
யார் கொன்றார் அவரை?
கட்டுரை மற்றும் படம் | North East Narrative
யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியாக வடமராட்சி கிழக்கு இருக்கிறது. இப்பகுதியினுள் மணற்காடு, குடத்தனை, செம்பியன்பற்று, மருதங்கேணி, தாளையடி, உடுத்துறை, வெற்றிலைக்கேணி எனப் பல கிராமங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்தப் பிராந்தியத்தின் ஓர் எல்லைப் பகுதியாகக் காணப்படும் ஆழமான இந்துமா கடலை நம்பியே இங்கு அனேகமான குடும்பங்கள் வாழுகின்றன. தம் வீட்டின் குடும்பத்தலைவர்கள் கடலுக்குப் போய் மீண்டால் மாத்திரமே அன்றைய நாளில் அடுப்பெரியும் நிலையில்தான் அனேகமான குடும்பங்களின் பொருளாதார நிலையும் உள்ளது.
இந்தப் பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட குடும்பங்களில் ஒன்றுதான் பிரேமா என அறியப்பட்ட பிரேம்குமார் பிரேமரஞ்சினி அவர்களின் குடும்பமும். தற்போது இரு பிள்ளைகளோடு பெண்தலைமைத்துவக் குடும்பமாக மாறியிருக்கிற அவரின் வாழ்க்கையானது, சில வருடங்களுக்கு முன்பு வரைக்கும் மிகக் காத்திரமானதாக இருந்தது. போரில் மிகமோசமான அழிவுகளைச் சந்தித்திருந்தபோதிலும், கணவன் பிரேம்குமாரின் அயராத உழைப்பினால் பிரேமரஞ்சினியின் குடும்பம் விரைவாகவே பொருளாதார ரீதியில் நிமிர்ந்தது.
மரபு வழியான கடற்றொழிலை மேற்கொண்டுவந்த பிரேமரஞ்சினியின் கணவரான ஜோசப் பிரேம்குமார் (37) குடும்பத்தின் முதன்மைத் தூணாக இருந்தார். ஆழ்கடல் மீன்பிடியிலும், ஆழ்கடலில் சுழியோடி அட்டைப் பிடித்தலிலும் வல்லவராக இருந்தார். தரையிலும், கடலிலும் தன்னை நம்பி வருவோருக்கு பேருதவியாக இருந்தார். அதனால் ஊரவர்கள் அவரைக் குட்டித்தம்பி என செல்லமாகப் பெயரிட்டு அழைத்தனர்.

”..2022 ஆம் ஆண்டு மாசி மாசம் 23 ஆம் திகதி. அன்றைக்கு ஒரு வியாழக்கிழமை. இரவு 7.30 மணியிருக்கும், என்ர அவரும் (கணவர்), தம்பி முறையான ஒருவரும் கடலுக்குப் போனவை. அதுக்குப் பிறகு 26ஆம் திகதி அவரின்ர “பொடி” (சடலம்) கேவில் கடற்கரையில ஒதுங்கினது. தம்பியின்ர ”பொடி” ஆழியவளையில் கரையொதுங்கினது.
பிரேமரஞ்சினி பெண் தலைமைத்துவக் குடும்பமாகியமைக்கான காரணத்தை மேற்கண்டவாறுதான் கூறுகிறார்.
”..அவர் நல்லா சுழியோடத் தெரிஞ்சவர். சுழியோடுறதில பயிற்சி பெற்றவர். அவர் அப்பா இல்லாமல் வளர்ந்தவர். 12 வயசிலயிருந்து ஆழ்கடலில் இறங்கி நீந்திப் பழக்கப்பட்டவர். கடலில எங்க விட்டாலும் நீந்தி கரை வந்திடக்கூடியவர். அவருக்கு வேற எந்தத் தொழிலும் தெரியாது. 12 வயசில இருந்து கடற்றொழிலிலதான் பழக்கப்பட்டவர். அப்பிடிப்பட்டவர் கடலில் தவறிவிழுந்து இறந்துபோக வாய்ப்பில்லை…” எனப் பிரேமரஞ்சினி தன் கணவனின் தொழில் வல்லமைகள் குறித்தும், அவர் தவறுதலாகக் கடலில் விழுந்து இறந்துபோக வாய்ப்பில்லாமைக்கான காரணத்தையும் தெளிவுபடுத்தினார்.
அப்படியாயின் பிரேம்குமாரும், அவருடன் கடலுக்கு சென்றவரும் எப்படித்தான் இறந்தனர்? அதற்கான காரணங்கள் எவையும் பிரேமரஞ்சினி அறிந்துவைத்திருக்கிறாரா என்கிற கேள்வியை அவரிடம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அந்தக் கேள்வியைக் கேட்பதற்கான வாய்ப்பை அவர் வழங்காமலே அதற்குப் பதிலை வழங்கிக்கொண்டிருந்தார்.
”..அந்தக் காலப் பகுதியில் எங்கட கடலில் அதிகளவில் இந்தியன் ரோலர்களின் தாக்குதல்கள் இருந்தது. வலைகள அறுத்தெறிவினம். படகுகள சேதப்படுத்துவினம். இதனால எங்கட ஆக்களுக்கு பல கோடி ரூபா தொழில் இழப்புகள் ஏற்பட்டிருந்தது. இப்பிடி இந்தியன் ரோலர்கள் எல்லைமீறி எங்கட கடலுக்க வந்து மீன் பிடிக்கிறதுக்கு எதிராகப் போராட்டங்கள் எல்லாம் அந்தக் காலப்பகுதியில அதிகம் நடந்தது. அவரும் சில போராட்டங்களுக்குப் போயிருந்தார்..”

குரலிலும், கண்களிலும் கடந்தகாலம் பற்றிய நினைவுகள் ததும்ப சற்று ஓய்வெடுத்துக்கொள்கிறார் பிரேமரஞ்சினி. தம் குடும்பத்தின் தலைமையாளனை இழந்தவொருவர் அவர் தொடர்பான நினைவுகளைப் பகிர்கையில் இதுபோன்ற அமைதிமிகு இடைவெளிகள் அடிக்கடி நிகழ்பவை. பிரேமரஞ்சினியும் அதனைச் செய்கிறார்.
”..கடலில் என்ன நடந்ததென்று நானறியேல்ல. அவரோட போன மற்ற ஆக்களின்ர படகுகள் எல்லாம் திரும்பி வந்திற்று. அவரின்ர வலைகள் மட்டும் கிடைச்சது. வலைகள் குறுக்க மறுக்க நாலைஞ்சு இடத்தில வெட்டுப்பட்டிருந்தது. அண்ணாவுக்கு இவரின்ர வலைகளின்ர ”கலர்” (நிறம்) தெரியும். பிறகொரு நாள் கடலுக்குப் போகும்போது கடலில் கிடந்து எடுத்துவந்தவர். இப்பவும் அந்த வெட்டின வலைகள அவரின்ர ஞாபகார்த்தமா வைச்சிருக்கிறன். வலை வெட்டுப்பட்டதுதான் சந்தேகமாக இருக்கு. அந்தக் காலப் பகுதியில இந்தியாவின்ர படகுகள் இங்கால வாறது, எங்கட ஆக்களின்ர படகுகள, வலைகள வெட்டுறது, அறுக்கிறதெல்லாம் நடந்தது. அப்பிடி ஏதும் நடந்திருக்குமோ என்றுதான் ஊகமாக இருக்கு…”
”..ம்…அந்த நேரம் கடல் அடி (அலையின் தாக்கம்) அதிகமாக இருந்தபடியால் கடலட்ட பிடிக்கிற எங்கட பெடியள் கடலுக்குள்ள சுழியோடி அவரின்ர படகைத் தேடிப்பார்க்க முடியேல்ல. ஆனால் பிறகு சுழியோடி பார்த்தவங்கள். படகு அணியத்தோடு சேர்த்து ரெண்டு துண்டாக உடைஞ்சிருந்ததாக சொன்னாங்கள். மற்றும்படி என்ஜின், படகுக்க கிடந்த சாமானுகள் எண்டு அவர் கடலுக்குக் கொண்டுபோன எதுவுமே இன்றுவரைக்கும் கிடைக்கேல்ல..”

தன் கணவனின் மரணத்திற்கான காரணத்தையும், தமிழர்களின் கடற்பரப்பினுள் அத்துமீறி சட்டவிரோத தொழில்களில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் அராஜகங்களையும் ஒரே புள்ளியில் இணைப்பதற்கான சான்றுகளைப் பிரேமரஞ்சினியின் வார்த்தைகள் வெளிப்படுத்தின. ஆனால் அதனை அவரால் உறுதிப்படுத்தமுடியவில்லை. கோடி யுக இரகசியங்களின் ஆழ்சுரங்கமான கடல் இந்த உண்மையையும் மறைத்துவிட்டது போலும்..!
”..கரையொதுங்கினாப் பிறகு ரெண்டு பேரின்ல ”பொடி”களையும் பார்க்கவே முடியேல்ல. ”பொடி”ய வீட்டுக்குக் கொண்டுபோக தரமாட்டம் என்று சொல்லீற்றினம். மூன்றுநாளுகள் கடலில் கிடந்த சடலம் எப்பிடி இருக்குமென்று தெரியும்தானே. பிள்ளையள் விபரம் தெரியாத ஆக்கள். பிள்ளையளுக்கு அப்பா செத்த விசயம் தெரியவேணும். தெரியாட்டி நாளைக்கு அப்பா வருவார் என்று காலம் முழுக்க காத்திருக்குங்கள். அதனால நான் சண்டபிடிச்சுத்தான் அவரின்ர ”பொடி”ய வீட்டுக்குக் கொண்டு வந்தனான். ஐஞ்சு நிமிசம்தான் ”பொடி”ய வீட்ட வைச்சிருக்க முடிஞ்சது.
வெள்ளிக்கிழமைகளில நாங்கள் கடலுக்கு போறதில்லை. வியாழக்கிழம இரவு பன்னிரண்டு மணிக்கு முதலே தொழில் முடிச்சுக் கரைய வந்திருவினம். அவரும் கடைசியாக அப்பிடித்தான் சொல்லீற்றுப் போனவர். பன்னிரெண்டு மணிக்கு வருவார் என்ற நம்பிக்கையோட நான் கடற்கரைக்குப் போனன். ஆனால் பன்னிரெண்டு மணியாகியும் அவர் வரேல்ல. பன்னிரெண்டரை போல ”கோல்” (தொலைபேசி அழைப்பு) எடுத்தன். அதுக்குப் பதிலளிக்கேல்ல. மறுநாள் வெள்ளிக்கிழமையாகியும் அவர் வீடு வந்து சேரேல்ல. அவர் உயிரோட இருந்திருந்தால் வியாழக்கிழமை பன்னிரெண்டு மணிக்கு முன்னுக்கு நிச்சயமா கரைய வந்திருப்பார்” முன்பள்ளி கல்வியைத் தொடர்ந்துகொண்டிருக்கும் தன் இரண்டாவது புதல்வனின் தலையை வருடியபடி ஈரமுலர்ந்த வார்த்தைகளைச் சொன்னார் பிரேமரஞ்சினி. காய்ந்துலர்ந்த கண்ணீர் படிந்திருந்த அவரின் கண்கள் வீட்டுக்கு வெளியே கோரமாக எரித்துக்கொண்டிருந்த வெயிலையே பார்த்துக்கொண்டிருந்தன. அவரின் வீட்டு முற்றமெங்கும் பரந்திருந்த மணலில் யார்யாரோ நடந்த கால்தடங்கள் குன்றுங்குழியுமாகக் கிடந்தன. அந்தத் தடங்களில் தன் பாசத்திற்குரிய கணவனது கால்தடங்களும் இருக்கலாம் எனப் பிரேமரஞ்சினி அவ்வேளையில் நினைத்துக்கொண்டிருக்கக்கூடும். காற்றுத்தான் வலியதாயிற்றே. அந்தத் தடங்களை விரைவாக மணலிட்டு நிரப்பிக்கொண்டிருந்தது.




