனவர்கள் இங்க வந்து வளமான இடங்களை பிடிச்சி அந்த இடங்களுக்குரிய ஆக்களுக்கு சில சலுகைகள குடுத்து அந்த இடங்கள பிடிச்சிட்டினம். முதல்ல மெசின்ல தொழில் செய்யிற முறை சுண்டிக்குளம், வண்ணாங்குளம் ஆகிய இடங்களில் தான் தொடங்கினார்கள். இப்ப படிப்படியா முன்னேறி குடத்தனை வரைக்கும் பரவியிருக்கு. எங்கட ஆட்களுக்கும் சின்ன சின்ன சலுகைகள காட்டி இதை செய்துகொண்டு போறாங்கள்” – என்றார்.

“அவர் தொடர்ந்தும் பேசுகையில், “கரைவலை பாட்டுக் காசு (அனுமதி கொடுப்பனவு) 45000 ரூபா கட்டவேணும். அதை கட்டக்கூட இப்ப வருமானம் இல்ல. மீன் கரைய இறங்குறதே இல்ல. மனித வலுவைக் கொண்டு செய்யிற தொழிலில் சமூகத்தில் இருக்கிற எல்லருக்குமே வருமானம் கிடைக்கும். வயோதிப பெண்கள், ஏலாத ஆக்கள் என்று எல்லாருமே வலை இழுத்தோ, மீன் தெரிஞ்சோ வருமானம் எடுப்பினம். இப்ப ஒண்டுமில்ல. உழவு இயந்திரம் எங்கட வாழ்வாதாரத்தையும் அழிச்சி, கடல் வளத்தையும் அழிச்சிப்போட்டுது. வருசத்தில ஆறு மாசத்துக்குத் தான் சீராக கடல்தொழில் செய்யலாம். பிறகு மழைவரும். வெள்ளம் வரும். புயல் வரும். சுனாமி வரும் என்றெல்லாம் சொல்லி தொழில் செய்ய முடியாது. அந்த அழிவுகள விடப் பெரிய அழிவா கிடக்கு இந்த உழவு இயந்திர கரைவலை”, என கவலையுற்றார்.

கரைவலை மீன்பிடி தடை தொடர்பான தெளிவான விளக்கத்தையளித்தார் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்.மாவட்டத் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன்.

இரத்தினசிங்கம் முரளிதரன் – தலைவர், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், யாழ்.மாவட்டம்

“கடந்த சில வாரங்களுக்கு முன்பு வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு, பூனைதொடுவாய் பகுதிகளில் ஊழவியந்திரத்தின் மூலம் கடற்தொழில் செய்யும் சம்மாட்டிமார் ஒருங்கிணைந்து ஓர் ஆர்ப்பாட்டத்தையும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையும் செய்திருந்தவை. இலங்கை முழுவதுமே உழவு இயந்திரத்தின் மூலம் கரைவலை தொழில் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. அந்த சட்டம் இலங்கை முழுவதும் அமுல்படுத்தபடுமாக இருந்தால் வடமராட்சி கிழக்கு விதிவிலக்கல்ல. இலங்கையிலுள்ள கரைவலை சட்டத்தின்படி 24 கம்பான்களுக்கு மேல் கடலில் வலை போட முடியாது. காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரைக்கும் தன் கரைவலை வளைக்கலாம். அதற்கு பிறகு வளைக்க முடியாதெண்டு சட்டம் சொல்லுது. ஒரு கம்பான் என்பது 90 யார். அதுவும் கையால் திரிக்கப்படுகிற கயிற்றுக்கம்பான். அது பிற்காலத்தில் மருவி இல்லாமல்போய் இப்ப தங்கூசி கம்பான் ரோல் போட்டு இழுக்கிறளவுக்கு வந்திட்டு. ஆரம்ப காலத்தில் கரைவலை கயிற்றால் தான் பிணைக்கப்பட்டிருக்கும். இப்ப நூல் வலை பாவிக்கினம்”.

“2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தெற்கிலிருந்து வந்து கொக்கிளாய், நாயாறு பகுதிகளில் குடியேறிய மீனவர்களால் உழவு இயந்திரத்தின் மூலம் கரைவலை தொழில் செய்யப்பட்டது. அது 2015ஆம் ஆண்டளவில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதிக்கு வந்தது. ஒரு மெஷின் தன் முதல் நின்றது. இப்போது அது தாழையடி வரைக்கும் பரவியிருக்கு. இப்பிடி இயந்திரங்கள் மூலமாகக் கரைவலை தொழில் செய்யிறதால மனிதவலு கொண்டு கரைவலை செய்யும் மீனவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். உழவு இயந்திரத்தின் மூலம் கரைவலை தொழில் செய்பவர்கள் சாதாரணமாக 50 தொடக்கம் 80 வரையான கம்பான் போட்டுத்தான் தொழில் செய்யினம். ஆனால் சட்டம் சொல்லுது 24 கம்பான் தான் போடலாம் எண்டு. கிட்டத்தட்ட இரண்டு கடல்மைகளுக்குள்ள தான்  கரைவலை செய்யமுடியும். ஒரு கடல் மைல் என்றது 1925 மீற்றர்கள். ஆனால் உழவு இயந்திரத்தின் மூலம் கரைவலை செய்பவர்கள் கரையிலிருந்து 8 தொடக்கம் 10 கிலோமீற்றர்கள் வரை அதாவது கண்ணுக்கு தெரியாத தூரம் வரை சென்று வலை வளைத்து வருகிறார்கள். அதுவும் பரந்தளவிலான கடலை ஆக்கிரமித்து வலையிடுகிறார்கள். இதனால் ஏனைய மனிதவலு கொண்டு கரைவலை தொழில் செய்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். உழவு இயந்திரத்தின் மூலம் தொழில் செய்பவர்களால் கடல் வள அழிவும் நடக்குது. கடலில் மீன் உற்பத்தியகுறதுக்கு இருக்கிற பாசிகள், பாறைகள், தாவரங்கள் எல்லாமே இந்த மீன்பிடியால் அழிக்கப்படுது.”

“இன்னொரு விஷயம் கரையோரத்தின் தரைத்தோற்றமே மாற்றப்படுது. உழவு இயந்திரங்களின் ரயர்கள் தொடர்ச்சியாக கரையில் இருக்கும் மணலை கடலை நோக்கி தள்ளுது. கடற்கையில் இருக்கிற புல்லுகள்,தாவரங்கள், அடம்பன்கொடிகள் அழிஞ்சி அந்த மணலும்கூட கடற்கரைய நோக்கி மாறிவருது. கடற்கரையில் இருக்கிற மணல் மேடுகள் சமதரையாக மாற கடலரிப்பு இலகுவாக நடக்குது. எங்களுக்கு அடுத்த கிராமமான கட்டைக்காட்டில் இப்பிடித்தான் நடந்திருக்கு. அண்மையில் தாக்கிய  டித்வா புயலினால் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் அந்தக் கிராமத்தின் குடிமனைகள் இன்றைக்குக் கடலாக மாறியிருக்கு. சுண்டிக்குளம் பகுதியில் 200 மீற்றர்களுக்கு மேல் கடல் கிராமத்திற்குள் வந்திட்டு. இப்பிடி உழவு இயந்திரத்தின் மூலம் கரைவலை இழுக்கிறதால எல்லாருக்கும் பாதிப்பிருக்கு. இதனால தான் சொல்றம், கரைவலை தொழிலை மனிதவலுவை மட்டும் கொண்டு செய்யுங்கோ.”

உழவு இயந்திரத்தின் மூலம்  இழுப்பதற்கான காரணம் என்ன என்றால் 80 கம்பான் வலையை கடலில் போட்டுவிட்டால் அதை மனிதவலுவைக் கொண்டு கையால் இழுக்க முடியாது. வலையை ஆழ்கடல் நீரோட்டம்  ஒத்திப்போடும். அதாவது நிமித்திப்போடும் என்று சொல்லுவம்.  (இழுத்துக்கொண்டு போவது). சோளக நீரோட்டம் ஒருபக்கமும், வாடகை நீரோட்டம் இன்னொரு பக்கமும்  வலையை கொண்டுபோகும். அதனால தன் உழவு இயந்திரத்தை பாவிக்கிறார்கள்.” – என்றார் திரு.முரளிதரன்.

ஜெரா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button