
எல்லோர் வயிற்றிலும் அடிக்கப்போகும் யுத்தத்தின் பசி
கட்டுரை | Amalraj Francis | படங்கள் Aljazeera, CNBC
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் யுத்தம் ஒரு வாரத்தைக் கடந்துகொண்டிருக்கிறது. இரண்டாம் உலக போரிற்குப் பின்னர், அதன் அத்தனை சாயல்களோடும், உலகின் பேரமைதியை மிரள வைத்துக்கொண்டிருக்கும் போர் இது. கிட்டத்தட்ட 337 பில்லியன் டொலர்களை முதலாம் உலகப்போரும், 1’300 பில்லியன் டொலர்களை இரண்டாம் உலகப் போரும் தின்று தீர்த்துப் பெரும் அழிவுகளிற்கு வித்திட்ட பின்னர், பல பில்லியன்களைக் கொட்டித் தாரைவார்த்து நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது இந்தப் போர். ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலின் போர், சுமாராக ஒரு நாளைக்கு 200-900 மில்லியன் டொலர்களைக் கரியாக்குகிறது. இந்தப் போரின் முதல் நாளில் மட்டும் அமெரிக்கா செலவு செய்த தொகை 779 மில்லியன் டொலர்கள் என்றால் இந்த அநியாயத்தின் கனத்தைப் பாருங்கள்.
இந்தத் தொகையெல்லாம் வெறும் தோராயமான கணக்குகள்தான். உண்மையில் இந்தத் தொகை இவற்றைவிட பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என்கிறார்கள் போரியல் நிபுணர்கள். காரணம் போருக்கான செலவை வெளிப்படையாக பிரஸ்தாபிப்பதன் பின்னால் இருக்கும் அரசியலும் தந்துரோபாயமும் ஆபத்தானது. ஆக, இவற்றிலிருந்து நாம் ஒரேயொரு பொதுவான முடிவுக்கு மட்டும் வந்துவிட முடியும். ‘யுத்தத்தின் பசியை எதைக்கொண்டும் தீர்த்துவிட முடியாது!’
இந்த அமெரிக்காவின் ‘எபிக் ஃபியூரி’, ஈரானையும் உலக அமைதிக்கெதிரான அதன் அச்சுறுத்தலையும் தண்டிக்க ஆரம்பிக்கப்பட்டதாகச் சோடிக்கப்பட்டாலும், இறுதியில் இந்தப் பிரளயத்தால் ஒரு கடைக்கோடி கிராமத்திற்குக்கூட அமைதி கிடைக்கப்போவதில்லை. மாறாக இப்பேரண்டத்தின் ஒட்டுமொத்த மனிதகுலமும் அனுபவிக்கப்போகும் சொல்லொண்ணாத் துயரங்களைத்தான் இந்தப்போர் அறுவடை செய்யப்போகிறது. இங்கு ‘ஒட்டுமொத்த மனிதகுலமும்’ என்கிற சொற்களைக் கவனிக்க வேண்டும். இந்தப் போர் ஈரானுக்கு எதிரானது மட்டுமல்ல, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரானது மட்டுமல்ல, மாறாக ஒட்டுமொத்த பேரண்டத்திற்கும், அதன் தூய அமைதிக்கும், ஒழுங்கிற்கும், பொருளாதாரத்திற்கும், மனிதகுல இருப்பிற்கும் எதிரான போர். ஆதலால் இந்தப் போரைப், ‘பக்கத்து வீட்டு வேலிச் சண்டை’ என்று ஆசிய நாடுகளால் கடந்துபோய்விட முடியாது. மத்திய கிழக்கில் வெடிக்கும் ஒவ்வொரு சன்னத்தின் சிறு தீப்பொறியும் ஒவ்வொரு நிமிடமும் இலங்கை போன்ற ஆசிய நாடுகளின் மடிகளில் விழுந்துகொண்டேயிருக்கிறது. நமக்குத் தெரியாமலேயே நாமும் இந்தப் போரினுள் உள்வாங்கப்பட்டிருக்கிறோம். இந்த மத்திய கிழக்கு நெருக்கடியால், நம்முடைய சோற்றுப் பருக்கைகளுக்குக்கூட பாதுகாப்பற்ற ஒரு நிலை உருவாகியிருக்கிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடி, இலங்கை போன்ற ஆசிய நாடுகளை எப்படிப் பாதிக்கப்போகிறது என்பதை விளங்கிக்கொள்வதற்கு, உலக வரைபடத்தில் இந்த வளைகுடா நாடுகளின் வகிபாகத்தைக் கொஞ்சம் புரிந்துகொள்வது அவசியமாகிறது. உலகப் பொருளாதாரத்தின் மிக முக்கிய தூண்களாக அமையும் எரிசக்தி உற்பத்தி மற்றும் பிரதான கடல்வழி வணிகப் பாதை போன்றவற்றைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்

உலக எண்ணெய் வணிகத்தின் 20% இந்த ஹோர்மூஸ் நீரிணை மூலமே பயணிக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தியாகிவிட்டது. ஆனால் இதிலிருக்கும், நமக்குத் தேவையான ஒரு முக்கிய செய்தியைக் கவனிக்க வேண்டும். ஆசியாவின் 80% ஆன எரிபொருள் இந்த ஹோர்மூஸ் நீரிணையூடாகவே வந்து சேர்கிறது. இதில் அதிகமான எரிபொருளை இறக்குமதி செய்யும் நாடுகளாக சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா மற்றும் பாக்கிஸ்தான் போன்றவை இருக்கின்றன. இலங்கையின் எரிபொருள் வரத்தும் இந்த நீரிணையூடாகத்தான் நடக்கிறது. இப்படியான ஒரு கடல் மார்க்கம் மூடப்பட்டால் ஆசிய நாடுகளின் எரிபொருள் சந்தை எப்படியான திண்டாட்டத்தை எதிர்நோக்கும் என்பதை நீட்டி முழக்கி விளக்கத்தேவையில்லை. ஒன்றை மறந்துவிடக்கூடாது. இந்த ஹொர்மூஸின் வாயை கடந்த மாசி மாதம் 28 ஆம் திகதி அடித்து மூடிவிட்டது ஈரான். இந்த ஹோர்மோஸ் என்கிற ஒரு தங்க வாசலை ஒரு வாரம் மூடி வைத்திருப்பது அவ்வளவு பெரிய ஆபத்தென்று சொல்வதற்கில்லை. ஆனால், இந்த வாசல் ஒருவாரத்திற்கு மேலாக மூடியே இருக்குமானால் நிலைமை மோசமாகும். கச்சா எண்ணெய்யின் விலை எகிறும். உலகம் எரிபொருள் இன்றி வரண்டு போக ஆரம்பிக்கும். நாம் வாழும் உலகை உயிர்ப்போடு வைத்திருப்பது ஒன்றேயொன்றுதான். எரிசக்தி!
அண்மையில் பொருளாதாரத் துறையில் தேர்ச்சிபெற்ற நண்பர் ஒருவரோடு பேசிக்கொண்டிருந்தபோது, சங்கடமான கேள்வியொன்றை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. “போரிற்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது தெரியுமா?”. முட்டாள் மனிதர்கள் அதிகாரக் கதிரையில் போய் உட்கார்ந்ததும் ஒட்டுமொத்த நாட்டின் திறைசேரியையும் விலையாகக் கொடுத்து யுத்தத்தை வாங்கிப் போட்டுவிடுகிறார்கள். அந்த முட்டாள்கள் இவ்வளவு பெரிய தொகையை எங்கிருந்து பெறுகிறார்கள் என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே நண்பர் பதிலைச் சொன்னார். “மக்களிடமிருந்துதான்!”
அப்படியென்றால் அமெரிக்கா யுத்தம் செய்தால் அதற்கான பணத்தை அமெரிக்கர்களே கொடுக்கிறார்கள் என்று ஆகிவிடுகிறது இல்லையா? இல்லை, அமெரிக்கர்கள் மட்டுமல்ல, அனலைதீவிலிருக்கும் அந்தோனிதாசன் என்கிற ஒரு தமிழ் மீனவனும் அந்த யுத்தத்திற்குப் பணம் கொடுக்கிறான். பாவம், அது அவனுக்குத் தெரிந்திருக்கு வாய்ப்பில்லை. அவனுடைய மோட்டார்சைக்கிள் நுகர்வது சதா ஒரு லீட்டர் பெற்றோல் மட்டும்தான். ஆனால் அவன் அந்த எரிபொருளுக்குக் கொடுக்கும் பணம், டொலராக மாறி, எரிபொருள் கம்பனிகளுக்குச் செலுத்தப்பட்டு, அமெரிக்கா அல்லது வளைகுடா போரில் பங்கெடுக்கும் ஒரு நாட்டின் திறைசேரியில் வரியாகப் போய் குந்திக்கொண்டுவிடுகிறது. பின்னர் அந்த ஒற்றை டொலரைப் போன்ற ஆயிரம் டொலர்கள் கூட்டுச் சேர்ந்து, தேசிய பாதுகாப்பு என்று சோடிக்கப்பட்ட ஒரு ஏவுகணையை கொண்டுவந்து நிறுத்துகிறது. இப்போது சொல்லுங்கள், நடந்துகொண்டிருக்கும் போரில் அந்தோனிதாசனின் ஒரு டொலராவது இருக்கிறதா இல்லையா?
இப்படித்தான் இந்த வளைகுடாப் போரிற்கு நம் ஒவ்வொருவரையும் கொடையாளர்களாக மாற்றி வைத்திருக்கிறது இந்த நவீன உலகம்.
இன்று உலகில் நடக்கும் வணிக செயற்பாடுகளில் மிகவும் பிரமாண்டமான வர்த்தகம் இந்த எண்ணெய் வர்த்தகம்தான். தவிர, உலகின் அத்தனை நுகர்வுப் பொருளின் விலையையும் தீர்மானிப்பதும் இந்த எண்ணெய்தான். உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிக்கும்போது சாவகச்சேரி மரக்கறிச் சந்தையில் விற்பனையாகும் தக்காளிப்பழத்தின் விலையும் அதிகரிக்கும். அதேபோல, எரிபொருள் விலை ஏறும்போது, மன்னார் தீவுக்கடலிலிருந்து கிடைக்கும் இறாலின் விலையும் எகிறும். இப்படித்தான் கச்சா எண்ணெய்யும், உலக வர்த்தகமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கிறது. உலகை இயக்கிக்கொண்டிருப்பது கடவுளல்ல, கச்சா எண்ணெய்தான் – விசுவாசிகள் மன்னிக்க.
இப்படி அத்தனையையும் தீர்மானிக்கும், மொத்த உலகத்தின் கட்டுப்பாட்டையும் கைகளுக்குள் பிடித்து வைத்திருக்கும், உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் யார்யாரென்று பாருங்கள். சவுதி அரேபியா, ரஷ்யா, அமெரிக்கா, ஐக்கிய அமீரகம், ஈராக், ஈரான், குவைத், கனடா, ஓமான். உலகின் உண்மையான எஜமானர்களின் பட்டியல் இது. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, இந்த பட்டியலில் எத்தனை வளைகுடா நாடுகள் இருக்கின்றன என்பதுதான். உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் வியாபாரத்தில் 40-50 வீதமான ஏற்றுமதி சவுதி, ஈராக், அமீரகம், குவைத் மற்றும் ஓமான் போன்ற வளைகுடா நாடுகளிலிருந்தே வருகின்றன. இங்குதான் இப்போது பெரும் போர் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. எப்படியானதொரு அழிவு இது?
இதனால்தான் ஈரானுக்கு எதிராக நடந்துகொண்டிருக்கும் யுத்தம், உலகின் ஒட்டுமொத்த செல்வச்செழிப்பின் மீதும் எறியப்பட்டிருக்கும் மிகப் பயங்கரமான ஏவுகணை என்கிறேன். கடந்த ஒருவாரமாக கச்சா எண்ணெய்யின் விலை சடசடவென உயர்ந்துகொண்டிருக்கிறது. யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னர் 60 டொலராக இருந்த ஒரு பீப்பாய் ப்ரெண்ட் கச்சா எண்ணெய், இந்தவாரம் 90-100 டொலர்களாக உயர்ந்திருக்குக்கிறது. கிட்டத்தட்ட 50% அதிகரிப்பு. வரும் நாட்களில் 200 டொலர்களை நெருங்கும் என எச்சரிச்சிருக்கிறது ஈரான். யுத்தம் ஆரம்பித்து இப்போது வெறும் ஒரு வாரம்தான் ஆகிறது. இதே போர் மாதக்கணக்கில் தொடர்ந்தால் எண்ணெய் விலையின் அதிகரிப்பைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இதன் தாக்கம் இப்போது உலகின் எல்லாப் பாகங்களில் விற்பனையாகும் எரிபொருளின் விலையிலும் பிரதிபலிக்க ஆரம்பித்திருக்கிறது. பாகிஸ்தான், இலங்கை போன்ற ஆசிய நாடுகள் ஏலவே தங்கள் எரிபொருள் விலைகளை அதிகரித்துவிட்டன. அடுத்தது என்ன, நான் மேலே சொன்னது போல இந்த ‘டோமினோ எபெக்ட்’ தன் வேலையைக்காட்ட ஆரம்பித்துவிடும். நாளையோ மறுதினமோ நீங்கள் வாங்கப்போகும் ஒரு கிலோ வெங்காயத்தின் விலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை அவதானித்துப் பிரமித்துப்போவீர்கள்.
அடுத்ததாக இந்தப் போரில் அதிகம் பாதிக்கப்படுவது அல்லது பாதிக்கப்படப்போவது உலகெங்கிலும் வாழும் ‘சேமிப்பாளர்கள்தான்’ என்கிறார் ‘Rich Dad Poor Dad’ நூலின் ஆசிரியர் ரொபேர்ட் கியோசாகி. இதைப் புரிந்துகொள்வது அவ்வளவு ஒன்றும் கடினமான காரியமில்லை. யுத்த செலவீனம் கடுமையாக அதிகரிக்கிறபோது அதை சமாளித்துக்கொள்வதற்கு குறித்த நாடுகள் சில அவசர நடவடிக்கைகளை எடுக்கும். திறைசேரியிலிருக்கும் சேமிப்பால் இத்தகையதொரு பிரமாண்ட போர் இயந்திரத்தை நீண்ட நாட்களுக்கு கட்டியிழுக்க முடியாது. ஆதலால், ஒன்று கடன் என்கிற உடனடி தீர்வை நோக்கிப் போகவேண்டும். அல்லது, பல வளர்ச்சியடைந்துகொண்டிருக்கிற நாடுகளைப்போல அதிகமான பணத்தை அச்சிட வேண்டும். இவற்றைத்தாண்டியதான வேறு வழிகள் எதுவும் கிடையாது. இவ்வாறான செயற்பாடுகள் வெறும் குறுகிய காலத்திலேயே பணவீக்கத்துக்கு வழிவகுக்கும். பணவீக்கத்திற்கு இந்தக் காரணங்களை விட வேறு சில காரணங்களும் உண்டு. கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிப்பு, பொருளாதார நெருக்கடி, பொருட்களுக்கான தட்டுப்பாடு இப்படிப் பல. இத்தனை காரணங்களும் இனிவரும் குறுகிய காலத்திற்குள் அமெரிக்காவை பயமுறுத்தும் என்கிறார்கள் பொருளியலாளர்கள். இப்படி நடந்தால், டொலரின் பணவீக்கம் உலகின் அத்தனை நாடுகளிலும் ஒரு பெரும் பூதமாக வெடிக்கும். இது அந்த நாடுகளின் பொருளாதாரத்திலும், சர்வதேச வணிகத்திலும் பெரும் பாதிப்புக்களை உண்டுபண்ணும். எரிபொருள் மட்டுமல்லாது, மில்லியன் பெறுமதியான அத்தனை உலக வணிகமும் டொலர் சார்ந்தே இயங்குகிறது. அதைச் சுற்றியே சுழன்றுகொண்டிருக்கிறது.
இது ஆசிய நாடுகளில் இரண்டு வகையான ஆபத்துக்களை உண்டுபண்ணலாம். ஒன்று, இறக்குமதிக்கான விலை அதிகரிப்பு. ஐந்து டொலர்களுக்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு பொருளை, இந்த நாடுகள் எட்டு டொலர்களுக்கு இறக்குமதி செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இரண்டாவது, வங்கிகளில் இருக்கும் நிலையான மற்றும் சேமிப்பு வைப்புக்களின் பெறுமதி சரிவடையும். சேமிப்பாளர்கள் தங்கள் சேமிப்பின் பெறுமதி ஒரே வாரத்தில் திடுமென குறைந்துபோவதைப் பார்த்து அதிர்ந்துபோவார்கள். ஒருபக்கம், இறக்குமதிக்கான செலவு அதிகரிப்பதால் பொருட்களின் விலைகள் அதிகரிக்க, மறுபக்கம் கையிலிருக்கும் நம்முடைய பணத்தின் பெறுமதி வீழ்ச்சியடையும். இவ்விரண்டும், ஒரே காலத்தில் நிகழ்வதால் மனிதர்களின் வாங்குதிறன் கடுமையாக பாதிப்படைவதைத் தவிர்க்க முடியாமல் போகும். அன்றாட வாழ்க்கைச் செலவைக் கொண்டிழுக்க முடியாமல் தவிக்கும் பெருவாரியான மக்களை 2022 இற்குப் பிறகு நாம் மீண்டும் பார்க்கப் போகிறோம்.
இதைத்தவிர, இந்த டொலர் நெருக்கடி, 2022 இற்குப் பின்னரான இலங்கையின் பொருளாதார வளர்ச்சிப் பாதையின் நடுவில் பெரும் பாறாங்கல்லைத் தூக்கிப்போடப்போகிறது. IMF இனால் நிர்ணயிக்கப்பட்ட 2.3% மொத்த உள்நாட்டு உற்பத்தி இலக்கை குறித்த காலத்தில் அடையமுடியாமல் போகும் வாய்ப்பு இருக்கிறது. இந்த 2.3% ஐ எட்ட உதவும் முக்கிய கூறாகிய இலங்கையின் தேயிலை ஏற்றுமதி பெரும் சவால்களைச் சந்திக்கப்போகிறது. இலங்கையிடமிருந்து பெருவாரியாக தேயிலையைக் கொள்வனவு செய்யும் பிரதான நாடுகளின் பட்டியலைப் பாருங்கள் – ஈராக், ரஷ்யா, துருக்கி, லிபியா, ஐக்கிய அமீரகம், ஈரான், சீனா, சவூதி அரேபியா. இவற்றில் அதிகமானவை மத்திய கிழக்கு நாடுகள். 2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் மட்டும் மத்திய கிழக்கு நாடுகள் (ஈராக், சவூதி அரேபியா, அமீரகம், ஈரான்) கொள்வனவு செய்த தேயிலையின் மொத்தப் பெறுமதி 14.4 பில்லியன் அமெரிக்கா டொலர்கள். தற்போது இந்தப் பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கும் அமைதியின்மையும், பயண வழித் தடங்கல்களும் இலங்கையின் தேயிலை, ஆடை போன்ற பாரிய ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்கு பெரும் சவாலாக அமையப்போகிறது.
மத்திய கிழக்கு நாடுகளுடனான இலங்கையின் பொருளாதார முடிச்சு பல பரிமாணங்களைக் கொண்டது. இது வெறும் எரிபொருளோடும் தேயிலையோடும் முடிந்துவிடுவதல்ல. இலங்கைப் பொருளாதாரத்தின் இன்னுமொரு முக்கிய அங்கமாக இருப்பது இந்த நாடுகளிலிருந்து இலங்கையர்களூடாகக் கிடைக்கும் வருவாய். வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களிடமிருந்து இலங்கைக்கு வரும் பணம் சுமாராக ஒரு மாதத்திற்கு 500-700 மில்லியன் டொலர்கள் என ஒரு மதிப்பீடு சொல்கிறது. இலங்கை இப்போது இருக்கும் பொருளாதார நெருக்கடியில் இது சிறு தொகையல்ல, ஒரு பிரமாண்ட ஜாக்பொட். அதிகமான இலங்கையர்கள் இந்த நாடுகளில் வேலைதேடிப் போவதற்கான மிக முக்கிய காரணங்களாக அதிகமான வேலை வாய்ப்பு, உயர்ந்த சம்பளம், மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இப்போது நடந்துகொண்டிருக்கும் அத்தனை பயங்கரங்களும் இந்த மூன்று சூழ்நிலைகளையும் கேள்விக்குட்படுத்துவதாக அமைந்திருக்கிறது. கடந்த ஒருவாரமாக இந்த நாடுகளிலிருக்கும் ஆயிரமாயிரம் இலங்கையர்களின் மனதில் தீவிரமாக ஓடிக்கொண்டிருக்கும் எதிர்காலம் பற்றிய பயத்தை நம்மால் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். வளைகுடா நாடுகளில் நிலவும் பதட்டம், இப்படி இலங்கையிலிருக்கும் ஆயிரமாயிரம் குடும்பங்களின் பொருளாதார பலத்தை பெரும் அச்சத்திற்குள் தள்ளிவிடுகிறது. ஏன் நம்முடைய ஒட்டுமொத்த திறைசேரியையும்தான்.
இலங்கை, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் போன்ற சுற்றுலாத்துறையை பெரிதும் நம்பியிருக்கும் நாடுகளின் வருவாயும் இப்போது நடுநடுங்க ஆரம்பித்திருக்கிறது. இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்திருப்பதாக அண்மை
இறுதியாக தற்போது உலகத்தை உலுக்கிக்கொண்டிருக்கும் வளைகுடா போரினால் இலங்கை போன்ற ஆசிய நாடுகள் எதிர்கொள்ளப்போகிற இராஜதந்திர சவால்கள் பற்றியும் கொஞ்சம் கவனிப்பது நல்லது. குறித்த பாதிப்பு இலங்கைவாழ் மக்களை நேரடியாகப் பாதிக்காத போதும், இது இலங்கை அரசின் இராஜதந்திர உறவுகளிலும், அது கட்டியெழுப்பியிருக்கும் இருதரப்பு உறவுகளிலும் குறிப்பிடத்தகுந்த பாதிப்புக்களை உண்டுபண்ணலாம். இந்த பாதிப்புக்கள் நீண்டகால இராஜதந்திர உறவிலும், இருதரப்புப் பொருளாதார பங்காளித்துவத்திலும் குறிப்பிட்ட பின்னடைவுகளை ஏற்படுத்தலாம். அண்மையில் இந்து சமுத்திரத்தில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கடல் படை மற்றும் பயணிகளின் மீட்பு நடவடிக்கை அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அரச மட்டங்களில் ஏற்படுத்திய அதிர்வுகள் கடைசியில் அமைதியாகப் போய் முடிந்தது பெரும் நின்மதியைக் கொடுக்கிறது. குறித்த நடவடிக்கை இலங்கை மீதான அமெரிக்காவின் நல்லெண்ணத்திலும் நம்பிக்கையிலும் எறியப்பட்ட சிறு கல்லென எண்ணுவது முற்றிலும் மிகையாக இருக்க முடியாது. இந்த விடயத்தை இலங்கை கையாண்ட விதம் பாரதூரமான விளைவுகளிலிருந்து இலங்கையைக் காப்பாற்றியிருக்கிறது என்றே எண்ணத்தோன்றுகிறது. இந்தப் போரின் நீட்சியில் அமெரிக்கா சார்ந்து எடுக்கப்படும் முடிவுகள் வெளிப்படைத்தன்மையோடும், மனிதாபிமானத்தை முன்னிறுத்தி நடுநிலை வகிக்கும் சித்தாந்தத்தோடும் நகர்வது இலங்கையின் இராஜதந்திர உறவுகளில் எவ்வித விரிசலும் ஏற்படாதவாறு இலங்கையைக் காப்பாற்றும். மறுபுறம், இலங்கையின் நடவடிக்கைகள் ஒருபோதும் அதன் மத்திய கிழக்கு நண்பர்களை ஏமாற்றமடையவும் செய்யக்கூடாது. இலங்கையின் வளைகுடா இராஜதந்திரம் என்பது டொலர் சார்ந்தது, வணிகப் பொருளாதாரம் சார்ந்தது. கூடவே, நடந்துகொண்டிருக்கும் யுத்தத்தின் மீதான இலங்கை அரசின் நிலைப்பாடு, அதனுடைய ஆசிய பிராந்திய நட்பு நாடுகள் மட்டிலும் பல்வேறுவகையான தாக்கத்தை உண்டுபண்ணலாம். உதாரணமாக அமெரிக்கா அல்லது இஸ்ரேலுக்கான சார்பு நிலைப்பாடு இலங்கையை அதனுடைய முக்கியமான, பலம் பொருந்திய கூட்டாளியாகிய சீனாவைச் சீண்டிப்பார்ப்பதாக அமையும். மத்திய கிழக்கு போர் தொடர்பாக நடுநிலையாக இருந்துகொள்வதே இலங்கைக்குப் பயன்மிக்க நிலைப்பாடாக அமையும்.
தற்போது ஈரானை முன்னிறுத்தி வளைகுடா நாடுகளில் ஏற்பட்டிருக்கும் போரும் அதுசார்ந்த அமைதியின்மையும் இனிவரும் வாரங்களில் எதை நோக்கி நகரப்போகிறது என்கிற கணிப்பை முன்வைப்பது பெரும் சவாலாகவே இருக்கிறது. ‘பணம் தீரும் போது யுத்தம் நிறைவடையும்’ என்கிற ஒரு பொருளியல் கோட்பாட்டில் நம் நம்பிக்கையைக் கொண்டுபோய் குவித்துக்கொள்ளவேண்டியதுதான். போர் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு அழிவுகளுக்கு வழிகோலுகிறது. உயிரிழப்புக்கள், சொத்துச் சேதங்கள் என்று தொடங்கி பொருளாதாரம், அரசியல், இராஜதந்திரம் என்று பல அடுக்குகளைப் போய்ச்சேரும் போது உலகமும் மனித குலமும் என்றுமே கண்டிராத ஒரு அழிவைச் சந்திக்க நேர்ந்துவிடுகிறது. இப்போது நடந்துகொண்டிருக்கும் போர் அமைத்திக்கான போர் என்று நம்புவதில் எவ்வித நியாயமும் இல்லை. எல்லாப் போரும் அமைதிக்காகத் தொடுக்கப்படுவதுதான். ஆனால் எந்தப்போரும் அதைக் கண்டடைந்ததில்லை. ஈரானுக்கெதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுப்போர் எண்ணெய்க்கான போர். எரிசக்தி மேலாண்மைக்கான போர். டொலருக்கான போர். அதிகார பசிக்கும் ஈகோவிற்குமான போர். கடைசியில் இந்தப் போருக்கான விலையை எளிய மனிதர்களே செலுத்த வேண்டியிருக்கிறது. அந்த எளிய மனிதர்கள் அமெரிக்கர்களும், இஸ்ரேலியர்களும், ஈரானியர்களும் மட்டுமல்ல. ‘இலங்கையர்களாகிய’ நாங்களும்தான்.



