
தமிழ் பிறந்த வரலாறு
கட்டுரை, படம் | Vicky Kannan
கிபி 1882 ஆம் ஆண்டு மதுரை அருகே மாங்குளம் பகுதியில் முதன்முதலாக இராபர்ட் சீவல் அவர்கள் பிராமி கல்வெட்டினை கண்டுபிடித்தார். ஆனால் அது தமிழ் பிராமி தான் என்பதை அப்போது யாரும் உணரவில்லை. பின் 1924ஆம் ஆண்டு சுப்ரமணிய ஐயர் அவர்கள் இக்கல்வெட்டினை முழுவதுமாக படித்து இக்கல்வெட்டின் மொழி தமிழ் என்றும், இவ்வெழுத்து முறை தமிழ் பிராமி என்றும் கூறினார். வரலாற்று ஆய்வறிஞர்கள் யாரும் அப்போது இதனை பெரிதாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் இக்கல்வெட்டு அசோக பிராமியிலிருந்து வேறுபட்ட இன்னொரு வரிவடிவம் என்பதை மட்டும் ஏற்றுக்கொண்டனர்.
தமிழ் மொழியின் தொன்மையான எழுத்து வடிவங்களை அறிந்து கொள்ளக் குகைக் கல்வெட்டுகள் பெரிதும் உதவுகின்றன. இக்கல்வெட்டுகளில் எழுதப் பெற்றுள்ள எழுத்து வடிவங்களுக்குப் பெயரிடுவதில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஒரு சிலர் தமிழி என்று குறிப்பிடுகின்றனர். வேறு சிலர் தமிழ்-பிராமி என்று குறிப்பிடுகின்றனர்.

இந்தியாவின் வடபகுதியில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோகன் ஆட்சி புரிந்தான். இவன் ஆட்சிக்காலத்தில் பிராமி என்னும் எழுத்து வடிவங்கள் அங்குப் பயன்படுத்தப் பெற்றுள்ளன. தமிழகக் குகைக் கல்வெட்டுகளும் இதே காலத்துக்கு உரியவையாக அறியப்படுகிறது.. இந்தக் குகைக் கல்வெட்டு எழுத்து வடிவங்களுக்கும் வடநாட்டில் பயன்படுத்தப் பெற்ற பிராமி எழுத்து வடிவங்களுக்கும் சிற்சில ஒற்றுமைகள் உள்ளன. இதனால் பிராமி என்னும் பொது எழுத்து வடிவில் இருந்து தமிழ்நாட்டில் குகைக் கல்வெட்டு எழுத்துகள் உருவாகின, வடநாட்டில் பிராமி எழுத்துகள் உருவாகின என்பர். இக்கருத்தின் அடிப்படையில் வடபிராமி, தென்பிராமி என்று பெயரிட்டு அழைப்பதும் உண்டு. தமிழகக் கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் குகைக் கல்வெட்டு எழுத்து வடிவங்களைத் தமிழ்-பிராமி என்று பெயரிட்டு அழைப்பார்.
இந்திய அகர வரிசை எழுத்துக்களில் தொன்மையான எழுத்து பிராமி எழுத்தாகும். வட்டார வேறுபாடுகளுக்கு ஏற்ப இவ்வெழுத்து தமிழ்–பிராமி/தமிழி, அசோகன்-பிராமி, வடஇந்திய-பிராமி, தென்னிந்திய-பிராமி, சிங்கள–பிராமி என்று வகைப்படுத்துப்பட்டுள்ளது. இன்று இந்திய நாட்டில் உள்ள எழுத்துகள் பிராமி எழுத்துகளிலிருந்து வளர்ச்சி அடைந்து வந்தவையே. மேலும் அகழாய்விலும், கள ஆய்விலும் அறியப்பட்ட பானை ஓடுகளிலும் ஆற்றுப் படுகைகளில் சேகரிக்கப்பட்ட காசுகள், முத்திரைகள், மோதிரங்கள் ஆகியவற்றில் தமிழ்–பிராமி/தமிழி எழுத்துகள் காணப்படுகின்றன.
தமிழகக் குகைக் கல்வெட்டு எழுத்துகள் வடஇந்திய பிராமி எழுத்துகளில் இருந்து சிற்சில நிலைகளில் வேறுபடுகின்றன. அவ்வேறுபாடுகள் தமிழின் தனித்தன்மைக்கு உரியவை ஆகும். தமிழ் பிராமிபல அம்சங்களில் அசோக பிராமியில் இருந்து வேறுபட்டுக் காணப்பட்டது. எடுத்துக்காட்டாக, அசோக பிராமியைப் போலன்றித் தமிழ்ப் பிராமியில் அகரமேறிய உயிர்மெய்களில் இருந்து தனி மெய்யெழுத்தைப் பிரித்துக் காட்டுவதற்கான முறை ஒன்று இருந்தது. அத்துடன், ஐராவதம் மகாதேவனின் கூற்றுப்படி, தொடக்ககாலத் தமிழ்ப் பிராமியில் உயிர்மெய் எழுத்துகளில் உயிரொலிகளைக் குறிக்கச் சற்று வேறுபட்ட குறியீடுகள் பயன்பட்டன. மேலும், சமசுக்கிருதத்தில் இல்லாத ஆனால் தமிழில் உள்ள ஒலிகளைக் குறிக்கக் கூடுதலான எழுத்துகள் இருந்ததுடன், சமசுக்கிருதத்தில் உள்ள ஆனால் தமிழுக்குத் தேவையற்ற ஒலிகளைக் குறிக்கும் எழுத்துகள் இல்லாமலும் உள்ளன. எடுத்துக்காட்டாக ஒலிப்புள்ள மெய்யொலிகள் தமிழ்ப் பிராமியில் காணப்படவில்லை.
கி.மு.2 ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய கல்வெட்டுகளில் சற்று மாறுபட்ட தமிழ்ப் பிராமி வடிவம் காணப்படுகிறது. இவ்வடிவம், தொல்காப்பியத்தில் விளக்கப்பட்ட தமிழ் எழுத்து முறையைப் பெருமளவுக்கு ஒத்ததாக உள்ளது. முக்கியமாக, அகரமேறிய மெய்யெழுத்துகளில் இருந்து தனி மெய்யைப் பிரித்துக்காட்ட புள்ளிகள் பயன்பட்டதைக் காண முடிகிறது. இதன் பின்னர் தமிழ் எழுத்துகள் வளைகோடுகளைக் கொண்டனவாக வளர்ச்சியடைந்தன.
. இந்த வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு தமிழி என்று தனிப்பெயர் இடுதலே சிறப்புடைத்து என்பார் கல்வெட்டு அறிஞர் நாகசாமி. இவர் தம் கருத்துக்கு அரணாக இரு சான்றுகளை எடுத்துக் காட்டி விளக்குகின்றார்.
கி.மு. முதல் நூற்றாண்டைச் சார்ந்த சமவயங்க சுத்த என்னும் நூலில் 18 வகையான எழுத்துகளின் பெயர்கள் பட்டியல் இடப்பெற்று உள்ளன. அவற்றுள் தமிழி என்பதும் ஒன்று.
பிராகிருத மொழியினர் தமிழ் எழுத்துகளைத் தமிழி, திராவிடி என்று குறிப்பிடுகின்றனர். திராவிடி என்பது பிற்காலப் பெயர். இப்பெயர் கி.பி.5,6 ஆம் நூற்றாண்டுகளுக்குரிய நூலாகக் கருதப் பெறுகின்ற லலித விஸ்தாரம் என்னும் நூலிலேயே இடம் பெற்றுள்ளது.எனவே குகைக் கல்வெட்டு எழுத்துகளைத் தமிழி என்றே குறிப்பிடுவோம்.
தமிழ்–பிராமி/தமிழி கல்வெட்டுகள் ஏறத்தாழ தமிழகம் முழுவதும் பரவலாகக் கிடைக்கின்றன.கேரளா மற்றும் ஆந்திரத்தில் சில பகுதிகளிலும் கடல் கடந்த வணிகத் தொடர்பு காரணமாக சில பானை ஓடுகள், ஓர் உறைகல் ஆகியவை ஆட்பெயர்களுடன் எகிப்து, தாய்லாந்து, ஓமன், இலங்கை, ஆப்பிரிக்கா ஆகிய இடங்களில் அண்மையில் அறியப்பட்டுள்ளன.
தமிழ்-பிராமி/தமிழி கல்வெட்டுகள் முற்காலத் தமிழ்-பிராமி, பிற்காலத் தமிழ்-பிராமி என கி.மு. ஆறாம் நூற்றாண்டு முதல் கி.பி. நான்காம் நூற்றாண்டு வரையிலான கால எல்லையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
தொடக்கத்தில் தமிழ் பிராமி எழுத்து வடிவமானது வடக்கில் இருந்து தெற்கு நோக்கி வந்த ஜைன துறவிகளின் மூலமாகவே தமிழகத்திற்கு வந்ததாக ஐராவதம் மகாதேவன் போன்ற ஆய்வாளர்கள் கருதினர். அதன் காரணம் தமிழ் பிராமி கிடைக்கும் குகை படுகைகளில் எல்லாம் ஜைன தீர்த்தங்கரர்களின் உருவச்சிலைகள் கிடைப்பதும் ஜைன புராணங்களில் ஆதிநாதரின் மகளாக பிராமி என்ற பெண்ணும் வருவது இதற்கு சான்றாக முன்வைக்கப்பட்டது. இதனை மறுத்தும் ராஜவேலு போன்ற தொல்லியலாளர்கள் பேசியும் எழுதியும் வந்தனர். காரணம் தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் குகை படுகைகளில் பிராமி எழுத்து பொறுப்புகள் காணப்படவில்லை. குறிப்பாக ஜைனர்கள் குடியேறியதாக சொல்லப்படும் கர்நாடகத்தில் இவை எதுவும் காணப்படவில்லை. ஆனாலும் இந்த நீண்ட நெடிய விவாதத்தை சமீபத்திய கீழடி ஆய்வறிக்கை முடித்து வைத்தது. தமிழின் காலத்தை கிமு ஆறாம் நூற்றாண்டு வரை அறிவியல் ரீதியாக கொண்டு சென்றதால் ஜைன தொடர்பான விவாதங்கள் நீர்த்துப்போயின. அதோடு சமீபகாலமாக தமிழகத்தில் நடந்து வரும் பல்வேறு அகழாய்விலும் தமிழ் பிராமி பொறிக்கப்பட்ட பானையோடுகள் தொடர்ச்சியாக கிடைத்து வருகின்றன. தமிழகத்தில் நடந்த ஆய்விலேயே தமிழ் பிராமி பொறிக்கப்பட்ட பானையோடுகள் அதிகம் கிடைத்தது கொடுமணல் ஆய்வில் தான் என்பதை க. ராஜன் போன்ற பேராசிரியர்கள் எழுதி இருக்கிறார்கள்.



