Featuredமலையகம்

இயற்கையுடன் ஓர் உடன்படிக்கை

கட்டுரை | அருள் கார்க்கி | படம் | Anas Mohamed Nuski

ஒரு தீவு தேசத்தின் காலநிலைச் சவால்கள்

இலங்கையின் பொருளாதாரத்தின் பிரதான அச்சாணியாக விளங்கும் தேயிலைத் துறை, இன்று புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றத்தினால் முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொள்கிறது. 19 ஆம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் இலங்கை தேயிலை (Ceylon Tea) வர்த்தகம், இன்று 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் அந்நியச் செலாவணியில் பெரும் பங்கையும் தீர்மானிக்கிறது. எனினும், அண்மைக்காலமாக அதிகரித்து வரும் அதீத வெப்பநிலை, சீரற்ற மழைவீழ்ச்சி மற்றும் அடிக்கடி நிகழும் இயற்கை அனர்த்தங்கள் என்பன தேயிலைச் செடிகளின் உடலியல் வளர்ச்சியைப் பாதிப்பதோடு, மண்ணின் தரத்தையும் சிதைத்து வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் பேரிடர் அபாயக் குறைப்பு அலுவலகம் (UNDRR) மற்றும் ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம் (UNU-EHS) இணைந்து வெளியிட்டுள்ள “இயற்கை சார்ந்த தீர்வுகள்” (Nature-based Solutions – NbS) வழிகாட்டிக் கையேடு, இத்தகைய நெருக்கடிகளுக்குத் தீர்வாக இயற்கையோடு இயைந்த ஒரு புதிய பாதையை முன்மொழிகிறது. “இயற்கை சார்ந்த தீர்வுகள்” (NbS) என்பது சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாத்தல், நிலையான முறையில் நிர்வகித்தல் மற்றும் சீரமைப்பதன் மூலம் மனித சமூகத்தின் பொருளாதார மற்றும் சமூகச் சவால்களை எதிர்கொள்ளும் ஒரு மூலோபாயமாகும். இது இலங்கையின் மலையகத் தேயிலைத் தோட்டங்களில் காலநிலை மீள்திறனை (Climate Resilience) உருவாக்குவதற்கான மிகச்சிறந்த கருவியாகக் கருதப்படுகிறது.

தேயிலையை அழிக்கும் வெப்பம்

காலநிலை மாற்றத்தினால் தேயிலைத் துறை எதிர்கொள்ளும் பிரதான அச்சுறுத்தல் ‘அதீத வெப்பநிலை’ (Extreme Heat) ஆகும். தேயிலைச் செடியானது பொதுவாக 18°C முதல் 25°C வரையான மிதமான காலநிலையிலேயே செழித்து வளரும் இயல்புடையது. ஆனால், இலங்கையின் மத்திய மலையகத்தில் சராசரி வெப்பநிலை கடந்த ஒரு நூற்றாண்டில் 0.8°C முதல் 1.1°C வரை அதிகரித்துள்ளது. இது தேயிலைத் துளிர்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு, இலைகளில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, அதன் தனித்துவமான சுவை மற்றும் மணத்திற்குக் காரணமான இரசாயனச் சமநிலையைச் சீர்குலைக்கிறது. UNDRR இன் தரவுகளின் படி, இத்தகைய வெப்பநிலை உயர்வு வளிமண்டல ஈரப்பதத்தைக் குறைப்பதால், தேயிலைத் தோட்டங்களில் ‘நுண்-காலநிலை’ (Micro-climate) மாற்றம் ஏற்பட்டு, பூச்சிகள் மற்றும் நோய்களின் பரவல் அதிகரிக்கின்றது. குறிப்பாக, ‘கொப்புளி நோய்’ (Blister Blight) மற்றும் ‘செந்நிறச் சிலந்தி’ (Red Spider Mite) போன்ற பீடைகளின் தாக்கம் முன்னெப்போதையும் விட இன்று மலையகத்தில் தீவிரமாக உள்ளது. இது விளைச்சலைக் குறைப்பதோடு, அவற்றைக் கட்டுப்படுத்த அதிகளவிலான கிருமிநாசினிகளைப் பயன்படுத்த வேண்டிய சூழலை உருவாக்குகிறது, இது தேயிலையின் ஏற்றுமதித் தரத்தைப் பாதிக்கும் ஒரு சங்கிலித்தொடர் விளைவாகும்.

முறையற்ற மழைவீழ்ச்சியால் அழியும் மலையகம்

அடுத்ததாக, முறையற்ற மழைவீழ்ச்சி கோலங்கள் மலையகத்தின் புவியியல் அமைப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. முன்னரெல்லாம் பருவகால மழைவீழ்ச்சி சீராகக் கிடைத்த நிலையில், இன்று குறுகிய காலப்பகுதியில் அதீத மழை பெய்து, பின்னர் நீண்ட கால வரட்சி நிலவும் நிலை உருவாகியுள்ளது. அதீத மழையினால் செங்குத்தான சரிவுகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பாரிய மண் அரிப்பு (Soil Erosion) ஏற்படுகின்றது. ஒரு அங்குல மேன்மண் (Topsoil) உருவாவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் எடுக்கும் நிலையில், ஒரு சில மணிநேரப் பெருமழையில் அது அடித்துச் செல்லப்படுவது தோட்டங்களின் வளத்தை நிரந்தரமாகச் சீர்குலைக்கிறது. இது நீர் பிடிப்புப் பகுதிகளில் நிலச்சரிவு (Landslides) அபாயத்தை அதிகரிப்பதுடன், ஓடைகள் மற்றும் ஆறுகளில் வண்டல் படிவதற்கும் காரணமாகிறது. UNDRR கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இத்தகைய பேரிடர் அபாயங்களை (Disaster Risks) எதிர்கொள்ள ‘இயற்கை சார்ந்த தீர்வுகளே’ நீண்ட கால அடிப்படையில் செலவு குறைந்த மற்றும் பயனுள்ள வழியாகும். எடுத்துக்காட்டாக, செயற்கையான கொங்கிறீட் மதில்களை விட, தாவர அரண்களை (Bio-fencing) அமைப்பது நிலச்சரிவைத் தடுப்பதில் அதிக வினைத்திறன் கொண்டது.

இயற்கை அரண்களை பாதுகாக்க வேண்டும்

இயற்கை சார்ந்த தீர்வுகளை (NbS) இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் நடைமுறைப்படுத்துவதில் ‘விவசாயக் காடாக்கம்’ (Agroforestry) முதன்மையான இடத்தைப் பிடிக்கிறது. தேயிலைத் தோட்டங்களுக்குள் நிழல் தரும் மரங்களை (Shade Trees) நடுவதன் மூலம், செடிகள் நேரடியாகச் சூரிய வெப்பத்திற்கு உள்ளாவதைத் தடுக்கலாம். இம்மரங்கள் வளிமண்டலத்தில் உள்ள கார்பனை உறிஞ்சிச் சேமிப்பதன் மூலம் (Carbon Sequestration), உலகளாவிய புவி வெப்பமடைதலைக் குறைக்கப் பங்களிப்புச் செய்கின்றன. அத்துடன், இம்மரங்களின் இலைகள் உதிர்ந்து மண்ணுக்குத் தேவையான சேதனப் பசளையை வழங்குவதோடு, மண்ணின் ஈரப்பதத்தையும் தக்கவைக்கின்றன. மேலும், மலையகத்தில் உள்ள சதுப்பு நிலங்கள் மற்றும் நன்னீர் ஓடைகளைச் சீரமைத்தல் (Riparian Forest Restoration) மற்றுமொரு முக்கியமான NbS அணுகுமுறையாகும். இது வரட்சிக் காலங்களில் தோட்டங்களுக்குத் தேவையான நீரை வழங்குவதுடன், பல்லுயிர் பெருக்கத்தைப் பேணவும் உதவுகிறது. UNDRR கையேட்டில் விவரிக்கப்பட்டுள்ள சூழல்சார்ந்த தகவமைப்பு  (Ecosystem-based Adaptation – EbA) எனும் கோட்பாடு, இத்தகைய இயற்கை அரண்களைப் பாதுகாப்பதன் மூலம் மனித சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை வலியுறுத்துகிறது.

ஒருங்கிணைந்த திட்டமிடல் அவசியம்

நிர்வாக ரீதியாக நோக்கும் போது, இயற்கை சார்ந்த தீர்வு (NbS) திட்டங்கள் வெற்றியடைய வேண்டுமானால், அதில் ‘ஒருங்கிணைந்த திட்டமிடல்’ (Integrated Planning) அவசியமாகும். அதாவது, தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் (TRI), வளிமண்டலவியல் திணைக்களம், பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர் சமூகங்கள் ஆகிய தரப்பினரிடையே முறையான ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் பேரிடர் அபாயக் குறைப்பு அலுவலகத்தின் (UNDRR) கையேட்டில் உள்ள ”ஸ்ரொக்ரோக்கிங்”  (‘Stocktaking) மற்றும் ஸ்கிறீனிங் (Screening) போன்ற கருவிகளைப் பயன்படுத்தி, ஒவ்வொரு தோட்டத்திலும் உள்ள காலநிலை அபாயங்களை இனங்கண்டு, அதற்கேற்றவாறு இயற்கை சார் தீர்வுகளை வடிவமைக்க வேண்டும். குறிப்பாக, மலையகத் தமிழ் மக்களின் பாரம்பரிய அறிவையும், மண்ணின் இயல்பு குறித்த அவர்களின் அனுபவத்தையும் இத்திட்டங்களில் உள்வாங்குவது அதன் நம்பகத்தன்மையை அதிகரிக்கும். பெண்களின் பங்களிப்பை இத்தகைய சூழலியல் மேலாண்மையில் உறுதிப்படுத்துவது, சமூக மட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு கருவியாக அமையும் என ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம் (UNU-EHS) ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

சூழல் நட்புத் தேயிலை

பொருளாதார ரீதியில், இயற்கை சார்ந்த தீர்வுகளுக்கான (NbS)  ஆரம்பச் செலவு அதிகமாகத் தெரிந்தாலும், நீண்ட கால அடிப்படையில் இது ‘செலவு-பயன்’ (Cost-Benefit) விகிதத்தில் முன்னிலையில் உள்ளது. செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்கான செலவைக் குறைப்பதோடு, பேரிடர் காலங்களில் ஏற்படும் பாரிய உட்கட்டமைப்புச் சேதங்களைத் தவிர்க்கவும் இது உதவுகிறது. ‘சிலோன் டீ’ எனும் நாமத்தை ‘சூழல் நட்பு தேயிலை’ (Eco-friendly Tea) என உலகச் சந்தையில் பிரபல்யப்படுத்துவதன் மூலம், அதிக விலைக்குத் தேயிலையை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பும் உருவாகும்.

கறுப்புத் தங்கத்தைப் பாதுகாக்க

முடிவாக, இலங்கையின் தேயிலைத் துறை எதிர்கொள்ளும் காலநிலைச் சவால் என்பது வெறும் தொழில்நுட்பப் பிரச்சினை அல்ல, அது இயற்கையோடு நாம் கொண்டுள்ள உறவைப் புதுப்பிப்பதற்கான ஒரு அழைப்பாகும். இயற்கையை அழித்துச் செய்யப்படும் விவசாயம் ஒருபோதும் நிலையானது அல்ல என்பதை உணர்ந்து, இயற்கை சார்ந்த தீர்வுகள் போன்ற இயற்கை சார்ந்த தீர்வுகளை நோக்கி நாம் விரைவாக நகர வேண்டும். இதுவே எமது நாட்டின் கறுப்புத் தங்கத்தைப் பாதுகாப்பதற்கும், வரப்போகும் பேரிடர்களில் இருந்து மலையகச் சமூகத்தைப் பாதுகாப்பதற்குமான ஒரே வழியாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button