நம்பிக்கை

நம்பிக்கையைக் கைவிடாதிருக்கும் சுமதி

கட்டுரை மற்றும் படங்கள் | North East Narrative

போர் முதலில் சிறுவர்களையும் பின்னர் பெண்களையும் மோசமாகப் பாதிக்கும் என்பர். அதற்கு தகுந்த சாட்சிகளை இலங்கையின் வட மாகாணத்தில் இருக்கின்ற வன்னிப் பெருநிலம் கொண்டிருக்கிறது. போர் பாதிப்புக்களிலிருந்து மீண்டுவரமுடியாத நிலையில் பெண்கள் பலர் வாழ்ந்துகொண்டிருக்க, அதிலிருந்து மீண்டுவர அயராது உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களையும் காணமுடிகின்றது. பொருளாதார ரீதியாகவும், சமூக அந்தஸ்து ரீதியாகவும் மேலேவர அவர்கள் பெரும்போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறாக எவ்விடத்திலும் சோர்ந்துவிடாது தொடர்ந்தும் போராடிக்கொண்டிருப்பவர்தான், செல்வாநகர், நட்டாங்கண்டல் கிராமத்தில் வசிக்கும் அன்ரன் யோன்சன் சுமதி.

நான் கச்சான் உடைச்சிக் குடுக்கிறனான். வெண்ணிலா உற்பத்தி நிலையம் தான் என்ரை  சிறுகைத்தொழில் நிலையத்துக்குப் பேர். அதிகமாக விதை கச்சான் உடைத்துக்கொடுப்பேன். அதைவிட கச்சான் அல்வா செய்யிறதுக்கும் உடைச்சிக் குடுக்கிறனான். கச்சான் அல்வாவும் செய்து குடுத்தனான். அதைச் சீராகச் செய்ய ஆக்கள் இல்லாதபடியால் இப்ப நிற்பாட்டியிருக்கிறன். விதைக்கிறதுக்கான கச்சான் உடைச்சிக்குடுக்கிறன். ஒரு கிலோ உடைக்க ஐம்பது ரூபா வாங்குறன்” எனக் குறிப்பிடும் சுமதியிடம் கச்சான் உடைப்பதற்கான சிறு இயந்திரம் உண்டு. இயந்திரமென்றால் எரிபொருள் கொண்டு பெரும் இரைச்சலுடன் இயங்கும் மெசின் அல்ல. மனித வலுகொண்டு இயக்கப்படும் உள்ளூர் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட ஒரு பொறி. அதனுள் கோது நீக்கப்படாத கச்சானை இட்டு, கையால் அப்பொறியின் கைப்பிடியை அசைக்க, கச்சானின் கோதுகள் நீக்கப்படுகின்றன. பின்னர் அவற்றை சுளகில் இட்டு, புடைத்து, கோதுகளை நீக்கியபின் கச்சான் விதையாகக் கிடைக்கிறது.

”நான் மாற்றுத்திறனாளி. இடம்பெயர்ந்து போகேக்க முள்ளிவாய்க்காலில்  காயப்பட்டனான். தலையில பீஸ் (எறிகணைத் துண்டு) இருக்கு. காலிலயும் பீஸ் இருக்கு. சில நேரங்களில் நோகும். வெயிலுக்க கனநேரம் நின்றால் தலைச்சுற்றும். கோவம் வரும். பிள்ளையளோட சண்ட வரும். அதைப் பொருட்படுத்தாமல் என்னை நானே தேற்றிக்கொள்ளுவன்” எனச் சொல்பவரிடம் கடந்தகாலம் குறித்த வலி இருக்கிறது. அந்த வலியை அவர் உடல் உணர்ந்திருக்கின்றபோதிலும், அதனைத் துயரமான வார்த்தைகளால் வெளிப்படுத்த மனம் விடுவதாயில்லை. எல்லாவற்றையும் மீறிநிற்கிறது அவரின் நம்பிக்கை.

ஒரு நிறுவனம் இந்த மெசினைத் தந்தது. இதில எப்பிடி கச்சான் உடைக்கிறதென்று பயிற்சியும் தந்தது. ஐஞ்சு வருசமாக இதைவைச்சித்தான் இந்த வேலைய செய்துகொண்டிருக்கிறன். ரெண்டு தரம் பழுதாய்ப் போனது. திருத்திப்போட்டன்” என்பவரிடம், இந்த வேலையால் இலாபம் கிடைக்குமா எனக் கேட்டபோது, ”ஓம். முதல் இருபது ரூபாய்க்குத்தான் உடைச்சனான். இப்ப ஐம்பது ரூபா வேண்டுறன். தொடர்ச்சியா வேலை வறாது. சில நாட்களில் ரெண்டாயிரம் ரூபாய்க்கு கச்சான் உடைப்பன்” என சுமதி சொல்லும்போது அவரின் கண்களில் நம்பிக்கை ஒளி பிரகாசிக்கிறது.

”கச்சான் உடைச்சிக்குடுக்கிறதோட நிற்கிறதில்ல. நான் கச்சான் விதைக்கிறனான். கால் கொஞ்சம் ஏலாதுதான். சைக்கிளோடிப்போனால் கால் சரியான வேதனையா இருக்கும். ஒட்டுபாட்டாதான் (கால் துண்டிக்கப்பட்டு மீள இணைக்கப்பட்டவர்களின் கால்கள் நீளம் குறைவாகும். இரண்டு கால்களினதும் சமநிலைக்காக துண்டிக்கப்பட்ட காலை உயர்த்துவதற்காக இரண்டு மூன்று பாட்டாக்களை ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து ஒட்டி அணிவது) போடுறனான். இப்ப போடுறேல்ல. (கண்கலங்குகிறார்) ஆனால் நான் எல்லா வேலையும் செய்வன். ரெண்டு மாடு வைச்சிருக்கிறன். இதையும் மேய்ச்சிக் கட்டுறது நான்தான்”. தலையிலும், காலிலிலும் சிக்கியிருக்கும் எறிகணைத் துண்டுகளை சத்திரசிகிச்சை மூலம் எடுத்துவிடலாமே. ஏன் அதைச் செய்யாமல் இருக்கிறீர்கள் எனக் கேட்டால், ”அதை எடுத்தால் உயிருக்கு ஆபத்து. மூன்று பிள்ளைகள் இருக்கினம். அதால நான் எடுக்கேல்ல” என உடனடியாகவே பதில் சொல்கிறார்.

அவருக்கும் முட்டுவருத்தம். பம்ப் இழுத்துத்தான் உயிர் வாழுறார். கடுமையான வேலைகள் செய்ய ஏலாது. மூன்று பிள்ளைகளுக்கும் படிப்புச்செலவும் பார்க்க வேணும். நானும் கிளினிக் போறதென்றால் இங்கயிருந்து மாஞ்சோலைக்குத்தான் போகவேணும். அதுக்கு ரெண்டாயிரம் ரூபா தேவை. அந்தக் காசை  பிள்ளையளின்ர ரியூசன் காசுக்கு குடுக்கிறனான். கச்சான் உடைப்பு நெடுகலும் வறாது. ஒரு சீசனுக்குத்தான் வரும். ஆகலும் கஸ்ரமென்றால் கூலி வேலைக்குப் போறனான். காலம வேலைக்குப் போய் பதினொரு மணியைப் போல வந்திருவன். வெயில் கூடினால் தலை கொதிக்கத் தொடங்கிப்போடும். பிறகு கோபம் வரும். இந்தப் பிரச்சினையால சில நேரம் பள்ளிக்கூட கூட்டங்களுக்குக் கூடப் போறதில்ல.”

”எங்கட கஸ்ரங்கள வெளியில சொல்றதில்ல. காயப்பட்டத்துக்கு அரசாங்கம்கூட எந்த உதவியும் செய்யேல்ல. எங்கட சொந்த உழைப்பில்தான் சீவிக்கிறம். பிள்ளையள் வேற யாரோடயும்தான் சைக்கிளில் ஏறி பள்ளிக்கூடம் போறதுகள்”

”எங்கட அப்பா எனக்கு ஐஞ்சு வயசு இருக்கும்போதே காணாமலாக்கப்பட்டுவிட்டார். வவுனியாவுக்குப் போன இடத்தில திரும்பி வரேல்ல. நாங்கள் மூன்று சகோதரிகள். அம்மாதான் கஸ்ரப்பட்டு வளர்த்தவ. நான் பத்தாம் வகுப்பு மட்டும்தான் படிச்சிருக்கிறன். பிள்ளைகளையாவது படிப்பிச்சிப்போடோனும்” எனக் குறிப்பிடும் சுமதியிடம் இருக்கும் நம்பிக்கையோ மலையளவு. அவரின் உடலும், மனமும் தாங்கியிருக்கும் போரின் வலியோ அதைவிடப் பெரியளவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button