
கல் வியாபாரத்திற்காக அழிக்கப்படும் காதலியார் சமளங்குளம்
கட்டுரை | North East Narrative
படம் | T.Ravikaran
முல்லைத்தீவு மாவட்டத்தில், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கிறது காதலியார் சமளங்குளம் எனும் கிராமம். வன்னிப் பெருநிலப் பரப்பிலிலிருந்து ஆங்கிலேயர்களோடு போரிட்டு வீரமரணமடைந்த குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியனின் வரலாற்றோடு தொடர்புபடும் இந்தக் கிராமானது விவசாயத்திற்கும், கால்நடை வளர்ப்பிற்கும் பெயர்பெற்றதாகும்.
இலங்கையின் வடமாகாணத்தில் இருக்கின்ற வன்னிப் பெருநிலப் பரப்பு இயற்கை வளங்களால் நிரம்பப்பெற்றது. வனமும் நிலமும், கடலும் குளமும், மணலும் மலையும், பெருநிலத்தின் அடையாளங்களாக இருக்கின்ற இயற்கை வளங்கள். வன்னிப் பெருநிலப் பரப்பை இலங்கை அரச படைகள் கைப்பற்றுவதற்கு முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகளே நிர்வாகம் செய்தனர். அக்காலப் பகுதியில் வன்னி பெருநிலப்பரப்பிலிருந்து அனைத்துவிதமான இயற்கை வளங்களும் எதிர்கால சந்ததிக்காகப் பாதுகாக்கப்பட்டன.
வன்னிப் பெருநிலத்தின் பெரும்பகுதியை நிரப்பியிருக்கும் காட்டிலிருந்து ஒரு சிறு மரத்தைத் வெட்டுவதாயினும் புலிகளின் வனவளப் பிரிவினரிடம் அனுமதி பெறவேண்டியிருந்தது. அனுமதி பெறாது மரங்களை வெட்டியோர் சிறைத்தண்டனை வரை அனுபவிக்கவேண்டியுமிருந்தது. 2009 ஆம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்த காலத்திலிருந்து இற்றைவரைக்கும் வன்னி பெருநிலத்திலிருந்து அனைத்து இயற்கை வளங்களும் சூறையாடப்பட்டு வருகின்றன. அந்நிலத்தின் சுற்றுச்சூழல் அடையாளமே மாறிப்போகும் அளவிற்கு இயற்கை வள அழிப்பு இடம்பெற்று வருகின்றது.
இப்பின்னணியில்தான் வன்னி பெருநிலத்தின் பல பாகங்களிலும் காணப்படுகின்ற சிறு மலைக் குன்றுகளும், பாறை மேடுகளும் கிரனைற் வியாபாரிகளால் அகழப்பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயச்சூழலில், பண்டைய கால இராசதானியொன்றின் கட்டட எச்சங்கள் காணப்பட்ட வாவெட்டி மலை சட்டவிரோமான முறையில் கிரனேற் வியாபாரிகளால் அழிக்கப்பட்டது. தொல்லியல் திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டிய வாவெட்டி மலை அழிக்கப்பட்டதோடு, அங்கிருந்த தமிழர்களது வரலாற்றைக்கூறும் தொல்லியல் எச்சங்களும் அழிக்கப்பட்டன.
வாவெட்டி மலைக்கு அடுத்தபடியாகத்தான், அம்மலைப் பகுதிக்கு அண்மித்த கிராமமான காதலியார் சமளங்குளத்தில் காணப்பட்ட கருங்கல் பாறை மேடும் 2018 ஆம் ஆண்டிலிருந்து கிரனேற் வியாபாரிகளால் அகழப்பட்டது. ஊர் மக்களின் எதிர்ப்பையடுத்து 2022ஆம் ஆண்டில் அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன. ஆனாலும் அகழ்வின்போது ஏற்பட்ட பாரிய குழி மண்ணிட்டு நிரப்பப்படாமல் இன்றும் அப்படியே இருப்பதை அவதானிக்கமுடியும்.
தற்போது மீண்டும் அவ்விடத்தில் கிரனேற் அகழ்விற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு காதலியார் சமளங்குள மக்கள் தம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து கருத்துத் தெரிவித்த காதலியார் சமளங்குளப் பெண்ணொருவர்,
”2018ஆம் ஆண்டின்ர ஆரம்பத்தில ஏஜிஏ (பிரதேச செயலாளர்) மட்டத்தில முடிவெடுத்த பிறகு நிற்பாட்டினது. நிம்மதியா இருந்தம். சரியான டஸ்ட் (தூசி). எங்கட வீடு இதிலயிருந்து நூறு மீற்றர் தூரத்திலதான் இருக்குது. நாங்கள் எங்கட வீட்டு யன்னலுகளுக்கு கண்ணாடி போட்டிற்றம். எங்கட வீட்டிலயும் கல் உடைக்கிற அதிர்வினால ரெண்டு யன்னல் கண்ணாடியளும் வெடிச்சி, சுவருகளும் வெடிச்சது. எங்களுக்குப் பக்கத்து வீட்டில இன்றை வரைக்கும் கண்ணாடியும் போடேல்ல. சுவருகளும் வெடிச்ச படியேதான் கிடக்கு”. என கல் உடைக்கும் நிறுவனத்தினால் தங்கள் கிராமம் எவ்வளவுதூரம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை விபரித்தார்.
“..போனகிழமை ரெண்டு வாகனங்களில ஆக்கள் வந்து இறங்கினவ. நாங்கள் றோட்டில வந்து நின்றிட்டம். யாரையும் கல்லுடைக்கிற இடத்துக்கு போக விடேல்ல. வந்த முழுப்பேரும் சிங்கள ஆக்கள். பிரதேச சபை ஆள் ஒருத்தரும் வந்தவர். ஜீ.எஸ்ம் (கிராம சேவையாளர்) வந்தவர். இன்னொரு தமிழ் பெடியனும் வந்தவர். தாங்கள் இடத்தைப் பார்க்க வந்ததாக சொல்லிச்சினம். நாங்கள் இடத்தைப் பார்க்க போக வேண்டாம் என்று சொல்லீற்றம். நாங்கள் எங்கட ஊருக்க கல்லெடுக்க விடமாட்டம். எங்களுக்கு இதால நிறையப் பாதிப்பு. எங்கட மாடுகளுக்கு மேய்ச்சல் நிலம் இல்ல. அந்த மாடுகளக் கொண்டுவந்து இந்தக் காடுகரம்பையாத்தான் மேய்க்கிறனாங்கள். இங்க மாடுகள் மேய்க்க வேற இடமே இல்ல. இந்தக் குழிகளுக்குள்ள மாடுகள் விழுந்து செத்தால் யார் பொறுப்பு? இதுக்க கொண்டுவந்து கல்லுக் கிரேசரைப் போட்டால் மாடுகளை நாங்கள் கட்டித்தூக்கிறதோ? மாடுகள விடுங்கோ. எங்கட வாழ்க்கையப் பாருங்கோ. இதுக்க கிரேசர் போட்டால் அதில இருந்து வாற டஸ்ட் எங்க போகும். 100 மீற்றருக்குள்ள தான் எங்கட வீடுகள் இருக்கு. ஏற்கனவே இருந்த கிரேசரால வீடுகள் உடைஞ்சு போய்தானே கிடக்கு. அதைத் திருத்தவே வழியக் காணேல்ல. இதில இருக்கிற மிச்சசொச்சத்தையும் இடிச்சழிக்க திருப்பி வருகினம்..” என்றார் மிகுந்த கோபத்தோடு.

அக்கிராமத்தில் வசித்துவரும் இன்னொரு கிராமவாசி குறிப்பிடுகையில், ”உண்மையிலயே இங்க நிறைய வருத்தக்காரர் இருக்கினம். இதய வருத்தக்காரர், கிட்னி பெய்லியர் ஆகின ஆக்கள் இங்க அதிகம். இங்க கல்லுகள உடைக்கும்போது கேட்கிற சத்தம் அவையளப் பாதிக்கும். அதவிடவும் எங்கட வீடுகளுக்கு சரியான சேதம். சுவருகள், யன்னலுகள் எல்லாம் வெடிச்சிற்று. அதைத் திருப்பி எப்பிடி ஒட்டவைக்கிறது? கல்லுகள் உடைக்கும்போது வாற சத்தத்துக்கு சின்னப் பிள்ளையள் சரியா பயப்பிடுதுகள். எங்கட வீடுகள் கிரேசருக்குப் பக்கத்தில இருக்கிறதால சத்தம் காதைக் கிழிக்கும். எங்களுக்கு இந்தக் கிரேசர் வேண்டாம். ஏற்கனவே இதனால பட்டபாடுகள் போதும். திருப்பியும் யாரும் வந்தால் நாங்கள் போராட்டம்தான் செய்யவேண்டிவரும்” – என்றார்.
அக்கிராமத்தில் விவாசயத்தோடு கால்நடையும் வளர்த்து வருகின்ற ஒருவர் குறிப்பிடுகையில், ”கிணறுகளில தண்ணீர் இல்ல. குழாய்க்கிணறு கிண்டியும் பார்த்தம், அதிலயும் தண்ணியில்ல. ஆனால் அவையள் கிண்டின கல் குவாரியில பெரிய குளம் போல தண்ணி நிற்குது. எங்கட கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் போனதுக்கு அதுவும் காரணமோ தெரியேல்ல – என்கிற சந்தேகத்தையும் அவர் வெளியிட்டார்.
இந்தக் குரல்கள் சொல்லுவதெல்லாம் ஒன்றைத்தான். ”இயற்கையை நீ அழித்தால் இயற்கையால் நீ அழிவாய்”
#Mullaitivu #North #SriLanka #Lka #Environment #EcoFriendly #Sustainability #ClimateChange #GreenLiving #Biodiversity #Conservation #ProtectOurPlanet #Wildlife #ForestProtection