காலநிலை மாற்றம்

இலங்கையின் காலநிலை நீதி

கட்டுரையாளர் | அருள்கார்க்கி

படம் | North East Narrative

இலங்கை தற்போது தனது வரலாற்றிலேயே மிக மோசமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் அதேவேளை, காலநிலை மாற்றத்தினால் மிக அதிகளவில் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாகவும் சர்வதேச மட்டத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஜேர்மன்வாட்ச் (Germanwatch) காலநிலை அபாயச் சுட்டெண்ணின் படி, இலங்கை உலகளவில் மிக உயர்ந்த ஆபத்துள்ள நாடாகக் குறிக்கப்பட அதன் புவியியல் அமைவிடமும், பொருளாதாரத்தின் பலவீனமுமே முக்கிய காரணிகளாகும். இலங்கையின் மொத்தத் தொழிலப்படையில் சுமார் 38 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் விவசாயத்திலும், 1340 கிலோமீற்றர் நீளமான கடற்கரையை நம்பி இலட்சக்கணக்கானோர் கடற்றொழிலிலும் தங்கியுள்ள நிலையில், காலநிலை மாற்றம் என்பது ஒரு சூழலியல் பிரச்சினையாக மாத்திரமன்றி, நாட்டின் பொருளாதார மீட்சியைத் தடுக்கும் ஒரு பெரும் காரணியாகவும் உருவெடுத்துள்ளது. இங்குள்ள மிகப்பெரிய முரண்பாடு என்னவென்றால், உலகளாவிய காபன் வெளியேற்றத்திற்கு மிகக் குறைந்த அளவே (0.1% க்கும் குறைவான) பங்களிப்புச் செய்யும் இலங்கை, அதன் விளைவுகளால் ஏற்படும் பாரிய இழப்புகளைத் தாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கைகளின்படி (Third National Communication – TNC), கடந்த பத்தாண்டுகளில் இலங்கையில் வெள்ளம், மண்சரிவு மற்றும் வறட்சி போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகரித்துள்ளன. 1961 முதல் 1990 வரையான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் சராசரி வெப்பநிலை 0.16 பாகை செல்சியஸினால் உயர்ந்துள்ளதுடன், மழைவீழ்ச்சி கோலங்களிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, நுவரெலியா போன்ற மலைப்பாங்கான பகுதிகளில் இழிவு வெப்பநிலை உயர்ந்துள்ளமை மற்றும் குறுகிய காலத்தில் பெய்யும் அதிசெறிவான மழைவீழ்ச்சி என்பன பாரிய பொருளாதார இழப்புகளைத் தோற்றுவிக்கின்றன. அனர்த்தங்களால் இலங்கைக்கு வருடாந்தம் ஏற்படும் சராசரி பொருளாதார இழப்பு நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி, ஏற்கனவே வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மேலும் சீர்குலைக்கின்றது.

காலநிலை நீதி (Climate Justice) என்பது, காலநிலை மாற்றத்தினால் அதிகம் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய பாதுகாப்பும் இழப்பீடும் வழங்கப்படுவதை உறுதி செய்வதாகும். ஆனால், இலங்கையின் விடயத்தில் இது முற்றிலும் தலைகீழாகவே நடக்கின்றது. வளர்ந்த நாடுகள் தமது தொழிற்புரட்சியின் ஊடாக அதிகளவு காபனை வெளியேற்றி செல்வந்தர்களாக மாறின; ஆனால் அதன் பாதிப்பால் ஏற்படும் புயல்களும் வெள்ளங்களும் இலங்கை போன்ற நாடுகளின் உட்கட்டமைப்புகளைச் சிதைக்கின்றன. சிதைக்கப்பட்ட வீதிகள், பாலங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு இலங்கை போன்ற நாடுகள் மீண்டும் சர்வதேச வங்கிகளிடம் வட்டிக்குக் கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. ஏற்கனவே கடனில் மூழ்கியுள்ள ஒரு நாடு, தனது தவறால் ஏற்படாத ஒரு பாதிப்பிற்காக மீண்டும் கடன் வாங்குவது ஒரு ‘நச்சுச் சுழற்சியை’ (Debt-Climate Trap) உருவாக்கி, அந்நாட்டை ஒருபோதும் மீளமுடியாத கடன் பொறிக்குள் தள்ளுகின்றது.

பொருளாதார நெருக்கடியும் காலநிலை அதிர்ச்சிகளும்

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியானது வெறும் நிதி முகாமைத்துவத் தவறுகளால் மாத்திரம் ஏற்பட்டதல்ல; அது காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் தொடர்ச்சியான ‘பொருளாதார அதிர்ச்சிகளுடன்’ (Economic Shocks) நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது. இலங்கை போன்ற ஒரு தீவு நாடு, தனது அந்நியச் செலாவணி மற்றும் தேசிய வருமானத்திற்காக விவசாயம், பெருந்தோட்டத் துறை மற்றும் சுற்றுலாத் துறை ஆகியவற்றையே பெருமளவில் நம்பியுள்ளது. இந்த மூன்று துறைகளுமே காலநிலைக்கு மிக எளிதில் பாதிப்படையக்கூடியவை (Climate Sensitive) என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தசாப்தங்களாக இலங்கையில் ஏற்பட்டுள்ள வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் ஒழுங்கற்ற மழைவீழ்ச்சி என்பன நாட்டின் உற்பத்தித் திறனைப் பாரியளவில் வீழ்த்தியுள்ளன.

உதாரணமாக, இலங்கையின் தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்திகள் அந்நியச் செலாவணியைப் பெற்றுத்தரும் பிரதான வழிகளாகும். காலநிலை மாற்றம் காரணமாக நிலவும் கடும் வறட்சி அல்லது அதிகப்படியான மழைவீழ்ச்சி, இப்பயிர்களின் விளைச்சலைக் குறைப்பதன் மூலம் நாட்டின் ஏற்றுமதி வருமானத்தைச் சிதைக்கின்றது. வருமானம் குறையும் போது, நாட்டின் இறக்குமதித் தேவைகளுக்காகவும், அத்தியாவசியப் பொருட்களுக்காகவும் அரசாங்கம் மீண்டும் மீண்டும் வெளிநாட்டுக் கடன்களைப் பெற வேண்டிய சூழல் உருவாகின்றது. இது ஒரு நாட்டின் ‘கடன் செலுத்தும் திறனை’ (Debt Sustainability) நேரடியாகப் பாதிக்கின்றது. கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு நாடு தள்ளப்படும்போது, அது ஒரு பாரிய பொருளாதார நெருக்கடியாக உருவெடுக்கின்றது.

அனர்த்தங்களின் பின்னர் மேற்கொள்ளப்படும் மீள்நிர்மாணப் பணிகளுக்காகச் செலவிடப்படும் நிதியானது இலங்கையின் பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்துகின்றது. ஒரு பெரும் வெள்ளம் அல்லது மண்சரிவு ஏற்படும்போது, சேதமடைந்த வீதிகள், பாலங்கள் மற்றும் மின்சாரக் கட்டமைப்புகளைச் சீரமைக்க அரசாங்கம் பில்லியன் கணக்கான ரூபாய்களைச் செலவிட வேண்டியுள்ளது. இந்த நிதி பெரும்பாலும் அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டதாக இருக்கும். இவ்வாறாக, அபிவிருத்திக்குச் செலவிட வேண்டிய பணத்தை அனர்த்த மீட்சிக்குச் செலவிடுவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் தடைப்படுகின்றது. இது வளர்ந்த நாடுகள் காபன் வெளியேற்றத்தின் மூலம் அடைந்த லாபத்திற்கு, இலங்கை போன்ற நாடுகள் தமது பொருளாதார வளர்ச்சியைப் பலிகொடுக்கும் ஒரு ‘காலநிலை அநீதி’ ஆகும்.

மேலும், பொருளாதார நெருக்கடியினால் ஏற்படும் பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு என்பன, காலநிலை மாற்றத்தினால் ஏற்கனவே வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளையும் மீனவர்களையும் மிகக் கடுமையாகப் பாதிக்கின்றன. வறட்சியினால் பயிர் நட்டத்தைச் சந்திக்கும் ஒரு விவசாயி, பொருளாதார நெருக்கடி காரணமாக உரங்கள் மற்றும் எரிபொருட்களின் விலையேற்றத்தையும் ஒரே நேரத்தில் தாங்க வேண்டியுள்ளது. இது கிராமப்புற வறுமையை அதிகரிப்பதுடன், மக்களை நுண்நிதி (Microfinance) போன்ற அபாயகரமான கடன் பொறிக்குள் தள்ளுகின்றது. எனவே, இலங்கையின் பொருளாதார மீட்சி என்பது வெறும் கடன் மறுசீரமைப்பால் மாத்திரம் சாத்தியமில்லை; அது காலநிலை மாற்றத்திற்கு ஈடுகொடுக்கக்கூடிய ‘மீளெழுச்சியான பொருளாதாரக் கட்டமைப்பை’ (Climate Resilient Economy) உருவாக்குவதிலும், சர்வதேச மட்டத்திலிருந்து மானியங்களைப் பெற்றுக்கொள்வதிலுமே தங்கியுள்ளது.

இலங்கையின் துறைசார்ந்த பாதிப்புகள்

இலங்கையின் பொருளாதாரம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்வாதாரமானது இயற்கையுடனும் காலநிலையுடனும் நெருங்கிய பிணைப்பைக் கொண்டுள்ளது. இதனால், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் சிறிய மாற்றம்கூட நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறனில் பாரிய சரிவை ஏற்படுத்துகின்றது. உத்தியோகபூர்வ தரவுகளின்படி, பின்வரும் துறைகள் மிக அதிகப்படியான இடர்நேர்வுகளைக் கொண்டுள்ளன:

விவசாயத் துறை (Agriculture Sector)

இலங்கையின் மொத்தத் தொழிலப்படையில் 38 சதவீதத்திற்கும் அதிகமானோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் விவசாயத்திலேயே தங்கியுள்ளனர். குறிப்பாக, வறண்ட வலயத்தில் மேற்கொள்ளப்படும் நெற்பயிர்ச்செய்கை மற்றும் ஈரவலயத்தின் பெருந்தோட்டப் பயிர்கள் (தேயிலை, இறப்பர்) காலநிலைக்கு மிக எளிதில் பாதிக்கப்படக்கூடியவை.

  • நெற்பயிர்ச்செய்கை: வெப்பநிலை 2 பாகை செல்சியஸினால் உயருமானால், நாட்டின் நெல் விளைச்சல் சுமார் 10% – 20% வரை குறையக்கூடும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன. ஒழுங்கற்ற மழைவீழ்ச்சி காரணமாக ‘யால’ மற்றும் ‘மகா’ பருவங்கள் குழப்பமடைவதுடன், வரட்சி காரணமாக வயல்கள் கைவிடப்படும் நிலையும் ஏற்படுகின்றது.
  • பெருந்தோட்டத் துறை: தேயிலைச் செய்கையானது குறிப்பிட்ட வெப்பநிலையிலேயே அதிக விளைச்சலைத் தரும். வெப்பநிலை அதிகரிப்பதனால் தேயிலைக் கொழுந்துகளின் தரம் குறைவதுடன், தேயிலைச் செடிகளுக்குப் புதிய பீடைகள் மற்றும் நோய்கள் பரவுவதற்கும் இது வழிவகுக்கின்றது. இது இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
  1. கடற்றொழில் மற்றும் கரையோர முகாமைத்துவம் (Fisheries & Coastal)

இலங்கை 1,340 கிலோமீற்றர் நீளமான கடற்கரையைக் கொண்டுள்ளதோடு, நாட்டின் கணிசமான மக்கள் புரதத் தேவைக்காகவும் வருமானத்திற்காகவும் கடலையே நம்பியுள்ளனர்.

  • கடல் மட்டம் உயர்வு: 2050 ஆம் ஆண்டளவில் கடல் மட்டம் உயருவதனால் கொழும்பு, நீர்கொழும்பு, காலி மற்றும் யாழ்ப்பாணம் போன்ற கரையோர நகரங்கள் வெள்ள அபாயத்தை எதிர்நோக்குகின்றன. இது கரையோர மீன்பிடி உட்கட்டமைப்புகளை (மீன்பிடித் துறைமுகங்கள், படகுகள்) சிதைக்கின்றது.
  • மீன் வளங்களின் இடப்பெயர்வு: கடல் நீரின் வெப்பநிலை அதிகரிப்பதனால் மீன்களின் இனப்பெருக்கச் சுழற்சி பாதிக்கப்படுவதுடன், ஆழ்கடல் மீன்கள் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்கின்றன. இதனால் சிறிய அளவிலான மீனவர்கள் (Small-scale fishers) ஆழ் கடலுக்குச் செல்ல முடியாமல் வருமானத்தை இழக்கின்றனர்.
  1. நீர் முகாமைத்துவம் (Water Resources)

காலநிலை மாற்றத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தல் நீர் வளங்களின் மீதே விழுகின்றது. மழைவீழ்ச்சியின் அளவு குறையாத போதிலும், அதன் பரம்பல் சீரற்று இருப்பதால் பாரிய சிக்கல்கள் உருவாகின்றன.

  • குடிநீர் தட்டுப்பாடு: வறண்ட வலயத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைவடைவதனால் குடிநீருக்கான தட்டுப்பாடு தீவிரமடைகின்றது.
  • நீர்ப்பாசனச் சவால்கள்: பண்டைய நீர்ப்பாசன முறைகளான ‘எல்லாங்காவ’ (Cascade System) குளங்கள் வரட்சியினால் வற்றிக் காணப்படுவதால், பயிர்ச்செய்கைக்குத் தேவையான நீரைத் தடையின்றி வழங்க முடியாமல் உள்ளது.
  1. பொதுச் சுகாதாரம் (Public Health)

காலநிலை மாற்றம் நோய்களின் பரவலுக்குச் சாதகமான சூழலை உருவாக்குகின்றது.

  • தொற்றுநோய்கள்: வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் வெள்ளப்பெருக்கு என்பன டெங்கு, மலேரியா போன்ற நுளம்புகளால் பரவும் நோய்கள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கின்றன. அத்துடன், சுத்தமான குடிநீர் தட்டுப்பாட்டினால் வயிற்றுப்போக்கு போன்ற நீர் மூலம் பரவும் நோய்களும் அதிகரிக்கின்றன.
  • வெப்பத் தாக்கம்: அதிகரித்த வெப்பநிலை காரணமாகத் திறந்தவெளியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் (விவசாயிகள், கட்டுமானத் தொழிலாளர்கள்) உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.
  1. சுற்றுலாத் துறை (Tourism Sector)

இலங்கையின் அந்நியச் செலாவணி ஈட்டலில் முக்கிய பங்கு வகிக்கும் சுற்றுலாத் துறை, அதன் இயற்கை அழகிலேயே தங்கியுள்ளது.

  • பல்லுயிர்ப் பெருக்க இழப்பு: கடல் நீர் வெப்பநிலை உயர்வால் ‘பவளப்பாறைகள்’ (Coral Reefs) வெளிறிப் போவது (Bleaching), இலங்கையின் நீருக்கடியிலான சுற்றுலாத் துறையைப் பாதிக்கின்றது.
  • உட்கட்டமைப்புச் சேதங்கள்: கரையோரங்களில் அமைந்துள்ள சுற்றுலா விடுதிகள் மற்றும் கடற்கரைகள் கடல் அரிப்பினால் அழிந்து போவது இத்துறைக்கு நீண்டகாலப் பொருளாதார நட்டத்தை ஏற்படுத்துகின்றது.

துறைசார்ந்த இந்தப் பாதிப்புகள் அனைத்தும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டவை. விவசாயத்தின் வீழ்ச்சி உணவுப் பாதுகாப்பைப் பாதிக்கும் அதேவேளை, அது கடற்றொழிலாளர்களின் பொருளாதாரத்தையும் மறைமுகமாகச் சிதைக்கின்றது. எனவே, இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு என்பது இந்தத் துறைகளை மீளக்கட்டியெழுப்பும் ‘காலநிலைத் தகவமைப்பு’ (Adaptation) திட்டங்களை மையப்படுத்தியே அமைய வேண்டும். இத்தகைய பாரிய செயற்திட்டங்களுக்குக் கடன்களை விட, வளர்ந்த நாடுகளின் வரலாற்றுப் பொறுப்புடன் கூடிய மானியங்களே நீதியான தீர்வாகும்.

 மாவட்ட ரீதியான காலநிலை பாதிப்புகள்

இலங்கையின் புவியியல் அமைப்பானது மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபட்டுக் காணப்படுவதால், காலநிலை மாற்றத்தின் விளைவுகளும் அந்தந்தப் பிரதேசங்களின் நில அமைப்பு மற்றும் வாழ்வாதாரங்களுக்கு ஏற்ப வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுகின்றன. குறிப்பாக, மத்திய மலைநாட்டின் பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் கேகாலை போன்ற மாவட்டங்கள் கடந்த சில தசாப்தங்களாக முன்னெப்போதும் இல்லாத வகையில் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளன. இலங்கையின் அனர்த்த முகாமைத்துவத் தரவுகளின்படி, மண்சரிவு அபாய வலயங்கள் கடந்த பத்தாண்டுகளில் சுமார் 22 மடங்காக அதிகரித்துள்ளமை ஒரு பாரிய அச்சுறுத்தலாகும். நுவரெலியா போன்ற மாவட்டங்களில் நிலவும் இழிவு வெப்பநிலை அதிகரிப்பதனால் தேயிலைப் பயிர்ச்செய்கை பாதிக்கப்படுவதுடன், திடீர் அதிசெறிவான மழைவீழ்ச்சி காரணமாக ஏற்படும் நிலச்சரிவுகள் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளை முற்றாகச் சிதைக்கின்றன. இந்த அனர்த்தங்களால் இடம்பெயரும் மக்களுக்குப் புதிய நிலங்களை வழங்குவதற்கும், உட்கட்டமைப்புகளைச் சீரமைப்பதற்கும் அரசாங்கம் மீண்டும் மீண்டும் கடன்களைப் பெற வேண்டியுள்ளமை ஒரு நச்சுச் சுழற்சியாக மாறியுள்ளது.

அனுராதபுரம், பொலன்னறுவை, அம்பாறை மற்றும் குருநாகல் போன்ற உலர் வலய மாவட்டங்கள் கடும் வறட்சியினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. இப்பகுதிகளில் மழைவீழ்ச்சி கோலங்கள் முற்றாக மாறுபடைந்துள்ளமையால், விவசாயிகளின் பாரம்பரியப் பயிர்ச்செய்கைப் பருவங்கள் குழப்பமடைந்துள்ளன. குறிப்பாக, வறட்சி காரணமாக ‘யால’ பருவச் செய்கை பல மாவட்டங்களில் முழுமையாகக் கைவிடப்படுவதால், நாட்டின் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இம்மாமாவட்டங்களில் நிலவும் நீர் நெருக்கடியானது ஒரு சமூக அநீதியாகவும் உருவெடுத்துள்ளது; குடிநீருக்காகப் பெண்கள் மைல் கணக்கில் நடக்க வேண்டியிருப்பதும், விவசாயக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் சிறு விவசாயிகள் வறுமைக்குள் தள்ளப்படுவதும் இங்குள்ள காலநிலை அநீதியின் கோரமான முகங்களாகும். வளர்ந்த நாடுகளின் கார்பன் வெளியேற்றத்திற்கான விலையை, இந்த அப்பாவி விவசாயிகள் தமது வாழ்வாதாரத்தின் மூலம் செலுத்தி வருகின்றனர்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு போன்ற கரையோர மாவட்டங்கள் கடல் மட்டம் உயர்வு மற்றும் உப்புநீர் உட்புகுதல் (Saline Intrusion) போன்ற தனித்துவமான சவால்களை எதிர்கொள்கின்றன. குறிப்பாக, யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலத்தடி நீருக்குள் கடல் நீர் உட்புகுவதனால், மக்களின் நன்னீர் கிணறுகள் மற்றும் விவசாய நிலங்கள் உவர்நீராக மாறிப் பயன்படாமல் போகின்றன. இது எதிர்காலத்தில் குடாநாட்டில் பாரிய குடிநீர் நெருக்கடியையும் இடப்பெயர்வையும் உருவாக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது. அதேவேளை, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கடல் கொந்தளிப்பு மற்றும் புயல் எச்சரிக்கைகள் காரணமாகத் தொடர்ச்சியாகக் கடலுக்குச் செல்ல முடியாமல் வருமானத்தை இழக்கின்றனர். மீன்பிடி உபகரணங்கள் மற்றும் படகுத் துறைகள் சேதமடையும் போது, அவற்றைப் புதுப்பிக்க மீனவச் சமூகங்கள் மீண்டும் நுண்நிதி (Microfinance) போன்ற அதிக வட்டி கொண்ட கடன் சுமைகளுக்குள் சிக்குவது வேதனைக்குரிய விடயமாகும்.

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை போன்ற அதிக சனத்தொகை கொண்ட மேற்கு மாகாண மாவட்டங்கள் முறையற்ற நகரமயமாக்கல் மற்றும் அதிகரித்த மழைவீழ்ச்சி காரணமாக அடிக்கடி திடீர் வெள்ளப்பெருக்குகளைச் (Flash Floods) சந்திக்கின்றன. இந்த நகர்ப்புற வெள்ளப்பெருக்குகள் வெறும் உட்கட்டமைப்புச் சேதங்களுடன் நின்றுவிடாமல், டெங்கு போன்ற தொற்றுநோய்கள் பரவுவதற்கும் ஏதுவான சூழலை உருவாக்கி விடுகின்றன. இதனால் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பின் மீது மேலதிக நிதிச் சுமை ஏற்படுவதுடன், குறைந்த வருமானம் பெறும் மக்கள் தமது சிறு தொழில்களை இழந்து பொருளாதார ரீதியாகப் பின்னடைகின்றனர். இவ்வாறாக, இலங்கையின் ஒவ்வொரு மாவட்டமும் தனது புவியியல் தன்மைக்கேற்ப ஒரு யுத்தத்தைப் போன்றதொரு காலநிலை நெருக்கடியைச் சந்தித்து வருகின்றது. எனவே, தேசிய மட்டத்திலான கடன் மறுசீரமைப்பின் போது, இந்த மாவட்ட ரீதியான பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, அவை மீண்டெழுவதற்குத் தேவையான நிதியை கடன்களாக அன்றி, பாரிய மானியங்களாக (Grants) பெற்றுக்கொள்ள சர்வதேச அழுத்தங்களைப் பிரயோகிப்பது காலத்தின் கட்டாயமாகும்.

இலங்கையின் தற்போதைய நிதி நிலைமையில் மேலதிகக் கடன்களை வாங்குவது பொருளாதார ரீதியான தற்கொலைக்குச் சமமானதாகும். எனவே, ‘காலநிலை நிதி’ (Climate Finance) என்பது கடன்களாக அன்றி, முழுமையான மானியங்களாக வழங்கப்பட வேண்டும் என்பதே காலநிலை நீதியின் அடிப்படை வாதமாகும். இலங்கையின் ‘தேசிய ரீதியாகத் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளை’ (NDCs) 2030 ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்ற சுமார் 26.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் வெளிநாட்டுக் கடன்களில் ஒரு பகுதியை ரத்து செய்து, அந்தப் பணத்தைக் காலநிலைத் தகவமைப்பு (Adaptation) திட்டங்களுக்கு – அதாவது மண்சரிவுத் தடுப்புச் சுவர்கள், வடிகால் அமைப்புகள் மற்றும் பாரம்பரிய நீர்ப்பாசன முறைகளை மேம்படுத்தல் – பயன்படுத்துவதற்கான ‘கடனுக்காகக் காலநிலை மாற்றம்’ (Debt-for-Climate Swaps) என்ற சர்வதேசக் கொள்கை மாற்றம் அவசியமாகின்றது. கடன் மறுசீரமைப்புப் பேச்சுவார்த்தைகளில் காலநிலை பாதிப்புகளை ஒரு முக்கிய காரணியாக இலங்கை முன்வைப்பதன் மூலமே, வளர்ந்த நாடுகளின் வரலாற்றுப் பொறுப்பை உறுதிப்படுத்த முடியும்.

காலநிலை அநீதி என்பது தேசிய மட்டத்தில் மாத்திரமன்றி சமூக மட்டத்திலும் பாரிய ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குகின்றது. குறிப்பாகக் கடலோர மற்றும் கிராமியச் சமூகங்களில் உள்ள பெண்கள் காலநிலை மாற்றத்தினால் தனித்துவமான சுமையை (Unique Burden) அனுபவிக்கின்றனர்.அதேபோன்று, மழைவீழ்ச்சி மாறுபடுவதால் சிறு விவசாயிகளின் பயிர்ச்செய்கை பருவங்கள் குழப்பமடைந்து, அவர்கள் தொடர்ச்சியான நட்டத்திற்கும் கிராமியக் கடன் சுமைக்கும் உள்ளாகின்றனர். இது அனர்த்தங்கள் என்பது வெறும் புள்ளிவிபரங்கள் அல்ல, அவை மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி சார்ந்த பிரச்சினைகள் என்பதைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றது.

இலங்கையின் பண்டைய நீர்ப்பாசன முறைகளான ‘குளங்கள் மற்றும் கால்வாய் அமைப்புகள்’ (Cascade Systems) வறட்சியைச் சமாளிப்பதற்கான சிறந்த வரலாற்றுச் சான்றுகளாகும். எவ்வாறாயினும், நவீன ‘கடின பொறியியல்’ (Hard Engineering) தீர்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், எமது மண்ணுக்கேற்ற இத்தகைய பாரம்பரிய அறிவுசார் தகவமைப்புகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன. இது ஒரு வகையான அறிவுசார் அநீதியாகும் (Epistemic Injustice). வெளிநாட்டு நிதியுதவிகள் வெறும் கொங்கிறீட் கட்டுமானங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உள்ளூர் சூழலுக்குப் பொருத்தமான மற்றும் குறைந்த செலவிலான இயற்கை சார்ந்த தீர்வுகளை (Nature-based Solutions) முன்னெடுப்பதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும். இத்தகைய திட்டங்கள் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதுடன், நீண்டகால சூழலியல் சமநிலையையும் பேண உதவும்.

பெண்களும் காலநிலை நீதியும்

காலநிலை மாற்றமானது ஒரு உலகளாவிய இயற்கை நிகழ்வாக இருந்தபோதிலும், அதன் பாதிப்புகள் பால்நிலை அடிப்படையில் (Gender-based) பெருமளவு வேறுபடுகின்றன. இலங்கையின் மொத்த சனத்தொகையில் 51.5 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்களாக உள்ள நிலையில், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் சுமையை அவர்கள் ‘தனித்துவமான மற்றும் பாரதூரமான’ முறையில் அனுபவிக்கின்றனர். குறிப்பாக, கிராமப்புற மற்றும் கரையோர மீனவச் சமூகங்களில் நிலவும் பாரம்பரிய பால்நிலை பாத்திரங்கள் (Traditional Gender Roles), காலநிலை நெருக்கடியின் போது பெண்களை மேலதிக பாதிப்புக்குள்ளாக்குகின்றன. குடும்பத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் நீர் முகாமைத்துவம் ஆகிய பொறுப்புகள் பெரும்பாலும் பெண்கள் மீதே சுமத்தப்பட்டுள்ளதால், வறட்சி அல்லது வெள்ளம் ஏற்படும் போது அவர்களின் வேலைப்பழு பன்மடங்கு அதிகரிக்கின்றது. உதாரணமாக, காலநிலை நீதி தொடர்பான அறிக்கைகளின்படி (Climate Justice Briefs), நீர் நிலைகள் வற்றிப்போகும் போது, பெண்கள் குடிநீருக்காக மைல் கணக்கில் நடக்க வேண்டியுள்ளதுடன், அது அவர்களின் ஆரோக்கியத்திலும், பிள்ளைகளைப் பராமரிக்கும் நேரத்திலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சமூக நீதி என்பது அனைவருக்கும் சமமான வாய்ப்பு மற்றும் பாதுகாப்பை வழங்குவதாகும், ஆனால் காலநிலை மாற்றமானது இலங்கையில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகளை மேலும் ஆழப்படுத்துகின்றது. குறிப்பாக, பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் அனர்த்தங்களின் போது பொருளாதார ரீதியாக மீண்டெழுவதற்குப் பாரிய சவால்களை எதிர்கொள்கின்றன. அனர்த்த நிவாரணங்கள் மற்றும் தகவமைப்புத் திட்டங்கள் (Adaptation Plans) வகுக்கப்படும் போது, பெண்களின் குரல்கள் பெரும்பாலும் முடிவெடுக்கும் மட்டங்களில் உள்வாங்கப்படுவதில்லை. இது ‘கொள்கை ரீதியான அநீதி’ ஆகும். மீன்பிடி வலைகளைப் பழுதுபார்த்தல், மீன் பதப்படுத்துதல் போன்ற சுயதொழில்களில் ஈடுபடும் பெண்கள், காலநிலை மாற்றத்தினால் வாழ்வாதாரத்தை இழக்கும் போது, அவர்களுக்குப் பொருத்தமான மாற்று வருமான வழிகளோ அல்லது காப்புறுதித் திட்டங்களோ வழங்கப்படுவதில்லை. இதனால், அவர்கள் மீண்டும் வறுமை மற்றும் நுண்நிதி நிறுவனங்களின் கடன் பொறிக்குள் சிக்குண்டவர்களாக மாறுகின்றனர்.

காலநிலை மாற்றத்திற்கு ஈடுகொடுப்பதற்கான பெண்களின் தகவமைப்புத் திறன்கள் (Adaptation Strategies) தனித்துவமானவை மற்றும் போற்றப்பட வேண்டியவை. பல தசாப்தங்களாகத் தத்தமது பிரதேசங்களில் நிலவும் காலநிலையை அவதானித்து வரும் பெண்களுக்கு, எந்தக் காலத்தில் எத்தகைய பயிர்களை வளர்க்கலாம் அல்லது நீரை எவ்வாறு சிக்கனமாகப் பயன்படுத்தலாம் என்பது குறித்த ‘பாரம்பரிய அறிவு’ (Traditional Knowledge) உண்டு. எவ்வாறாயினும், இத்தகைய அறிவார்ந்த பங்களிப்புகள் நவீன அறிவியல் திட்டங்களில் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன. பெண்களை வெறும் ‘பாதிக்கப்படுபவர்களாக’ மாத்திரம் பார்க்காமல், அவர்களைக் காலநிலை மாற்றத்திற்கான ‘மாற்றத்தின் முகவர்களாக’ (Agents of Change) அங்கீகரிக்க வேண்டும். சமூக நீதியை உறுதிப்படுத்த வேண்டுமாயின், காலநிலை நிதியானது பெண்களின் தலைமைத்துவத்தில் இயங்கும் சிறு தொழில்களுக்கு நேரடி மானியங்களாக வழங்கப்பட வேண்டும்.

இலங்கையில் காலநிலை நீதியை நிலைநாட்ட வேண்டுமாயின், பால்நிலை உணர்திறன் கொண்ட (Gender-sensitive) கொள்கைவகுப்புக்கள் அவசியமாகும். நில உரிமை, நிதி உதவி மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி ஆகியவற்றில் பெண்களுக்குச் சமமான முன்னுரிமை வழங்கப்படுவதன் மூலமே ஒரு மீளெழுச்சியான சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும். வளர்ந்த நாடுகள் வழங்கும் காலநிலை நிதியானது, இலங்கையின் அடிமட்டத்திலுள்ள பெண்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதையும், அவர்களுக்குத் தேவையான சுகாதார மற்றும் கல்வி வசதிகளை உறுதிப்படுத்துவதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். பெண்களின் உரிமைகளையும் சமூக நீதியையும் புறக்கணித்துவிட்டு எடுக்கப்படும் எந்தவொரு காலநிலைத் தீர்வும் முழுமையான வெற்றியைத் தராது. எனவே, சமூக நீதியுடன் கூடிய ஒரு பொருளாதார மீட்சிக்கு, பெண்களின் பங்களிப்பையும் உரிமையையும் உறுதிப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.

சர்வதேசக் கொள்கைகளும் இலங்கையின் நிலைப்பாடும்

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான சர்வதேச முயற்சிகளில் இலங்கை ஒரு பங்காளியாகச் செயற்பட்டு வருகின்றது. குறிப்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு உடன்படிக்கை (UNFCCC) மற்றும் பாரிஸ் உடன்படிக்கை ஆகியவற்றில் இலங்கை கையெழுத்திட்டுள்ளதுடன், அதற்கமைய தனது தேசிய ரீதியாகத் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளை (NDCs) தொடர்ச்சியாகப் புதுப்பித்து வருகின்றது. இலங்கையின் தற்போதைய கொள்கை நிலைப்பாட்டின்படி, 2030 ஆம் ஆண்டளவில் மின்சார உற்பத்தி, போக்குவரத்து, கைத்தொழில், கழிவு முகாமைத்துவம், விவசாயம் மற்றும் காடு வளர்ப்பு ஆகிய ஆறு முக்கிய துறைகளில் காபன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான (Mitigation) இலக்குகளை இலங்கை நிர்ணயித்துள்ளது. எவ்வாறாயினும், இத்தகைய பாரிய இலக்குகளை அடைவதற்குத் தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப வளங்கள் இலங்கையிடம் போதியளவில் இல்லை என்பது ஒரு கசப்பான உண்மையாகும். இலங்கையின் உத்தியோகபூர்வ மதிப்பீடுகளின்படி (Third National Communication), இந்த இலக்குகளை அடைவதற்கு சுமார் 26 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான நிதி தேவைப்படுகின்றது. ஏற்கனவே பாரிய கடன் சுமைக்குள் சிக்குண்டுள்ள ஒரு நாடால் இவ்வளவு பெரிய தொகையைச் சர்வதேச உதவி இன்றித் திரட்ட முடியாது என்பது ஒரு சர்வதேச மட்டத்திலான விவாதப் பொருளாகியுள்ளது.

சர்வதேச காலநிலை பேச்சுவார்த்தைகளில் இலங்கையின் பிரதான வாதம் ‘பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்புகள்’ (Common But Differentiated Responsibilities – CBDR) என்பதாகும். இதன்பொருள் என்னவென்றால், வரலாற்று ரீதியாகப் புவி வெப்பமடைதலுக்குக் காரணமான செல்வந்த நாடுகள், அதனால் இன்று பாதிக்கப்படும் இலங்கை போன்ற ஏழை நாடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதாகும். அண்மைய காலங்களில் எகிப்து மற்றும் டுபாயில் நடைபெற்ற சர்வதேச காலநிலை மாநாடுகளில் (COP27 & COP28), அனர்த்தங்களால் ஏற்படும் ‘இழப்பு மற்றும் சேதங்களுக்கான நிதியம்’ (Loss and Damage Fund) அங்கீகரிக்கப்பட்டமை இலங்கைக்குக் கிடைத்துள்ள ஒரு நம்பிக்கையூட்டும் விடயமாகும். எவ்வாறாயினும், இந்த நிதியத்திலிருந்து கிடைக்கப் பெறும் நிதி கடன்களாக அன்றி, முழுமையான மானியங்களாக இருக்க வேண்டும் என்பதில் இலங்கை உறுதியாக இருக்க வேண்டும். காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் அழிவுகளுக்காக மீண்டும் மீண்டும் கடன்களைப் பெறுவது என்பது, ஒரு நாட்டின் பொருளாதார இறையாண்மையைப் பணையம் வைக்கும் செயலாகும். எனவே, கடன் மறுசீரமைப்புப் பேச்சுவார்த்தைகளின் போது ‘காலநிலை நிதியை’ ஒரு பிரதான நிபந்தனையாக இலங்கை முன்வைக்க வேண்டியது அவசியமாகும்.

இலங்கையின் உள்நாட்டுக் கொள்கைத் திட்டமிடல்கள் தற்போது நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுடன் (SDGs) ஒன்றிணைக்கப்பட்டு வருகின்றன. தேசிய காலநிலை மாற்றக் கொள்கை (2023) மற்றும் தேசிய சுற்றுச்சூழல் நடவடிக்கை திட்டம் (2022-2030) போன்றவை இலங்கையின் எதிர்காலப் பயணத்திற்கான வழிகாட்டிகளாக உள்ளன. எவ்வாறாயினும், இந்தக் கொள்கைகள் வெறும் காகித அளவிலான திட்டங்களாக அன்றி, அடிமட்ட மக்களைச் சென்றடைவதில் சவால்கள் நிலவுகின்றன. குறிப்பாக, தேசிய மட்டத்தில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகள் மாகாண மற்றும் பிரதேச சபை மட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படும் போது போதிய நிதி ஒதுக்கீடுகள் இல்லாமையால் அவை முடங்கிப் போகின்றன. ‘காலநிலை நீதி’ என்பது வெறும் சர்வதேசக் கொள்கை மாத்திரமல்லாமல், அது கிராமப்புற விவசாயிக்கும் கடலோர மீனவனுக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமையாகும். எனவே, சர்வதேச ரீதியாகப் பெற்றுக்கொள்ளப்படும் மானியங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்ட சமூகங்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் இலங்கையின் நிதி முகாமைத்துவக் கட்டமைப்புக்கள் வெளிப்படைத்தன்மையுடன் மறுசீரமைக்கப்பட வேண்டும்.

சர்வதேசக் கொள்கைகள் மற்றும் சட்டகங்கள் எவ்வளவுதான் வலுவாக இருந்தாலும், இலங்கையின் புவியியல் மற்றும் பொருளாதார யதார்த்தங்களைக் கருத்தில் கொண்டு தனித்துவமானதொரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டியது அவசியமாகும். இலங்கை தனது பண்டைய நீர்ப்பாசன மற்றும் விவசாயத் தொழில்நுட்பங்களை (Indigenous Knowledge) நவீன காலநிலைத் திட்டங்களில் ஒரு வலுவான அங்கமாக முன்மொழிய வேண்டும். இது வளர்ந்த நாடுகளின் தொழில்நுட்ப மேலாதிக்கத்திற்கு மாற்றாக எமது மண்ணுக்கேற்ற தீர்வுகளை உலகுக்குக் காட்டும் ஒரு வாய்ப்பாகும். அதேவேளை, கடன்களைக் காலநிலைத் தகவமைப்பிற்கான மானியங்களாக மாற்றுவதற்கான (Debt-for-Climate Swaps) சர்வதேச அழுத்தங்களைத் தொடர்ந்து பிரயோகிப்பதன் மூலமே, இலங்கையால் தனது பொருளாதாரச் சுதந்திரத்தையும் சூழலியல் பாதுகாப்பையும் ஒரே நேரத்தில் உறுதிப்படுத்த முடியும்.

நீதியான மீட்சி

இலங்கையின் தற்போதைய பொருளாதாரச் சரிவு மற்றும் காலநிலை நெருக்கடி என்பன ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட முடியாத இரட்டைச் சவால்களாக உருவெடுத்துள்ளன. இக்கட்டுரையின் ஊடாக நாம் ஆராய்ந்த பல்வேறு தரவுகள் மற்றும் சமூக யதார்த்தங்கள் சுட்டிக்காட்டுவது என்னவென்றால், இலங்கைக்குக் காலநிலை மாற்றம் என்பது வெறும் சூழலியல் விவகாரம் மட்டுமல்ல, அது நாட்டின் பொருளாதார இறையாண்மை மற்றும் சமூக நீதியுடன் பிணைக்கப்பட்ட ஒரு வாழ்வாதாரப் போராட்டமாகும். 2030 ஆம் ஆண்டிற்குள் இலங்கை நிர்ணயித்துள்ள பாரிய காலநிலை இலக்குகளை  எட்டுவதற்குத் தேவைப்படும் பில்லியன் கணக்கான டொலர்களை, ஏற்கனவே கடன் சுமையால் முடங்கியுள்ள ஒரு தேசத்தால் தனியாகத் திரட்ட முடியாது. எனவே, சர்வதேசக் கடன் மறுசீரமைப்புப் பேச்சுவார்த்தைகளின் போது, ‘காலநிலை நீதி’ (Climate Justice) என்ற கோரிக்கையை இலங்கை மிக வலுவாக முன்வைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். வளர்ந்த நாடுகளின் வரலாற்றுத் தவறுகளால் ஏற்படும் இயற்கைச் சீற்றங்களுக்காக, இலங்கை போன்ற நாடுகள் மீண்டும் வட்டிக்குக் கடன் வாங்குவது என்பது அநீதியாகும்; இது நிறுத்தப்பட்டு, வெளிநாட்டுக் கடன்கள் காலநிலைத் தகவமைப்பிற்கான மானியங்களாக மாற்றப்பட வேண்டும்.

மாவட்ட ரீதியாகவும் துறைசார்ந்தும் நாம் அவதானித்த பாதிப்புகள், இலங்கையின் கொள்கை வகுப்பாளர்கள் ‘பரவலாக்கப்பட்ட தகவமைப்புத் திட்டங்களின்’ (Decentralized Adaptation) அவசியத்தை உணர வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. அனுராதபுரத்தின் வறட்சியும், நீர்கொழும்பின் குடிநீர் நெருக்கடியும், நுவரெலியாவின் மண்சரிவு அபாயமும் வெவ்வேறு தீர்வுகளைக் கோரி நிற்கின்றன.

இறுதியாக, இலங்கைத் தீவின் எதிர்காலமானது எமது பொருளாதார மீட்சியும் சூழலியல் பாதுகாப்பும் எவ்வாறு கைகோர்த்துச் செல்கின்றன என்பதிலேயே தங்கியுள்ளது. சர்வதேச சமூகம் இலங்கை போன்ற நாடுகளை வெறும் ‘கடனாளிகளாக’ மாத்திரம் பார்க்காமல், உலகளாவிய காலநிலை மாற்றத்தின் ‘பாதிப்பை எதிர்கொள்ளும் பங்குதாரர்களாக அங்கீகரிக்க வேண்டும். ‘இழப்பு மற்றும் சேதங்களுக்கான நிதியம்’ (Loss and Damage Fund) போன்ற சர்வதேசப் பொறிமுறைகள் இலங்கைக்குக் கடனற்ற நிதியுதவிகளை வழங்குவதை உறுதி செய்வதன் மூலமே ஒரு நீதியான உலகளாவிய ஒழுங்கை நிலைநாட்ட முடியும். கடன்களை மானியங்களாக மாற்றுவது என்பது இலங்கைக்குச் செய்யப்படும் சலுகை அல்ல; அது உலகளாவிய தார்மீகப் பொறுப்பாகும். எமது வளமான நிலத்தையும், பல்லுயிர்த் தன்மையையும், மக்களின் கண்ணியமான வாழ்வையும் எதிர்காலச் சந்ததியினருக்குக் கடனில்லாத ஒரு தேசமாக விட்டுச் செல்வதே உண்மையான வெற்றியாகும்.

#NorthEastNarrative #North #East #Narrative #Tamils #SriLanka #lka #ClimateJustice #ClimateChange #ActOnClimate #ClimateAction #SaveOurPlanet #ClimateCrisis #PlanetGuardians #EarthPulse #ClimateScience #ScienceBasedPolicy #KnowYourClimate #GlobalWarmingFacts #SustainableScience #GreenerFuture #CleanEnergy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button