Featuredமலையகம்

இலங்கை இறப்பர்: காலநிலைப் போர்

கட்டுரை | அருள்கார்க்கி | படம் | Ada Derana

அறிமுகம்

இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் தேயிலைக்கு அடுத்தபடியாக அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் மிக முக்கிய பயிராக இறப்பர் விளங்குகின்றது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் பயிர், இன்று இலங்கையின் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சிறுதோட்ட உரிமையாளர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இருப்பினும், 21 ஆம் நூற்றாண்டின் பாரிய சவாலான காலநிலை மாற்றம் (Climate Change), இலங்கையின் இறப்பர் கைத்தொழிலை ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளியுள்ளது. புவி வெப்பமடைதல், மழையற்ற காலங்களின் அதிகரிப்பு, மற்றும் தீவிரமடைந்து வரும் நோய்த்தாக்கங்கள் காரணமாக இலங்கையின் இறப்பர் உற்பத்தி கடந்த ஒரு தசாப்தத்தில் முன்னெப்போதும் இல்லாதவாறு சரிவைச் சந்தித்துள்ளது.

பின்னணி

இறப்பர் மரம் (Hevea brasiliensis) வளருவதற்கு வருடாந்தம் சராசரியாக 2000mm முதல் 3000mm வரையான மழைவீழ்ச்சியும், 25°C முதல் 30°C வரையான வெப்பநிலையும் அவசியமாகும். மேலும், வருடம் முழுவதும் பரவலான மழைவீழ்ச்சி கிடைப்பது பால் உற்பத்தியை உறுதிப்படுத்தும்.

இருப்பினும், இலங்கையில் கடந்த சில வருடங்களாக பருவமழை (Monsoon) பொழியும் காலங்கள் பெருமளவு மாறியுள்ளன. 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளின்படி, இலங்கையின் ஈரவலயப் பகுதிகளில் மழை பெய்யும் நாட்களின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், பெய்யும் மழையின் தீவிரம் (Intensity) அதிகரித்துள்ளது. இச்சீரற்ற நிலை இறப்பர் மரங்களின் உயிரியல் சுழற்சியைப் பாதிப்பதோடு, அவற்றின் பால் சுரக்கும் தன்மையையும் சிதைத்துள்ளது.

உற்பத்தித் திறன் மீதான நேரடித் தாக்கங்கள்

தேசிய உற்பத்தி வீழ்ச்சி: 2014 இல் சுமார் 98,600 மெட்ரிக் தொன்னாக இருந்த உற்பத்தி, 2025 அளவில் 69,000 மெட்ரிக் தொன் வரை குறைந்துள்ளது.

பயிர்ச்செய்கை நிலங்களின் இழப்பு: களுத்துறை மற்றும் கேகாலை மாவட்டங்களில் பல ஏக்கர் இறப்பர் காணிகள் காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட நட்டங்கள் காரணமாக வேறு பயிர்ச்செய்கைகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. 2026 தரவுகளின்படி சுமார் 35% நிலப்பரப்பு இத்துறையிலிருந்து விலகியுள்ளது.

உற்பத்திச் செலவு அதிகரிப்பு: காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்த அதிகப்படியான பூஞ்சை நாசினிகள் மற்றும் உரங்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளதால், ஒரு கிலோ இறப்பர் உற்பத்தி செய்வதற்கான செலவு 40% இனால் அதிகரித்துள்ளது.

  1. வட்ட இலைப்புள்ளி நோய் (Circular Leaf Spot Disease – Pestalotiopsis) காலநிலை மாற்றத்தினால் இலங்கையின் இறப்பர் துறை சந்திக்கும் மிகப்பெரிய உயிரியல் அச்சுறுத்தல் பெஸ்டலோட்டியோப்சிஸ் (Pestalotiopsis) பூஞ்சைத் தொற்று ஆகும்.

அதிகரித்த ஈரப்பதம் (Humidity) மற்றும் நீண்டகால மேகமூட்டமான சூழல் இப்பூஞ்சை வேகமாகப் பரவுவதற்கு வழிகோலுகின்றது. முன்னொரு காலத்தில் குறிப்பிட்ட பருவங்களில் மாத்திரம் காணப்பட்ட இந்த இலை உதிர்வு நோய், இப்போது காலநிலை மாற்றத்தினால் வருடம் முழுவதும் காணப்படுகின்றது.மரம் தனது 80% க்கும் அதிகமான இலைகளை இழப்பதால், ஒளித்தொகுப்பு (Photosynthesis) தடைப்பட்டு மரம் பலவீனமடைகின்றது.மரத்தின் போஷாக்கு பாதிக்கப்படுவதால், பால் உற்பத்தி 50% வரை உடனடியாக வீழ்ச்சியடைகின்றது.தொடர்ச்சியான நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகும் மரங்கள் சில வருடங்களிலேயே பட்டுப்போகின்றன.

செல்வராணியின் கதை: ஒரு தொழிலாளியின் பார்வையில் காலநிலைப் போர் மொனராகலையின் கும்புக்கன (Kumukkana) தோட்டத்தின் செந்நிற மண்ணில், விடியற்காலை 3:30 மணிக்கே செல்வராணியின் நாள் தொடங்கிவிடுகின்றது. முன்னரெல்லாம் அதிகாலை 5 மணிக்கு காடுகளுக்குள் செல்வதே வழக்கம். ஆனால் இன்று, அந்த இரண்டு மணிநேர வித்தியாசம் தான் அவரது அன்றாட வருமானத்தைத் தீர்மானிக்கிறது. மாறுகின்ற காலக்கடிகாரம்  “முன்னெல்லாம் அதிகாலைக் காத்து உடம்பைக் குளிர வைக்கும், மரங்களில் பால் கசிவது நிதானமாக இருக்கும்” என்று தனது பால் வெட்டும் கத்தியைத் தீட்டியபடித் தொடங்குகிறார் செல்வராணி. மொனராகலையின் வெப்பநிலை கடந்த ஐந்தாண்டுகளில் சடுதியாக அதிகரித்துள்ளது.

“வெப்பம் கூடினால் மரத்துக்குள்ள இருக்கும் பால் நரம்புகள் சீக்கிரமே மூடிக்கொள்ளும். சூரியன் எட்டிப்பார்க்க முதலே நாங்கள் வேலையை முடித்தாக வேண்டும். ஒரு நிமிடம் பிந்திப்போனாலும், மரத்திலிருந்து வடியும் பால் கின்னியில் (Cup) வந்து விழுவதற்கு முன்னரே மரத்திலேயே உறைந்துவிடும். முன்னரெல்லாம் 200 மரங்களில் பால் வெட்டினால் 15 கிலோவுக்கு மேல் கிடைக்கும். இப்போது அதே 200 மரங்களில் 7 அல்லது 8 கிலோ கிடைப்பதே கஷ்டமாக இருக்கிறது. இது ஏதோ மரம் தரும் தண்டனை இல்லை, இந்த வானிலை எங்களுக்குத் தரும் தண்டனை.”

‘சுழல் மழை’ தந்த ஏமாற்றம்  செல்வராணி போன்ற தொழிலாளர்களுக்கு மழை என்பது ஒரு காலத்தில் வரப்பிரசாதம். ஆனால் இன்று அது ஒரு அச்சுறுத்தல். மொனராகலையில் பெய்யும் ‘திடீர் கனமழை’ இவர்களது உழைப்பை ஒரு நொடியில் கழுவிச் சென்றுவிடுகிறது.

“ஒரு நாள் முழுக்க கஷ்டப்பட்டு 250 மரங்களில் பால் வெட்டி வைத்திருப்போம். மதியம் பால் சேகரிக்கப் போகும் போது திடீரென ஒரு அரை மணிநேரம் பலமான மழை பெய்யும். கின்னியில் தேங்கியிருக்கும் பால் எல்லாம் தண்ணீரரோடு கலந்து நிலத்தில் ஓடும். அந்த நாளில் எங்களுக்கு ஒரு ரூபாய்க்கூட வருமானம் கிடைக்காது. ‘மழைக்கால கவசங்கள்’ (Rain Guards) எல்லா மரங்களுக்கும் இல்லை. சில தோட்டங்களில் அவை உடைந்திருக்கின்றன”

 கண்ணுக்குத் தெரியாத எதிரி: இலை உதிர்வு நோய் செல்வராணி தோட்டத்திலுள்ள மரங்களின் இலைகளைக் கவலையோடு பார்க்கிறார். பசுமையாக இருக்க வேண்டிய இறப்பர் இலைகள், மஞ்சள் நிறப் புள்ளிகளுடன் கருகிக் காணப்படுகின்றன. இதுதான் காலநிலை மாற்றத்தால் தீவிரமடைந்துள்ள ‘பெஸ்டலோட்டியோப்சிஸ்’ நோய்.

“மரம் பார்க்கப் பொலிவில்லாமல் எலும்புக்கூடு மாதிரித் தெரிகிறது. இலைகள் உதிர்ந்தால் மரத்துக்குப் தெம்பு இருக்காது. தெம்பு இல்லாத மரம் எப்படிப் பால் தரும்? நாங்கள் உரம் போடுகிறோம், மருந்து அடிக்கிறோம். ஆனால் இந்தச் சூடான காற்றும், ஈரப்பதமும் நோயை விடாமல் வளர்க்கிறது. எங்களுக்கே வேலைக்குப் போகும்போது மூச்சுத் திணறுகிறது, மரங்களுக்கு எப்படியிருக்கும்?”

சமையலறையில் எதிரொலிக்கும் காலநிலைப் பாதிப்பு செல்வராணியின் வருமானம் என்பது அவர் சேகரிக்கும் பாலின் நிறையைப் பொறுத்தது (Kilo Basis). காலநிலை மாற்றத்தால் பாலின் அளவு குறையும் போது, அது நேரடியாக அவரது சமையலறையையும் பிள்ளைகளின் கல்வியையும் பாதிக்கிறது.

“எனக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவன் உயர்தரம் படிக்கிறான். அவனுக்குத் தேவையான புத்தகங்கள் வாங்கக் கூட இப்போது யோசிக்க வேண்டியிருக்கிறது. ஒரு காலத்தில் இறப்பர் பால் வெட்டித்தான் நாங்கள் வீடு கட்டினோம், நகைகள் வாங்கினோம். ஆனால் இப்போது அன்றாட சாப்பாட்டுக்கே கணக்குப் பார்க்க வேண்டியுள்ளது.

செல்வராணியின் இந்த நேரடி வாக்குமூலம் வெறும் உணர்ச்சிகரமான கதை மட்டுமல்ல, இது ஒரு பாரிய பொருளாதார வீழ்ச்சியின் எச்சரிக்கை மணி.

அதிகரித்த வெப்பம் காரணமாக பெண் தொழிலாளர்கள் ‘வெப்ப அழுத்தத்திற்கு’ (Heat Stress) உள்ளாகின்றனர். இது அவர்களது நீண்டகால உற்பத்தித் திறனைக் குறைக்கிறது. ஒரு கிலோ பாலின் விலை நிர்ணயிக்கப்பட்டாலும், காலநிலை காரணமாக பாலின் அளவு குறையும் போது தொழிலாளர்களின் வாழ்வாதாரம் சிதைகிறது. செல்வராணி போன்ற அனுபவம் வாய்ந்த தொழிலாளர்கள் இத்துறையை விட்டு வெளியேறி, நகரங்களில் கூலி வேலைகளுக்குச் செல்வது இலங்கையின் இறப்பர் துறையின் எதிர்காலத்தைப் பாதிக்கும். கும்புக்கன தோட்டப் பெண்களின் இந்த அவலக்குரல், காலநிலை மாற்றம் என்பது வெறும் ‘சுற்றுச்சூழல் பிரச்சினை’ மட்டுமல்ல, அது ஒரு ‘பாலின மற்றும் சமூகப் பிரச்சினை’ என்பதையும் உணர்த்துகிறது.  செல்வராணி போன்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் கண்ணீரைத் துடைப்பதற்கும், இலங்கையின் இறப்பர் துறையை முழுமையான வீழ்ச்சியிலிருந்து பாதுகாப்பதற்கும் வெறும் தொழில்நுட்ப மாற்றங்கள் மட்டும் போதாது. அதற்குப் பலமான நிதிப் பாதுகாப்புக் கட்டமைப்பும், அரசாங்கத்தின் நேரடித் தலையீடும் அவசியமாகும். பாரம்பரிய காப்புறுதி முறைகள் பயிர் அழிந்த பின்னரே இழப்பீடு வழங்குகின்றன. ஆனால், இறப்பர் துறைக்குத் தேவைப்படுவது ‘சுட்டெண் அடிப்படையிலான காப்புறுதி’ (Index-based Parametric Insurance) ஆகும். ஒரு குறிப்பிட்ட மாதத்தில், பால் வெட்டும் அதிகாலை நேரங்களில் இவ்வளவு மில்லிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்தால், அது தானாகவே ‘வருமான இழப்பு’ எனக் கருதப்பட்டு, விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு இழப்பீடு செல்ல வேண்டும். இது சேதங்களை நேரில் வந்து மதிப்பீடு செய்யும் காலதாமதத்தைத் தவிர்க்கும். மொனராகலை போன்ற பகுதிகளில், வெப்பநிலை ஒரு குறிப்பிட்ட பாகையை (உதாரணமாக 35°C) தாண்டினால், பால் சுரப்பு குறையும் என்பதை ஏற்றுக்கொண்டு, அதற்கேற்ப தொழிலாளர்களுக்குச் சிறு தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும்.

இலங்கையின் இறப்பர் உற்பத்தியில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் சிறுத்தோட்ட உரிமையாளர்களே. இவர்களது மூலதனம் குறைவு என்பதால், அரசாங்கத்தின் மானியங்கள் பின்வருமாறு அமைய வேண்டும்:  திடீர் மழையினால் பால் கழுவிச் செல்வதைத் தடுக்க, ஒவ்வொரு மரத்திற்கும் மழைக்கால கவசங்கள் பொருத்தப்பட வேண்டும். தற்போதுள்ள அதிக விலையினால் விவசாயிகள் இதனைத் தவிர்க்கின்றனர். எனவே, இறப்பர் அபிவிருத்தி திணைக்களம் (RDD) இதனை 75-100% மானிய அடிப்படையில் வழங்க வேண்டும். பெஸ்டலோட்டியோப்சிஸ்’ பூஞ்சையைக் கட்டுப்படுத்தத் தேவையான விசேட பூஞ்சை நாசினிகள் மற்றும் தெளிப்பான்களை (Sprayers) மானிய விலையில் வழங்க வேண்டும். பழைய, நோய்க்கு ஆளாகக்கூடிய மரங்களை அகற்றிவிட்டு, காலநிலைக்குத் தாக்குப் பிடிக்கக்கூடிய புதிய ஒட்டு ரகங்களை (உதாரணமாக RRIC 121, RRISL 200 series) நடுகை செய்ய ஏக்கர் ஒன்றுக்கு வழங்கப்படும் நிதியுதவியை தற்போதைய பணவீக்கத்திற்கு ஏற்ப அதிகரிக்க வேண்டும்.

 காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் புதிய ஆயுதங்கள்

காலநிலை மாற்றம் பாரம்பரிய விவசாய முறைகளைத் தோற்கடித்து வரும் நிலையில், தொழில்நுட்பம் மட்டுமே இன்று இறப்பர் துறைக்கு ஒரு பிடிமானத்தை வழங்கியுள்ளது.   இறப்பர் மரங்கள் 60-80 அடி உயரம் வரை வளரக்கூடியவை என்பதால், நிலத்திலிருந்து கைகளால் பூஞ்சை நாசினிகளைத் தெளிப்பது கடினம். குறிப்பாக, ‘பெஸ்டலோட்டியோப்சிஸ்’ (Pestalotiopsis) நோய் மரத்தின் உச்சாணிக் கிளைகளையே முதலில் தாக்குகின்றது. 2025 முதல், களுத்துறை மற்றும் கேகாலை மாவட்டங்களில் பாரியளவிலான ட்ரோன் தெளிப்புத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஒரு ட்ரோன் மூலம் ஒரு மணிநேரத்தில் சுமார் 10-15 ஏக்கர் நிலப்பரப்பிற்குத் துல்லியமாக மருந்து தெளிக்க முடியும். இது மனித உழைப்பைக் குறைப்பதுடன், பூஞ்சை நாசினிகள் வீணாவதையும் தடுக்கின்றது.

மொனராகலை போன்ற புதிய வலயங்களில், மண்ணின் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையை உடனுக்குடன் கண்காணிக்கும் IoT சென்சார்கள் (Sensors) பொருத்தப்பட்டுள்ளன.  இந்த சென்சார்கள் வழங்கும் தரவுகள் மூலம், ‘செல்வராணி’ போன்ற தொழிலாளர்களுக்கு எந்த நேரத்தில் பால் வெட்டினால் அதிக விளைச்சல் கிடைக்கும் என்பதை அலைபேசி குறுஞ்செய்தி மூலம் அறிவிக்க முடியும். இது தேவையற்ற நேர விரயத்தைத் தவிர்க்கின்றது. இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் (RRISL) தற்போது செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்தி, நாட்டின் எந்தெந்தப் பகுதிகளில் இலை உதிர்வு நோய் வேகமாகப் பரவுகிறது என்பதை முன்கூட்டியே கண்டறிகின்றது. இது நோய் பரவுவதற்கு முன்னரே தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க உதவுகின்றது.

காலநிலை மாற்றத்தினால் இலங்கையின் இறப்பர் உற்பத்தி குறைந்திருப்பது, உலகச் சந்தையில் நாட்டின் நிலையைச் சவாலுக்கு உள்ளாக்கியுள்ளது.   2025/26 காலப்பகுதியில் உற்பத்தி வீழ்ச்சியடைந்ததால், சந்தைக்கு வரும் இறப்பரின் அளவு குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ இறப்பரின் விலை அதிகரித்திருந்தாலும், உற்பத்தியின் அளவு குறைவாக இருப்பதால் ஒட்டுமொத்த வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது.தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உற்பத்தியை அதிகரித்துள்ள நிலையில், இலங்கை தனது ‘தரம்’ (Quality) மூலம் மட்டுமே சந்தையைத் தக்கவைக்கப் போராடுகிறது. குறிப்பாக, இலங்கையின் ‘லங்கா பிரீமியர் ரப்பர்’ (LPR) ரகத்திற்கு உலகளவில் உள்ள கிராக்கியைப் பயன்படுத்தி, குறைந்த உற்பத்தியிலும் அதிக லாபம் ஈட்டும் ‘பெறுமதி சேர்க்கப்பட்ட’ (Value Addition) தயாரிப்புகளுக்கு (உதாரணமாக: விசேட மருத்துவக் கையுறைகள், வாகன டயர்கள்) முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 2014 இல் 1 பில்லியன் டொலருக்கும் அதிகமாக இருந்த இறப்பர் சார்ந்த ஏற்றுமதி வருமானம், 2026 இல் சுமார் 750-800 மில்லியன் டொலராகச் சுருங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பில் பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் இறப்பர் பயிர்ச்செய்கை ஒரு வரலாற்று ரீதியான மாற்றத்தின் விளிம்பில் நிற்கிறது. காலநிலை மாற்றம் என்பது ஒரு தற்காலிகப் பிரச்சினை அல்ல, அது ஒரு நிரந்தரமான யதார்த்தம் என்பதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.  காலநிலைக்குத் தாக்குப் பிடிக்கும் புதிய மர ரகங்களை (Clones) உருவாக்குவதற்கு அரசாங்கம் அதிக நிதி ஒதுக்க வேண்டும். கும்புக்கன தோட்டத்து செல்வராணி போன்ற பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ‘காலநிலை காப்புறுதி’ மற்றும் முறையான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை உறுதிப்படுத்த வேண்டும். ஈரவலயத்திலிருந்து உலர்வலயத்திற்குப் பயிர்ச்செய்கையை நகர்த்தும் போது, அங்குள்ள சூழலியல் சமநிலையைப் பாதுகாப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.   சிறுதோட்ட விவசாயிகள் வரை நவீன தொழில்நுட்பங்களை எட்டச் செய்வதன் மூலம் மட்டுமே தேசிய உற்பத்தியை மீண்டும் அதிகரிக்க முடியும்.

இலங்கையின் இறப்பர் பயிர்ச்செய்கை இன்று ஒரு சாதாரண சரிவைச் சந்திக்கவில்லை; மாறாக, அது தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு தசாப்த காலப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. காலநிலைக் காரணிகளால் ஏற்பட்டுள்ள இந்தத் தேக்கநிலை, வெறும் விவசாயப் பிரச்சினையாக மட்டும் பார்க்கப்படாமல், நாட்டின் அந்நியச் செலாவணி வருமானம், கிராமப்புற வாழ்வாதாரம் மற்றும் கைத்தொழில் மூலப்பொருள் பாதுகாப்பு எனப் பல பரிமாணங்களைக் கொண்ட ஒரு தேசியப் பொருளாதார நெருக்கடியாகவே அணுகப்பட வேண்டும். கடந்த பத்தாண்டுகளில் செல்வராணி போன்ற பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் அனுபவங்களும், கும்புக்கன போன்ற தோட்டங்களின் உற்பத்தி வீழ்ச்சியும் நமக்கு உணர்த்தும் பாடம் ஒன்றே: “பாரம்பரிய முறைகளால் இனி காலநிலையை வெல்ல முடியாது.” ஈரவலயத்தில் அதிகரித்து வரும் பூஞ்சைத் தொற்றும், உலர்வலயத்தில் நிலவும் கடும் வெப்பமும் இலங்கையின் இறப்பர் வரைபடத்தை மாற்றியமைக்கக் கோருகின்றன. 2026 ஆம் ஆண்டு வரையிலான தரவுகளின்படி, நாம் பின்பற்றும் பழைய ‘ஒட்டு ரகங்களும்’ (Clones) மற்றும் நீர்ப்பாசன முறைகளும் தற்போதைய தீவிர காலநிலை மாற்றத்திற்கு ஈடுகொடுக்கத் தவறிவிட்டன.

இத்துறையை மீட்டெடுக்க வேண்டுமாயின், அரசாங்கம், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் பெருந்தோட்ட நிறுவனங்கள் ஆகிய மூன்றும் ஒரு புள்ளியில் இணைய வேண்டும். இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் (RRISL) மரபணு ரீதியாக மாற்றியமைக்கப்பட்ட, நோய்களை எதிர்க்கும் மற்றும் வெப்பத்தைத் தாங்கும் ‘காலநிலை-தாங்கு’ (Climate-smart) ரகங்களை உருவாக்குவதில் தனது வேகத்தை அதிகரிக்க வேண்டும்.காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நட்டங்களை விவசாயிகள் மட்டுமே சுமக்கும் நிலை மாற வேண்டும். இதற்காக முன்மொழியப்பட்ட ‘காலநிலை காப்புறுதி’ மற்றும் ‘வருமான உறுதிப்பாட்டு நிதி’ என்பன வெறும் திட்டங்களாக இல்லாமல், நடைமுறைச் சட்டங்களாக மாற்றப்பட வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இக்கைத்தொழிலின் உண்மையான நாயகர்களான தோட்டத் தொழிலாளர்களின் நலன் உறுதிப்படுத்தப்பட வேண்டும். காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் வெப்ப அழுத்தம் (Heat Stress) மற்றும் வருமான இழப்பு என்பன தொழிலாளர்களை இத்துறையை விட்டு வெளியேறத் தூண்டுகின்றன. தொழிலாளர்கள் இல்லாத ஒரு இறப்பர் துறையை நாம் கற்பனை செய்ய முடியாது. எனவே, அவர்களுக்குக் கௌரவமான ஊதியம், காலநிலை பாதுகாப்பு மற்றும் நவீன வேலைச் சூழலை உருவாக்குவது அவசியமாகும்.

சுருக்கமாகக் கூறின், இலங்கையின் “வெள்ளை தங்கம்” மீண்டும் ஒளிர்வதற்கு இரண்டு வழிகளே உள்ளன: ஒன்று, இயற்கையோடு இயைந்த நவீன தொழில்நுட்பத் தழுவல்; மற்றது, அந்தத் தொழில்நுட்பத்தின் பலன்கள் அடிமட்டத் தொழிலாளி வரை சென்றடைவதை உறுதி செய்யும் வலுவான கொள்கை வகுப்பு. 2026 ஆம் ஆண்டைத் தாரக மந்திரமாகக் கொண்டு, நாம் இப்போது செயல்படாவிட்டால், உலக இறப்பர் சந்தையில் இலங்கை பெற்றிருந்த வரலாற்றுப் பெருமை வெறும் பாடப்புத்தகங்களோடு நின்றுவிடும் அபாயம் உள்ளது.

 Author’s Note

இந்த ஆய்வுக் கட்டுரையானது, மொனராகலை மாவட்டத்தின் கும்புக்கன (Kumukkana) இறப்பர் தோட்டப் பகுதிகளுக்கு நான் நேரில் மேற்கொண்ட கள விஜயத்தின் (Field Visit) ஊடாகக் கண்டறியப்பட்ட உண்மைகளையும், அங்குள்ள தொழிலாளர்களின் நேரடி வாக்குமூலங்களையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

வெறும் புள்ளிவிபரங்களுக்கு அப்பால், காலநிலை மாற்றம் என்பது ஒரு சாமானியத் தொழிலாளியின் வாழ்வாதாரத்தை எவ்விதம் சிதைக்கின்றது என்பதைப் புரிந்துகொள்வதற்காக, செல்வராணி போன்ற பல பெண் தொழிலாளர்களுடன் நேர்காணல்கள் நடத்தப்பட்டு இந்த விரிவான கள ஆய்வு (Case Study) ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தரவுகள் மற்றும் தகவல்கள் அனைத்தும் கள யதார்த்தத்தையும், தற்போதைய காலநிலை நெருக்கடியையும் பிரதிபலிக்கும் வகையில் என்னால் தொகுக்கப்பட்டுள்ளன.

 அருள்கார்க்கி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button