
ஈழத்தமிழர்களை அழிக்க கொட்டிக்கொடுத்த இஸ்ரேல் – பாகம் 02
கட்டுரை | கேஷாயினி எட்மண்ட்
இலங்கை பேரினவாத அரசு இஸ்ரேலுடன் இணைவுடன் உருவாக்கிய விசேட அதிரடிப் படை குறித்து எச்சரிக்கப்பட்டமை தொடர்பிலும், எனினும் – அதனைப் பொருட்படுத்தாமல் நடவடிக்கைகளை தொடர்வதில் காணப்பட்ட நிலைப்பாடுகள் குறித்தும் பகிரப்பட்ட தகவல்கள் வருமாறு:
1987 மார்ச் 18: ‘இஸ்ரேல் உள்ளுர் இராணுவத்துடன் உறவைத்தொடர அனுமதிக்கப்படுகின்றது. எனினும் விசேட அதிரடிப் படைக்கு உதவுவது என்பது குறுகியகாலத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சந்தேகத்திற்கிடமான முதலீடாகும். இது பாரதூரமான, அதேவேளை நீண்டகாலத்திற்கான பாரிய தவறுமாகும். ஒருவேளை அரசியல் மாற்றம் ஏற்பட்டு இலங்கை ஜனாதிபதியும் அவரது மகனும் அரசியலில் இருந்து விலகினால் இந்த விசேட அதிரடிப் படை கட்டமைப்பு கலைக்கப்படகூடும். இதனால் இதனுடன் தொடர்புடைய அனைவரும் மிகவும் சிக்கலான நிலைக்குத்தள்ளப்படுவர்’ என்று கொழும்பிலுள்ள அமெரிக்க துணைத்தூதுவர் குறிப்பிட்டதாக ஹெய்ம் டிவோன் (Haim Divon) மேற்கோள் காட்டியுள்ளார்.
1987 ஆகஸ்ட் 19: ‘இலங்கை ஜனாதிபதிக்கெதிரான கொலை முயற்சிக்கு பின்னர் விசேட அதிரடிப் படையிலிருந்து ஒரு பகுதி புதிய வி.ஐ.பி பாதுகாப்பு அணியாக உருவாக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக இஸ்ரேலின் மூன்று பயிற்சியாளர்கள் கொண்ட குழு நான்கு வாரங்களுக்கு இலங்கைக்கு அனுப்பப்பட ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.’ என்று இலான் பெலக்கினால் (Ilan Peleg) தகவல் பரிமாறப்பட்டது.


அதேவேளை இத்தகவலுடன் பகிரப்பட்ட இன்னுமொரு தகவலும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதொன்று. அதாவது ‘விசேட அதிரடிப் படையானது தேர்ந்தெடுக்கப்பட்டதொரு பிரிவாகும். இதன் போக்கை நிர்ணயிப்பவர் ஜனாதிபதியின் மகன். அவருடன் சந்திப்பினையும் மேற்கொண்டோம்’ என்று பகிரப்பட்ட தகவல். அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனாவின் மகனான ரவி ஜயவர்ததனாவே விசேட அதிரடிப் படையின் போக்கினை தீர்மானிப்பவர் என சுட்டப்பட்டது. ரவி ஜயவர்த்தனா நேரடியாக அரசியல் தளத்தில் இயங்காவிட்டாலும் விசேட அதிரடிப் படையின் பயிற்சிகள் மற்றும் படைய நடவடிக்கைகளில் இவரது பங்கு பாரியதொன்றாக இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இவரால் பொறுப்புகூறல் அற்ற அதிகாரம் பிரயோகிக்கப்பட்டதாகவும், அதன்விளைவாக மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற போதும், அவை குறித்தான விசாரணைகளின்போது அரசின் பாதுகாப்புகொள்கைகள் மற்றும் பொறுப்புகூறலில் குடும்ப செல்வாக்கின் தாக்கம் காணப்பட்டதாகவும் விமர்சனங்கள் உண்டு.
1987 செப்டெம்பர் 10: அனுப்பப்பட்ட செய்தியில் ஹெய்ம் டிவோன் (Haim Divon), ‘இஸ்ரேல், இலங்கை தொடர்பில் கொண்டிருந்த உண்மை நிலைப்பாட்டினை அறிந்திருந்தபோதும் இப்போக்கு குறித்து பொதுமக்களது கருத்துக்கள் எவ்வாறு இருந்தன என்பது பற்றி தான் கவலைப்படுவதாகவும், இலங்கையுடன் சாதாரண சுமூகமான உறவை உருவாக்குவதே இஸ்ரேலின் நோக்கம். இதனை இலங்கை மக்களிடம் தெளிவுபடுத்த தூதரக செயற்பாடுகள் அவசியமாகவுள்ளன. இந்த விசேட அதிரடிப் படை குறித்த கண்ணியமான எண்ணப்பாடு மக்களிடையே இல்லை’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
1987 நவம்பர் 11: அனுப்பப்பட்ட செய்தியில் ஹெய்ம் டிவோன் (Haim Divon), தான் மொசாட் அமைப்பின் பிரதிநிதியொருவருடன் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவை சந்தித்ததாகவும் இதன்போது இஸ்ரேலிய இராணுவ பயிற்றுவிப்பாளர்களை தனிப்பட்ட முறையில் ஜே.ஆர் சந்திக்க விருப்பம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ‘ஜனாதிபதி உண்மை நிலையிலிருந்து விலகி அளவிற்கதிகமான நம்பிக்கையுடன் இருந்ததாகவும், இதற்கு அவருக்கு மிகுந்த நம்பிக்கையூட்டும் மதிப்பீடுகளை வழங்குகின்ற ஆலோசகர்களின் தாக்கமும் காரணமாக இருக்கலாம்’ என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இச்செய்தி அனுப்பப்பட்ட மறுதினம் ‘மொசாட் அதிகாரிகள் இருவர் இலங்கையில் நிரந்தரமாக தங்கி செயல்பட்டு வருகின்றார்கள். இவர்களது இருப்பு குறித்து பொதுமக்களுக்கும் தெரியும். ஏனைய ‘திறமைகளுடன்’ பழங்களையும், காய்கறிகளையும் வளர்க்கின்ற மொசாட் அதிகாரிகளுக்கு பாராட்டுக்களும் கிடைக்கின்றன’ என்று குறிப்பிட்டுள்ளார். இது முன்னரே சொல்லப்பட்டதனை நிரூபிப்பது போன்று ‘விவசாய நிபுணர்கள்’ போர்வையில் இஸ்ரேல் உளவாளிகள் செயற்பட்டதனை உறுதிசெய்கின்றதொரு செய்திக்கூற்றாகும்.
முன்னர் இஸ்ரேலிடம் உறவினை பேணிய போதும் 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வுறவினை நிறைவுக்கு கொண்டு வந்திருந்த இலங்கை சுதந்திரக்கட்சி அப்போது எதிர்க்கட்சியாக செயற்பட்டுக்கொண்டிருந்தது. எதிர்க்கட்சி என்கின்ற ரீதியில் இலங்கை அரசிற்கும் இஸ்ரேயலுடனான உறவினை துண்டிப்பதற்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தது. இதேவேளை அரபுநாடுகளும் உறவுகளை துண்டிப்பதற்கான அழுத்தங்களை கொடுக்க அதன் நிமிர்த்தம் கொழும்பில் இருந்த இஸ்ரேலிய தூதரகத்தினை மூடுவதற்கான நிர்ப்பந்தங்கள் தோன்றின. மேலும் தாம் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் சந்தர்ப்பத்தில் 24 மணிநேரத்திற்குள் இஸ்ரேலியர்களை வெளியேற்றுவோம் என்கின்ற பரப்புரையையும் இலங்கை சுதந்திரக்கட்சி மேற்கொண்டது.
1987ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி தொடக்கம் 14ஆந் திகதி வரையான காலப்பகுதியில் அனுப்பப்பட்ட செய்திகளில், இலங்கை ஜனாதிபதி மொசாட் அதிகாரியிடம் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்திற்கு 1 மில்லியன் டொலர் நிதியுதவியினை கோரியமை மேற்கோள் காட்டப்பட்டது. இது குறித்து ஹெய்ம் டிவோன் (Haim Divon) தன்னுடைய அறிக்கையில், ‘தேர்தல் குறித்த செய்தி எமக்கு தெளிவாகவுள்ளது. அதனால் அவரது வெற்றி குறித்து எமக்கு ஆர்வமுண்டு. நாம் அவருக்கு உதவ நினைத்துள்ளோம். ஏனென்றால் எதிர்க்கட்சி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தால் நாங்கள் வெளியேற்றப்படுவோம் என்பது பற்றி நாம் அறிந்துள்ளோம் என அவரும் நினைக்கின்றார்’ என குறிப்பிட்டுள்ளார்.
1987 மே 21: தான் ஜனாதிபதியின் செயலாளருடன் சந்திப்பினை மேற்கொண்டமை ஹெய்ம் டிவோன் (Haim Divon) தொடர்பில் பதிவுசெய்துள்ளார். அதில் செயலாளர் ‘ ஐரோப்பிய நாடுகள் உணர்வு ரீதியாகவோ செயற்பாட்டு ரீதியாகவோ எமக்கு உதவவில்லை என்பது குறித்து எமக்கு அதிருப்தியுண்டு. முக்கியமாக நாம் இராணுவ உதவிகளை கோரிய போதும் உதவ மறுக்கின்றன. ஆனால் இஸ்ரேலிடம் மட்டும் இருந்தே உதவிகள் கிடைத்துள்ளன’ என தன்னிடம் கருத்தினை பகிர்ந்தமையை குறித்து மேற்கோள் காட்டியுள்ளார்.
1988 ஜனவரி 04: ‘நுண்ணறிவு மற்றும் பாதுகாப்பு துறைசார் விடயங்களில் எமக்கு வழங்கிய உதவிகளுக்காக இஸ்ரேலுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்’ என ஜே.ஆர் நன்றி தெரிவித்த கடித்தினை ஹெய்ம் டிவோன் (Haim Divon) அனுப்பிய செய்தியில் இணைந்திருந்துள்ளார்.
1988 மார்ச் 25: ‘இன்று இலங்கை ஜனாதிபதியை சந்தித்தபோது இதுவரை நாம் மிகவும் சிறப்பான உதவிகளையே வழங்கியுள்ளோம். இஸ்ரேலிய பிரதமர் ஷாமிர் தம்முடைய இரு மெய் பாதுகாவலர்களை உங்களின் பாதுகாப்பு குழுவை பயிற்றுவிக்க அனுப்பியுள்ளார்.’ என அறிக்கையிட்டுள்ளார்.
இதேவேளை 1980ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவினை தளமாக கொண்டியங்கிய தமிழ் இனப்படுகொலை நிறுத்தற்குழு (The Committee to Stop the Genocide of the Tamil Minority in Sri Lanka) சிகாகோவில் இயங்கி வந்த இஸ்ரேலிய தூதரகத்திற்கு ஒரு மனுவினை இது குறித்து சமர்ப்பித்திருந்தது. அதில் ‘ஈழத்தமிழர்களுக்கெதிரான இலங்கையரசின் இராணுவ நடவடிக்கைகளுக்கு இஸ்ரேல் ஆயுதங்களையும் பயிற்சிகளையும் வழங்கி வருகின்றது’ என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. இதற்கு தூதரகம் தாம் அவ்வாறு செய்யவில்லை என மறுப்பு தெரிவித்ததுடன் சில தரப்புக்கள் எம்மீது குற்றஞ்சுமர்த்த முயல்கின்றன என்றும் தெரிவித்திருந்தமை இங்கு மேற்கோள்காட்டப்படத்தக்கதொன்று. மேலே மேற்கோள் காட்டப்பட்டுள்ள தகவல் பரிமாற்றங்களின் ஆதாரங்களுக்கமைய அன்று இஸ்ரேலிய தூதரகம் தெரிவித்த மறுப்பு பொய்யானது என்பது புலனாகின்றது.
இஸ்ரேயலினால் வழங்கப்பட்ட ஆயுதங்களும் அதன் பாதிப்புக்களும்
இஸ்ரேலிய ஆய்வாளர் ஷாலோமி யாஷின் கூற்றுப்படி இலங்கை இராணுவம் இஸ்ரேலிடமிருந்து இரவுநேரத்திலும் பயன்படுத்தக்கூடியதான காட்சியமைப்புக்களை வழங்கக்கூடிய தொழில்நுட்ப உபகரணங்கள், ஒருங்கிணைவு அமையங்கள், கடல் பரப்பு ஏவுகணைகள், உஷி துணை இயந்திர துப்பாக்கிகள், மோட்டார்கள், 155 மிமீ துப்பாக்கிகள் உள்ளிட்ட போராயுதங்களை கொள்வனவு செய்துள்ளது.
மேலும் மிஷ்ணக் (Miznak), மீவ்டாக் (Mivtach) வகை கடற்படை கப்பல்களும் வாங்கப்பட்டுள்ளன. இஸ்ரேலிய ஆயுதங்களினால் இலங்கை வான் படையும் கடற்படையும் அதிக நன்மைகளை பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இலங்கை கடற்படையினால் இஸ்ரேலிடமிருந்து வாங்கப்பட்ட Saar 6 கார்வெட் ,Shaldag, Dvora மற்றும் Super Dvora வகை கப்பல்கள் விடுதலைப்புலிகளின் கடற்படை தாக்குதல்களின் போது பயன்படத்தப்பட்டுள்ளன.
இலங்கை வான் படை 1995ஆம் ஆண்டில் ஏழு கிபீர் விமானங்களையும், 2000 ஆம் ஆண்டு மேலும் எட்டு கிபிர் விமானங்களையும் வாங்கியுள்ளது. ஒரு கிபீர் விமானம் 2800 மணிநேரங்கள் பயணிக்கும் வலுவை கொண்டிருந்ததுடன் 3500 டன் குண்டுகளை விடுவிக்கும் சக்தி வாய்ந்தது என்பது இங்கு மேற்கோள் காட்டத்தக்கது. கிபீர் விமானத்தாக்குதல் குறித்து நினைவுபடுத்தும்போது மறக்க முடியாததொரு சம்பவமாக செஞ்சோலை சிறுவர் இல்லம் மீதான தாக்குதலைக் குறிப்பிடலாம். 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி இலங்கை வான் படையினால் கிபீர் விமானங்களைப்பயன்படுத்தி அநாதரவான பெண் குழந்தைகளின் காப்பகமான செஞ்சோலை சிறுவர் இல்லம் மீது குண்டு வீசப்பட்டதில் 60 சிறுமிகள் கொல்லப்பட்டதுடன் பல சிறுமிகள் படுகாயமடைந்தமையும் மேற்கோள் காட்டப்பட வேண்டியதொன்று.
1999ஆம் ஆண்டு நவம்பர் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு எனும் தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசத்தில் இடம்பெற்ற இரு கிபீர் தாக்குதல்களின் போது 21 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 40 பேர் படுகாயமடைந்தனர்.
இஸ்ரேலிய ஆய்வாளர் ஷாலோமி யாஷின் ஆய்வின்படி, இலங்கை தன்னுடைய இராணுவ முன்னெடுப்புகளுக்கு ஏனைய நாடுகளிடம் ஆயுதங்களை கொள்வனது செய்துள்ளபோதும் இஸ்ரேலே அதிகளவு ஆயத பரிமாற்றத்தில் முன்னிற்பதாக குறிப்பிடுகின்றார். போருக்குப்பின்னர் இஸ்ரேல் நாட்டிற்கான தூதுவராக நியமிக்கப்பட்ட டொனல்ட் பெரேராவும் 2010ஆம் ஆண்டில் YNet News இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் ‘பல வருடங்களாக பயிற்சிகள் இராணுவ தொழில்நுட்பங்களை வழங்கியதன் வழியாக இஸ்ரேல் எமக்கு போரில் உதவியுள்ளது. கடந்த சில வருடங்களில் நாங்கள் பல பில்லியன் டாலர் அளவிற்கு உதவியைப் பெற்றுள்ளோம்’ என்று குறிப்பிட்டதன் மூலம் நிரூபனமாகின்றது.

இஸ்ரேலின் விமான தயாரிப்புகளில் முக்கியமானதொன்று தானியங்கிவிமானங்கள் (UAV). 1996ஆம் ஆண்டில் இல் இலங்கையரசு தனது விமானப்படையின் 11 ஆவது பிரிவாக தானியங்கி விமான பிரிவினை நிறுவியது. இதற்கான நடவடிக்கைகளில் IAI சூப்பர் ஸ்கவுட் மற்றும் சர்சர் 2 வகை ட்ரோன்களை உபயோகிகத்தது. 2008ஆம் ஆண்டு ஜனவரியில் இலங்கையரசு தமிழீழ விடுதலைப்புலிகளுடனான சமாதான ஒப்பந்தத்தினை நிறைவுறுத்திய பின்னர் மனிதாபிமான போர் எனும் பெயரில் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதற்கான கண்காணிப்பு பணிகளில் தானியங்கி விமானங்களை பயன்படுத்தியது. இக்கண்காணிப்பு நடவடிக்கைகள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டதுடன் தாக்குதல்களை மேற்கொள்வதற்கான இலக்குகளை தீர்மானிப்பதற்கும் இவை பயன்பட்டன.
2009ஆம் ஆண்டு மே மாதம் 2ஆந் திகதி முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீதான குண்டு வீச்சிலும் வன்னியில் யுத்த நிறுத்த பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த பொதுமக்களின் இருப்புக்கள் மீதான குண்டுவீச்சிலும் இந்த தானியங்கி விமானங்கள் பெரு பங்குவகித்தன.
2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் இஸ்ரேல் தமது நிபுணர்களையும் ஆயுதங்களையும் அனுப்புவதில் தயக்கம் காட்ட ஆரம்பித்தமையும் சுட்டப்படவேண்டியதொன்று. அதற்கு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான ஈரானின் உறவு நிலையும் இதனால் தமது நிபுணத்துவங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் ஈரானால் உள்வாங்கப்பட்டுவிடும் என்கின்ற இஸ்ரேலின் பயம் முக்கிய காரணமாக அமைந்திருந்தது.
(தொடரும்..)
பாகம் ஒன்று இணைப்பில் உள்ளது.



