கண்ணீரால் நனைந்தது மழை
Story and Picture | North East Narrative
யாழ்ப்பாணத்திலிருந்து கூப்பிடுதொலைவில் இருக்கிறது அல்லைப்பிட்டி கிராமம். யாழ்.குடாநாட்டோடு இணைந்த தீவுக்கூட்டங்களில் ஒன்றாகிய ஊர்காவற்றுறையில் அல்லைப்பிட்டி கிராமம் இருக்கிறது. இக்கிராமத்தில் மிகத் தொன்மையான காலத்திலிலிருந்தே தமிழ் மக்கள் வாழ்ந்தமைக்கும், கடல்சார் வணிகத்தில் ஈடுபட்டமைக்குமான தொல்லியல் ஆதாரங்கள் உண்டு.
இந்தக் கிராமத்தில்தான் ”மம்மி” என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் நோபர்ட் பவுலீன் அம்மா (80) வசித்து வருகிறார். அவரைப் பார்த்ததும், வயதில் மூத்தவரான இவர், கடந்த காலம் தொடர்பான நினைவுகளை தவறவிட்டிருப்பார் என்கிற முடிவுக்கு வருவது பொதுவானது. ஆனால் அவரோ, ”எனக்கு எல்லாமே ஞாபகமிருக்கு தம்பி. 1990ஆம் ஆண்டு ஆவணி மாசம் 25ஆம் திகதி ஒரு செவ்வாய்க்கிழமை, காலமை, திடீரென வானத்தில ஆமியின்ர ஹெலிகொப்டர், புக்காரா எல்லாம் சுத்தினது (பறத்தல்). எங்களுக்கு ஒன்றும் தெரியாது. வெளியால பார்த்தால் நாலு பக்கங்களிலிருந்தும் ஆமிக்காரங்கள் வாறாங்கள். பயத்தில இங்க இருந்த முழுப்பேரும் ஓடிப்போய் சென். பிலிப் தேவாலயத்தில தஞ்சமடைஞ்சம்.
மம்மியின் வீட்டுக்கு நேரேதிரேதான் இருக்கிறது சென்.பிலிப் தேவாலயம். ஆகவே மம்மி தன் குடும்பத்தாரோடு மிகவிரைவாகவே தேவலாயத்தினுள் தஞ்சமடைந்திருக்கிறார்.
”..தேவாலயத்துக்குப் போய் கொஞ்ச நேரத்தால அங்க வந்த ஆமிக்காரர், எல்லாரையும் பார்த்திற்று, அங்க இருந்த பத்தொன்பது, இருவது வயது அளவான ஆம்பிளப் பிள்ளையள பிடிச்சிக்கொண்டு போனாங்கள். அதில என்ர மகனையும் பிடிச்சிக்கொண்டு போனாங்கள். அவருக்கு பேர் நோபட் யூலன் ரமேஸ். 1970ஆம் ஆண்டு ஐப்பசி மாசம் 20ஆம் திகதி பிறந்தவர். இப்ப மகன் இருந்திருந்தால் அம்பத்தைஞ்சு வயசு. அவனுக்கு இயக்க (தமிழீழ விடுதலைப் புலிகள்) தொடர்பு ஒன்றுமே இல்ல. வேலணை சென்ரர் கொலேஜ்சில ஏ.எல் கொமர்ஸ் படிச்சிக்கொண்டிருந்தவர். நல்லா படிப்பார். பத்தொன்பது வயது. எனக்கு ஒரேயொரு ஆம்பிளப்பிள்ளை அவர்தான். மற்ற நாலும் பொம்பிளப் பிள்ளையள். பரந்தன் – நவஜீவனத்தில (சிறுவர் இல்லம்) விட்டுத்தான் அவரைப் படிப்பிச்சனான். ஏ.ஏல் படிக்கவென்று, நான்தான் அல்லைப்பிட்டிக்கு கூட்டிக்கொண்டு வந்தனான். ஏ.எல் எக்சாமுக்கு மூன்று மாசம்தான் இருந்தது. நல்லா படிச்சிக்கொண்டிருந்தான்..” தன் ஒரே மகனின் நினைவுகளில் மூழ்கிப்போகிறார் மம்மி.
”..தேவாலயத்திலயிருந்து எழுபத்தைஞ்சு பெடியளளவில பிடிச்சவங்கள். ஏன் பிடிக்கிறாங்கள், எங்க கொண்டுபோறாங்கள் என்று எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் குழறி, அழுது பின்னால போனம். அதுக்கும் விடேல்ல. எங்கள திரத்திவிட்டிற்று, பிடிச்ச அவ்வள பேரையும் மண்டைதீவுக்குக் கொண்டு போயிற்றாங்கள்..” அப்போதுதான் தன் மகனைக் கடைசியாகப் பார்த்திருக்கிறார் மம்மி. அவ்வேளையின் மழைக்குத் தயாராகிக்கொண்டிருந்த வானம், மம்மியின் வீடு முழுவதையும் இருளால் நிரப்பிக்கொண்டிருந்தது. இருளின் நிசப்த்தத்தை உடைத்துக்கொண்டு மம்மி தொடர்ந்தும் கதைத்தார்.

”..பிடிச்சிக்கொண்டு போன ஆக்களில வயதுகூடிய ஆக்கள அல்லைப்பிட்டி சந்தியில இருந்த அலுமினியம் தொழிற்சாலையில வைச்சிருந்தவங்கள். அதில என்ர மனுசன், மகளின்ர மனுசனாக்கள் இருந்தவ. அங்கயிருந்து பதினெட்டு, பத்தொன்பது, இருபது வயதுப் பெடியள மண்டைதீவுக்குக் கொண்டு போயிற்றாங்கள். அன்றையநாளே அலுமினியம் தொழிற்சாலையில் தடுத்து வச்சிருந்த வயதான ஆக்கள விட்டிற்றாங்கள். அதில என்ர மனுசனயும் விட்டிருந்தாங்கள்..” கணவன் உயிரோடு வந்துவிட்டார் என்ற சந்தோசமிருப்பினும், தன் மகனை விடுவிக்கவில்லை என்கிற கவலை மம்மியை நிலைகுலையச்செய்திருந்தது. அந்த ஏக்கத்தினைத் தளதளக்கும் அவரின் குரல் வெளிப்படுத்திவிடுகிறது. இவற்யையெல்லாம் மீறி இவ்விடத்தில் பகிர வேறொரு துயரக் கதையும் மம்மியிடம் உள்ளது.
”..அந்த நேரம் எங்கட அம்மா வீட்டில நோய்வாய்ப்பட்டு இருந்தவ. நாங்கள் சென்.பிலிப் தேவாலயத்திற்குப் போகேக்க அவவை கொண்டு போகமுடியேல்ல. அவா நடக்கமாட்டா. விட்டிற்றுத்தான் போனம். அன்றைக்கு இரவு 9.00 மணிபோல அவா வீட்டிலேயே இறந்திற்றா. இறந்தவுடன பாதரிட்ட (கத்தோலிக்க மதகுரு) போனம். எப்பிடியாவது அவவின்ர அடக்கத்தை (இறுதிக்கிரியை) சவக்காலையில் செய்யவேணும் என்று கேட்டம். ஆனால் அவரலாயும் ஒன்றும் செய்ய முடியேல்ல.
”..அடுத்தநாள் விடிஞ்சிற்று. விடியப்புறம் ஆமிக்காரர் வந்து எல்லாரையும் மண்கும்பான் போகச்சொன்னாங்கள். மண்கும்பானுக்குப் போக இங்கத்தய சனம் வெளிக்கிட்டது. அந்நேரம் மண்டைதீவில இருந்தும் சனம் குழறிக்கொண்டு வருது…”
”..சனத்தோட சேர்ந்து நான் எப்பிடி போறது. இறந்துபோன அம்மாவ வீட்டில வளத்தியிருக்கு (கிடத்திவிடுதல்). எனக்கு நாலு பொம்பிளப்பிள்ளையள். எப்பிடி தனிய ஊரில இருக்கிறது. அக்காவின்ர மகளும் எங்கள இங்க விட்டிற்றுப்போக விரும்பேல்ல. வலுக்கட்டாயமாக எங்கள மண்கும்பானுக்குக் கூட்டிக்கொண்டு போனா..“
”..பிறகு ஊர்ப்பெடியள்தான் வளவுக்குள்ள (வீட்டுக்காணி) குழி வெட்டி அம்மாவை தாட்டதாகச் (புதைப்பது) சொன்னாங்கள். அம்மாவுக்கு எந்தச் சடங்கும் செய்யேல்ல என்ற வருத்தம் எனக்கு இப்பவும் இருக்கு..” தன் தாய் பற்றிய நினைவுகளிலிருந்து மம்மி மீண்டுவர நீண்டநேரம் எடுத்தது. என்பது வயதைக் கடந்திருக்கும் அந்தத் தாயிடமிருக்கிற வலிகள் ஒன்றை விஞ்சிய இன்னொன்றாக இருக்கின்றன என்பதே உண்மை.
”..மண்டைதீவிலயிருந்து தப்பிவந்த பெடியள் மகனைப் பற்றி சொன்னவங்கள். மம்மி, உங்கட மகன் ரமேஸ், ஆமிக்காரன் விட்டதும் வருவாராம். உங்கள கவலப்படவேண்டாம் என்று சொல்லிவிடச்சொன்னவர். இருபத்தைஞ்சு பேர்தான் அங்க நிண்டவங்களாம். வேலைகள் இருக்கு, அது முடிய அனுப்புவாங்கள் என்றும் தப்பிவந்த பெடியள் சொன்னவங்கள்..”
”..ஆனால் கனக்கப் பேர பிடிச்சவங்கள். இடையிடையே சாக்கொன்றிட்டாங்கள்..”
”..நாங்கள் இடம்பெயர்ந்து மண்கும்பானில இருக்கும்போது, அங்கயும் ஆமிக்காரர் வந்தவங்கள். அங்க தங்கியிருந்த பெடியங்களையும் பிடிச்சிக்கொண்டு போனவங்கள். அவங்களுக்கும் என்ன நடந்ததென்று தெரியேல்ல..” ஆழமாக யோசித்து, நிதானித்து தன் நினைவில் எஞ்சியவைகளைச் சொன்னார் மம்மி. ஆனால் அவற்றை அவரால் முழுவதுமாக சொல்ல முடியவில்லை. இதையெல்லாம் சொல்லி என்ன பயன் என்கிற எண்ணம் மேலிட, இந்த உரையாடலுக்கு முடிவுரையை சொன்னார் மம்மி.
”..என்னசெய்யிறதய்யா, நாங்களும் கேட்கிற ஆக்களுக்கெல்லாம் இதையேதானே சொல்லிக்கொண்டிருக்கிறம். எனக்கு ஒரேயொரு மகன். அவனை நினைக்காத நேரமில்லை. அவனுக்காக அழாத நாளில்ல. கவலையாகிடக்கு. கண்ணுக்கு முன்னால ஏதாவது நடந்திருந்தால் சடங்குகளை செய்துபோட்டு, அவனில்ல என்று ஆறியிருப்பன். கண்ணுக்கு முன்னால உயிரோட பிடிச்சிக்கொண்டு போன மகனுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் இருக்கிறன்..”
”..1990ஆம் ஆண்டு இராணுவத்தளபதி கெப்பேகடுவ யாழ்ப்பாணம் வரேக்க, பிடிச்சக்கொண்டு போன பிள்ளையளின்ர தாய்மார் எல்லாரும் வெள்ளைக்கொடிய பிடிச்சிக்கொண்டு போராடினம். வேலைய முடிச்சிற்று உங்கட பிள்ளையள விடுவம் என்று கொப்பேகடுவ சொன்னார். ஆனால் எந்த முடிவும் இல்ல..”
”..அதுக்குப் பிறகு எத்தினை அலைச்சல். போராட்டம்..! ஜனாதிபதி ஆணைக்குழு, மனிதவுரிமை ஆணைக்குழு, செஞ்சிலுவை சங்கம், பொலிஸ், ஆமி எத்தனையோ இடங்களிலிருந்து வந்து எங்கள பேட்டி கண்டு….என்ன நடந்தது..?

”.இந்த வீட்டை நான் வெளிநாட்டுக்குப் போய் வேலைசெய்து 1981ஆம் ஆண்டு கட்டினன். பிடிபடேக்க இப்பிடித்தான் இருந்தவர். அந்தப் படத்தில இருக்கிற ஜன்னல்தான் இது. மகன் கடைசியா நின்ற வீடும், யன்னலும் இருக்கு. மகன்தான் இல்ல..! தன் மகன் நினைவாக எஞ்சியிருக்கும் நிழற்படத்தைக் காட்டி நினைவைக் கிளறுகிறார் மம்மி. நினைவுகளின் வேகத்தைவிட வேகமாக மாரி மழையும் பெய்யத்தொடங்கியது. அந்த மழைக்கு இணையாக மம்மியும் அழுதுகொண்டிருந்தார். இப்படி பிள்ளைகளைப் பறிகொடுத்த எத்தனை ஆயிரம் தமிழ் தாய்களின் கண்ணீரை இந்த மழை கடந்துவந்திருக்கும்..!