Featuredஆய்வுக் கட்டுரைகள்

ஈழத்தமிழருக்கு எதிரான போரில் இஸ்ரேலின் பங்கு – பாகம் 01

கட்டுரை | கேஷாயினி எட்மண்ட்

இலங்கை அரசிற்கும் இஸ்ரேலுக்குமான அதிகாரபூர்வ தொடர்பு 1950ஆம் ஆண்டுகளில் உருவானதொன்று. இதன் வெளிப்பாடாக 1956 இல் இலங்கையின் கொழும்பில் இஸ்ரேல் தூதரகம் திறக்கப்பட்டு பணிகள் ஆரம்பமாகின. எனினும் ஆரம்பத்தில் வெறும் தூதரக உறவுகள் ( Diplomatic Relations) மட்டுமே இரு நாடுகளும் கொண்டிருந்தன.

மேலும் அக்காலப்பகுதியில் இஸ்ரேல் விவசாயம் மற்றும் நீர்வள மேலாண்மையில் நிபுணத்துவமும் அனுபவமுள்ள நாடாக விளங்கியது. இதனனடிப்படையில் இலங்கைக்கு நவீன விவசாய முறைகள், நீர்ப்பாசன தொழில்நுட்பங்கள் (Irrigation Techques) உலர் நிலங்களில் பயிரிடும் முறைகள் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகளும் வழங்கப்பட்டிருந்தன. இதற்காக இஸ்ரேலிய நிபுணர்கள் ”வேளாண்மை ஆலோசகர்கள்” (Agricultural Advisers) எனும் பெயரில் பணியாற்றியதாகவும் குறிப்புகள் காணப்படுகின்றன. (எனினும் சில ஆவணங்களில் இதுவோர் மாற்று – Cover எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன). அத்துடன் 1960ஆம் ஆண்டு பெரியளவில் இல்லாவிட்டாலும் ஆரம்பநிலை பாதுகாப்பு பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கத்தொடங்கியிருந்தனர் எனவும் சில ஆவணங்களில் குறிப்பிடப்படுகின்றன. இதற்கு அக்காலகட்டத்தில் இலங்கை பின்பற்றிய அணிசேரா கொள்கையும் (Non- Aligned Approach) காரணமாக அமைந்திருந்தமையால் இலங்கையரசு இஸ்ரேயலுடனும் அரபு நாடுகளுடனும் பொதுவான உறவுகளைப் பேணி வந்தது.

1970ஆம் ஆண்டில் இலங்கையரசு இஸ்ரேயலுடனான உறவை துண்டிக்க ஆரம்பித்தது. இதற்கு பின்னால் அரபு நாடுகளின் பொருளாதார மற்றும் அரசியல் அழுத்தங்களும் காரணமாகின.

  • 1970ஆம் ஆண்டில் அரபுநாடுகள் உலகின் முக்கிய எண்ணெய் வழங்குநர்களாக விளங்கியதுடன் இலங்கை போன்ற வளர்முக நாடுகள் இந்நாடுகளின் எண்ணெய் இறக்குமதியில் தங்கியிருந்தமை.
  • இந்தக் காலப்பகுதியில் மத்திய கிழக்கில் அரபுஇஸ்ரேல் முரண்கள் தீவிரமடைய ஆரம்பித்த போது இஸ்ரேல் நாடுகளை ஆதரிக்கும் நாடுகளுடன் உறவுளை குறைத்துக்கொள்வோம்என்கின்ற எச்சரிக்கையும் அரபு நாடுகளினால் உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்டிருந்தது. இதனால் இலங்கையரசு தன்னுடைய பொருளாதார நிலைப்பாட்டினை கருத்திற்கொண்டு இஸ்லேயலுடனான தொடர்பினை நெகிழ்த்த ஆரம்பித்தது.
  • அத்துடன் 1970ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாட்சி ஆரம்பித்தது. இவ்வரசு ‘அணிசேரா நாடுகளின் இயக்கம்‘ (Non- Aligned Movement) எனும் நிலைப்பாட்டினை முன்னிருத்தி செயற்பட்டது.

 

 

 

 

 

 

இங்கு பாவிக்கப்பட்டுள்ள அணிசேரா நாடுகளின் இயக்கம் (Non- Aligned Movement (NAM)  மற்றும்  அணிசேரா கொள்கை (Non- Aligned Approach) ஆகிய இரு சொற்றொடர்களும் கருத்தியல் மற்றும் செயற்பாடுகளில் வேறுபாடுடையவை. Non- Aligned Movement என்பது சர்வதேச அதிகாரபூர்வமானதொரு கட்டமைப்பு. இது 1961ஆம் ஆண்டில் ஜவகர்லால் நேரு (Jawaharlal Nehru, 1889–1964),  ஜோசப் பொரஸ் டிட்டோ (Josip Broz Tito, 1892–1980), ஹார்மல் அப்தல் நாசர் (Gamal Abdel Nasser, 1918–1970) போன்ற உலகத் தலைவர்கள் இணைந்து உருவாக்கியதொன்று. இக்காலப்பகுதியில் இடம்பெற்றதென குறிப்பிடப்படுகின்ற பனிப்போர் காலத்தில் ஒருபக்க சார்பின்றி இருக்கவும், அரசியல் சுயாட்சியை வலுப்படுத்தவும் காலனித்துவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், வளர்முக நாடுகளின் ஒற்றுமையினை வலுப்படுத்தவும் உருவாக்கப்பட்டது. Non- Aligned Approach என்பது கொள்கை ரீதியிலானது. இது ஓரு நாடு எடுத்துக்கொள்கின்ற நிலைப்பாட்டின் அடிப்படையிலானது. இது கட்டமைப்பு ரீதியான நிலைப்பாடல்ல. தேவைக்கேற்ப நிலைப்பாடுகளை மாற்றியமைத்துக்கொள்ள முடியும்.

எவ்வாறாயினும் இலங்கையின் உள்நாட்டுப்போர் ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே இலங்கை இஸ்ரேல் மறைமுக உறவுகள் குறிப்பாக பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை சார் ஒத்துழைப்புக்கள் மீள உருவாக ஆரம்பித்தன. புதிதாக வெளிச்சத்திற்கு வந்துள்ள ஆவணங்களில் இவ்விடயங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. ஈழத்தமிழர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்த காலப்பகுதியில் இலங்கையரசிற்கு தன்னுடைய இராணுவத்திறனை விரிவுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டதன் அடிப்படையில் பல்வேறு நாடுகளுடனும் இணைந்து செயற்பட்டது. இதில் இஸ்ரேலுக்கு மிக முக்கிய பங்குண்டு.

இவ்விடயங்கள் குறித்து ஸ்லோமி யாஷ் (Shlomi Yass) எனும் இஸ்ரேலிய நாட்டின் பாதுகாப்பு மற்றும் இராணுவ ஆய்வாளர் தன்னுடைய ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை மேற்கோள் காட்டி இக்கட்டுரை தொடர்கின்றது. இங்கு தகவல்கள் என குறிப்பிடப்படுபவை இலங்கைக்கான இஸ்ரேல் தூதரகத்தின் கேபிள் மூலமான செய்தி அனுப்புதலினையே குறிக்கின்றது.

இவரது ஆய்வறிக்கையின் படி இலங்கைஇஸ்ரேல் உறவானது வெளிப்படையான தூதரக உறவாக மட்டுமல்லாமல் மறைமுகமாக பாதுகாப்பினை மையப்படுத்தி இருந்தமையை சுட்டிக்காட்டுகின்றது. அத்துடன் இவ்வுறவு ஆரம்பகட்டத்தில் இருந்ததையும் விட ஈழப்போர் தீவிரமடையும்போது இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் வலுவடைந்தமை குறித்தும் மேற்கோள் காட்டுகின்றது.

  • 1987ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் திகதி  இஸ்ரேல் வெளிநாட்டு அமைச்சு தயாரித்த ஆய்வறிக்கையில், 1984ஆம் ஆண்டில் இலங்கையரசு விடுத்ததமிழ் பயங்கரவாத பிரச்சினையை தீர்க்க உதவ வேண்டும்என்கின்ற கோரிக்கைக்கு இஸ்ரேல் ஒத்துழைக்க முன்வந்ததாகவும், இதனடிப்படையில் 1988ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இராணுவ உபகரணங்களை விற்பனை செய்திருப்பது குறித்தும் சுட்டப்பட்டுள்ளது.
  • 1985ஆம் ஆண்டு டிசம்பர் 08ஆம் திகாஹ்தியன்று  அனுப்பப்பட்ட தகவல் மூலத்திற்கமைய இஸ்ரேலின் வெளிநாட்டு அமைச்சகத்தின் ஆசிய பிரிவிற்கான இயக்குநர் இலங்கைக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஆறு   டோறா (Dvora) வகை அதிவேக கண்காணிப்பு கப்பல்களை விற்பனை செய்துள்ளதாகக்  குறிப்பிட்டுள்ளார்.
  • கொழும்பிலுள்ள இஸ்ரேலிய நலன் அலுவலக தலைவர் ஹெய்ம் டிவோன் (Haim Divon), 1986ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20ஆந் திகதி அனுப்பிய தகவலின் அடிப்படையில் கணிசமாக தொகைக்கு மினி உசி (Mini Uzi) துப்பாக்கிகளை இஸ்ரேல் இலங்கைக்கு விற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
  • 1987ஆம் ஆண்டு ஜுன் மாதம் 15ஆம் திகதியன்று இலங்கைக்கான மின்சார வேலிகள், இரகசிய தொடர்புசாதனங்கள், இயந்திர துப்பாக்கிகள், வெடிபொருட்கள் வழங்கப்பட்டமை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
  • 1986ஆம் ஆண்டு  ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி  அனுப்பப்பட்டுள்ள தகவலுக்கமைய அப்போதைய இலங்கையின் ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜயவர்த்தன அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கியமை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து இஸ்ரேலிய நலன் அலுவலக தலைவர் ஹெய்ம் டிவோன் (Haim Divon) இலங்கையதிபரின் பாதுகாப்பு அணியின் 30 அதிகாரிகளுக்கு துப்பாக்கி பயிற்சி வழங்கினோம். நான்கு நாட்கள் இடம்பெற்ற இப்பயிற்சி குறித்தும் இதன் சிறப்பு குறித்தும் பாராட்டப்பட்டோம்என்று குறிப்பிட்டுள்ளார்.
  • 1987ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் திகதி அனுப்பப்பட்ட தகவலில்,
  • 1987ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியன்று அனுப்பப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அப்போது இஸ்ரேலின் பிரதமராகவிருந்த இட்ஷாக் ஷமீரின் (Yitzhak Shamir, 1915–2012) அரசியல் ஆலோசகர் ஆரியே மெக்கல் (Aryeh Mekel, 1946–2021),  அப்போதைய அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஜோர்ஜ் ஷுல்ட்ஸ் (George Shultz) அவர்களிடம்தமிழீழ போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற மறைமுக இயக்கங்களின் நடவடிக்கைகளுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளில் உதவுவதற்கு இலங்கையரசு அவசர கோரிக்கை விடுத்துள்ளது. அதற்கு இஸ்ரேல் தன்னுடைய சம்மதத்தினை தெரிவித்துள்ளது. இதில் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்குதல்,  மூன்று மில்லியன் டொலர் மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை வழங்குதலும் அடங்கும்என குறிப்பிட்டுள்ளார்.
  • 1987ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் திகதிய தகவலின்படி இஸ்ரேலிய நலன் அலுவலக தலைவர் ஹெய்ம் டிவோன் (Haim Divon), அப்போதைய இலங்கையின் நிதியமைச்சர் ரோனி டி மெல் (Ronnie de Mel) அவர்களை சந்தித்தாகவும் அச்சந்திப்பின் போதுவடக்கின் போர் நிலைமையை மாற்ற இஸ்ரேலின் ஐந்து பயிற்சியாளர்களே போதுமாயிருந்தனர்” என தெரிவித்ததாகவும் அதற்கு நிதியமைச்சர், “யாரிடமிருந்தாவதுசாத்தான்களிடமிருந்தாவது நாம் உதவிபெற தயார்” என்று குறிப்பிட்டதாகவும் அதற்கு தான்நாம் சாத்தான்கள் இல்லை என நம்புகின்றோம்” என பதிலளித்ததாகவும் அதற்கு நிதியமைச்சர் புன்னகைத்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.
  • இலங்கை ஊடகங்களில் இஸ்ரேல் பயிற்சியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகத் தொடங்கிய காலப்பகுதியில்,1987ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ஆம் திகதி அனுப்பப்பட்ட தகவலில் இஸ்ரேலின் நலன்பிரிவு தூதராகவிருந்து இலான் பெலக் (Ilan Peleg),இலங்கையரசிற்கு எதிராக செயற்படுகின்ற ஜேவிபி உறுப்பினர்களிடம் இந்தப்பயிற்சி உண்மையில் அவர்களுக்கே நன்மையாகவிருந்தது என நாம் விளக்க வேண்டியுள்ளது” என நகைச்சுவையாக குறிப்பிட்டதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இவ்வாறு பகிரப்பட்ட தகவலினை ஆராயும்போது இலங்கையரசு இக்காலப்பகுதியில் ஈழப் போராட்டத்திற்கு எதிராக மட்டும் பயிற்சிகளை பெறவில்லை என்பதை இஸ்ரேல் அறிந்திருந்தது என்பது புலனாகின்றது. மேலும் இலங்கையின் பொலீஸ் பிரிவின் ஒரு பகுதியினருக்கான சிறப்புப் பயிற்சியினையும் வழங்கியது. இப்பயிற்சி பல உச்சபட்சமான வன்முறைகளை பிரயோகிப்பதற்கான பயிற்சியாகவும் அமைந்திருந்தது. இவ்வாறு பயிற்றுவிக்கப்பட்ட பிரிவு விசேட அதிரடிப் படை (STF – Special Task Force) என்றழைக்கப்பட்டது. 1980 – 1990 காலப்பகுதியில் இஸ்ரேலின் பயிற்சியின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த சிறப்புப்படையின் அதிகாரிகள் அதிகாரபூர்வமான இராணுவ மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்கின்ற போர்வையில் கட்டமைக்கப்பட்ட பல மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியிருந்தனர். இம்மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச ரீதியிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன் கீழ் வரும் குற்றங்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளன.

1. கடத்தல்கள் (Abductions) : பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கடத்தப்பட்டதுடன் அநேகமானவர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டுமுள்ளனர்.

2. சித்திரவதைகள் (Torture): கைதுசெய்யப்பட்டவர்கள், மின்சாரம் பாய்ச்சப்படுதல், மூச்சுத்திணறலை ஏற்படுத்தல், பாலியல் வதைகள், உடல் உறுப்புக்களை வெட்டுதல், பிறப்புறுப்பினூடாக கம்பி மற்றும் கூரான பொருட்களை நுழைத்தல் போன்ற பல்வேறு மனித தன்மையற்ற சித்திரவதைகளுக்குள்ளாகினர்.

3. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணையின்றி தடுத்துவைத்தல்,

4. நீதிக்கு புறம்பான கொலைகள் ((Extrajudicial Killings)

5. பாலியல் வன்முறைகள் (Sexual Violence)

6. சட்டவிரோத தடுத்துவைத்தல் (Arbitrary Detention) : நீண்டகால விசாரணைகளின்றிரூபவ் எந்தவித சட்டமுறைகளுமற்ற முறையில் அனவாத ரீதியிலான தடுத்துவைத்தல்கள்

7. கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்கள் (Surveillance and Intimidation): அநீதிக்கு எதிராக குரல்கொடுத்தவர்கள், போராளிகளின் குடும்பங்கள், சமூக அமைப்புக்கள் கண்காணிக்கப்பட்டதுடன் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டனர்.

(தொடரும்..)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button