
அபகரிக்கப்பட்ட நிலம்
நேர்காணல் | North East Narrative | படம் | Selvarajah Rajasekar
செல்வராஜா ராஜசேகர் என அறியப்படுகின்ற சுயாதீனப் பத்திரிகையாளர், ‘மாற்றம்’ இணையதளத்தின் பிரதம ஆசிரியராவார். மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் தயாரிப்பில் குச்சவெளி பிரதேசத்தில் இடம்பெறும் நிலஅபகரிப்பு, அதனூடாக மேற்கொள்ளப்படும் பௌத்தமயமாக்கல் குறித்து, ”குச்சவெளி” என்னும் தலைப்பிலான ஆவணப்படம் ஒன்றினை இயக்கியுள்ளார். அந்த ஆவணப்படம் குறித்து North East Narrative இணையதளத்திற்கு அவரளித்த நேர்காணல் இங்கே பிரசுரமாகிறது.
குச்சவெளி ஆவணப்படம் எடுக்கப்பட்டதன் நோக்கம் என்ன?
குச்சவெளி நில அபகரிப்பு பிரச்சினைகள் நாளாந்தம் பத்திரிகைகளிலும், இணையதளங்களிலும் செய்திகளாக வாசிக்கக்கிடைத்தவை. அதுவொரு வழமையான பிரச்சினைபோன்று சாதாரணமயப்பட்டுவிட்டது. குச்சவெளி நில அபகரிப்பு பிரச்சினை என்பது வெறும் செய்தி, அவ்வளவுதான் என்கிற நிலையை அடைந்துவிட்டது. ஆனால், 480 அளவிலான சிங்கள மக்கள் வசிக்கும் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் 32 பௌத்த விகாரைகள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் காலப்பகுதியில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு குறித்து ஆழமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் குச்சவெளியில் நடக்கும் நில அபகரிப்புக்கள் தனி அத்தியாயமாக இடம்பெற்றிருந்தது. எனவே எல்லா பகுதிகளிலும் இடம்பெறும் நில அபகரிப்பைவிட குச்சவெளியில் இடம்பெறும் நில அபகரிப்பை மாத்திரம் ஓர் ஆவணப்படமாக்குவது குறித்து சிந்தித்தேன். பொதுவாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரச திணைக்களங்களான, பாதுகாப்புத்துறை, தொல்லியல் திணைக்களம், வனவளப் பாதுகாப்பு திணைக்களம், போன்றவைதான் அதிகளவில் நில அபகரிப்புக்களில் ஈடுபட்டிருக்கின்றன. ஆனால் குச்சவெளியில் தொல்லியல் திணைக்களமே அதிகளவில் நில அபகரிப்பை செய்திருக்கின்றது. இந்த விடயம் பத்திரிகையில் ஒரு செய்தியாக இருப்பதைவிட, காட்சி ரீதியான ஆவணமாக இருப்பது வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பிட்டதொரு நிலப்பரப்பினுள் அதிகளவான பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டிருக்கின்றமையை அனைவரும் அறிவர். பெரியகுளம் தொடக்கம் தென்னவன்மரபடி வரைக்கும் நில அபகரிப்பு பிரச்சினையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதனை காட்சியாக்கும்போது, அதனால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் குரல்களைப் பதிவுசெய்யும்போது ஏற்படும் சவால்கள் பற்றியும் அனைவரும் அறிவர். எனவே எத்தகைய சவால்கள் ஏற்படினும் இந்த விடயத்தை ஆவணப்படமாக்கிவிட வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது.
இந்த ஆவணப்படத்தை எடுத்தபோது என்னென்ன சவால்களை எதிர்கொண்டீர்கள்?
நிறையவே சவால்களுக்கு முகம்கொடுக்க நேரிட்டது. உங்களுக்கும் தெரியும். கெமராவுடன் கிராமத்திற்குள் நுழைந்தாலே உடனடியாகத் தகவல் போய்சேர்ந்துவிடும். அவர்களுடன் இணைந்து செயற்படுபவர்கள், ஆதரவாளர்கள் தகவல்களை வழங்கிவிடுவர்.
இந்த ஆவணப்படத் தயாரிப்பின்போது, சில இடங்களுக்குப் போகவே முடியாத நிலைமை காணப்பட்டது. அந்தநேரங்களில் சில உத்திகளை நாங்கள் கையாண்டோம். சில விடயங்களை வெளிப்படையாக சொல்லமுடியாத நிலையும் உண்டு. இதேபோல வேறு யாரும் ஆவணப்படம் எடுக்க சென்றாலோ, ஊடக வேலைகள்செய்யச்சென்றாலோ அது பாதிப்பை ஏற்படுத்தும். சில இடங்களில் எங்களை அடையாளப்படுத்தினோம். விசாரணைகளுக்குள்ளாக்கப்பட்டோம். சில இடங்களில் சிங்கள நபராகக்கூட என்னை வெளிக்காட்டவேண்டியிருந்தது. அந்தளவுக்கு இனம், மொழி மறைத்தே இந்த ஆவணப்படத்திற்கான தரவுகளைச் சேகரிக்கவேண்டியிருந்து. எம்மை யாரென அடையாளப்படுத்திய சந்தர்ப்பங்களில் இனந்தெரியாத நபர்களினால் பின்தொடரப்பட்டோம். அவ்வாறான வேளைகளில் கிராம மக்களின் உதவியுடன், பல கிலோமீற்றர்கள் தூரம் காடுகளுக்குள் நடக்கவேண்டியேற்பட்டது.
நான் சந்தித்த நபர் ஒருவரிடம் நான்கு தலைமுறைகளுக்குரிய காணி உரித்துக்குரிய ஆவணம் உண்டு. அதாவது பிரிட்டிஸ் காலத்திற்குரிய 30 ஏக்கர் காணி உறுதி அவரிடம் உண்டு. அந்த நபருடைய காணியை பார்ப்பதற்காகச் சென்றபோது பௌத்தபிக்கு ஒருவர் தன் ஆதரவாளர்களைத் திரட்டிக்கொண்டுவந்தார். இவ்வாறு நாங்கள் காணி அபரிப்பு குறித்து ஆவணங்களைத் திரட்டுகிறோம் என்பதை மலையுச்சியில் குடியிருக்கும் பௌத்தபிக்கு எவ்வாறு தெரிந்துகொண்டார் எனில், அந்த மலையடிவாரத்தில் இருக்கிற வயல்களில் சிங்கள மக்கள் பயிர்ச்செய்கையில் ஈடுபடுகின்றனர். நான் கெமராவுடன் அவ்விடத்தில் நின்றுகொண்டிருந்தபோது, அவ்வழியால் நெல் அறுவடைசெய்து உழவு இயந்திரத்தில் ஏற்றிச்சென்ற சிங்கள மக்கள் என்னைப்பற்றி பிக்குவிடம் சொல்லியிருப்பார்கள் என நினைக்கிறேன். உடனடியாகவே அவ்விடத்திற்கு வந்த பௌத்தபிக்கு, தனது சகாக்கள் எல்லோருக்கும் தொலைபேசி ஊடாக அறிவித்து, முச்சக்கரவண்டிகளில் ஆட்களை அழைத்துவந்து எங்களை சுற்றிவளைத்தார்கள். அதிலிருந்து தப்பிக்க நாங்கள் காலை 10.30 மணிக்கு காட்டுக்குள் நுழைந்தோம். மாலை 4.00 மணிக்குத்தான் காட்டுக்குள் இருந்து வெளியேறினோம். அவ்வளவு நேரத்திற்குப் பௌத்தபிக்கு உள்ளிட்ட ஆதரவாளர்கள் அவ்வயல் நிலப் பகுதியில் எங்களை மறித்துக் காத்துக்கிடந்தனர்.
குச்சவெளி ஆவணப்படத்தின் ஊடாக அந்தப் பிரதேசத்தில் என்னென்னவகையான அபகரிப்புகள் இடம்பெற்றுள்ளதை அவதானித்தீர்கள்?
குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவினுள் வாழுகின்ற தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதான வாழ்வாதாரத் தொழில்களாக விவசாயமும், மீன்பிடியுமே காணப்படுகின்றது. அபகரிப்புகள் என்று பார்க்கும்போது, முக்கியமாக சைவ மக்களின் கோயில்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. வயல் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தாலும், அரச திணைக்களங்களினாலும் மக்களின் வாழ்வியலோடு சம்பந்தபட்ட இடங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாகப் புல்மோட்டையில் முஸ்லிம் மையவாடியைக் குறிப்பிடலாம். இதில் முக்கியமாக, தமிழ் மக்களின் பல நூற்றாண்டுகால வழிபாட்டிடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த ஆவணப்படத்தில் குச்சவெளியில் இருக்கின்ற பழமைவாய்ந்த மூன்று சைவ கோயில்களை ஆவணப்படுத்தியிருக்கின்றேன். இந்த ஆலயங்களில் விவசாயத்தோடு சம்பந்தப்பட்ட வழிபாட்டுமுறைகள்தான் அதிகம் பின்பற்றப்பட்டுள்ளன. அனேகமாக இந்த வழிபாட்டுமரபுடைய சைவ ஆலயங்களை மையப்படுத்தியே 32 பௌத்த விகாரைகளும் கட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் புதிதாக பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. அல்லது பௌத்த விகாரைகள் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்ற இடங்களில், விகாரை அமைப்பதற்கான காணியின் அளவு விஸ்தரிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள்கூட பௌத்தபிக்குகளால் விகாரை அமைப்பதற்கென கோரப்பட்டுள்ளது. இன்னும் சில இடங்களில் கூகிள் வரைபடத்தில் பௌத்த விகாரைகளாக அடையாளம் காட்டப்பட்டுள்ளது. ஆனால் அவ்விடத்திற்கு நேரடியாக சென்றுபார்த்தால், அங்கு பௌத்த விகாரைகளோ, அதனுடன் தொடர்புடைய எவ்வித எச்சங்களோ இல்லை. எதிர்காலத்தில் அவ்விடத்தில் பௌத்த விகாரைகளை அமைப்பதற்கான ஏற்பாடாகவே முதலில் கூகிள் வரைபடத்தில் பௌத்த விகாரையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் கருத்துக்கூறினர்.
இங்கே நான் குறிப்பிட்ட மூன்று ஆலயங்களிலுமே விவசாயத்தை செழிப்படையச்செய்யும் விதமாகவே வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. அதுவே அந்த ஆலயங்களைத் தொன்மைக்காலம்தொடக்கம் வழிபட்டுவரும் தமிழ் மக்களின் நம்பிக்கையாக இருந்துவந்துள்ளது. கடந்த பல வருடங்களாக தம் மரபார்ந்த ஆலயங்களில் சுதந்திரமாக வழிபட முடியாத சூழல் இருப்பதனால், முன்புபோல் அங்கு விவசாயம் செழிப்பதில்லை. விவசாய உற்பத்தியில் அழிவுகள் ஏற்படுகின்றன என மக்கள் நம்புவதோடு, மனவுளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளனர். உதாரணமாக வளத்தாமலை நாகதம்பிரான் கோயிலில் பல தலைமுறைகளாக பூசைவழிபாடுகள் ஆற்றிவரும் பூசகரான மாணிக்க நடராசா என்ற நபரை ஆவணப்படத்திற்காக நேர்காணல் செய்யமுடிந்தது. அவர் விபரமறிந்தவகையில் இது நான்காவது தலைமுறை. ஆனால் அவரால் தற்போது கோயிலில் பூசைவழிபாடுகள் செய்யமுடியவில்லை. தலைமுறை தலைமுறையாகப் பூசைவழிபாடுகள் செய்துவந்த தமது மரபார்ந்த கோயிலுக்குப் பூசைகள் செய்யமுடியவில்லையே என்கிற மனவுளைச்சல் அவரிடமுண்டு. இப்போது வளத்தாமலையிலுள்ள பழைய கோயிலிருந்து ஐந்து கிலோமீற்றர்கள் அப்பாலுள்ள புல்மோட்டை பிரதான வீதியில் ஒரு கருங்கல்லைவைத்து மனநிம்மதிக்காக வழிபட்டுவருகின்றார். தன் வாழ்வில் ஒருமுறையாவது தங்களது மரபார்ந்த ஆலயத்தில் வழிபாடுசெய்துவிடவேண்டும் என்பதுதான் அவரின் இறுதி ஆசையாக இருந்தது. பன்னிரெண்டாயிரம் வெற்றிலை, பன்னிரெண்டாயிரம் பாக்கு, பன்னிரெண்டாயிரம் பழம் ஆகியனகொண்டு மடையிட்டு வழிபாடுசெய்வதே மரபாக இருக்கிறது. ஆனால் கடந்த30 வருடங்களாக செய்ய முடியாமல் இருந்த பூசை வழிபாடுகளை எப்படியாவது ஆரம்பித்து அடுத்த தலைமுறையிடம் கையளித்துவிடலாம் என்று எதிர்பார்ப்புடன் இருந்த அவரது உயிர் அண்மையில் இந்த உலகை விட்டே பிரிந்தது. இதேபோலத்தான் தென்னவன்மரபடி கந்தசுவாமிமலை கோயிலும் உள்ளது. பாரம்பரியமிக்க அந்த முருகன் ஆலயத்திற்கு வழமையான மரபுகளைப் பின்பற்றி வழிபாடாற்ற முடியாதநிலையே காணப்படுகின்றது. செம்பீஸ்வரர் கோயிலுக்கும் இதேநிலைதான். அந்த ஆலயத்தின்நிர்வாகத்தினர்தொடர்ச்சியாக எடுத்த முயற்சியின் காரணமாக, ஊர் மக்கள் மாதந்தோறும் தவணை அடிப்படையில் வழிபட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு வழிபடுவதற்கு செல்லும்போதுகூட மலையடிவாரத்தில் முகாமிட்டுள்ள இராணுவத்தின்பாதுகாப்புகெடுபிடிகளைஎதிர்கொள்ளவேண்டியுள்ளது. இந்த விடயங்களை ஆவணப்படத்தில் துணிந்து சொல்லக்கூட யாரும் முன்வரவில்லை. அவ்வளவிற்கு அச்சுறுத்தலானநிலை தொடர்கின்றது.
இதேபோன்றுதான்முஸ்லிம்மக்களிடமிருந்தும்பழையபள்ளிவாசல்கள், வயல்நிலங்கள், மையவாடி, பாடசாலைபோன்றஇடங்கள்ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆவணப்படத்தில் சுயதணிக்கை ஏதும் செய்யவேண்டியிருந்ததா?
ஆவணப்படத்தை எடுக்கும் முன்னரே ஒரு தீர்மானத்துக்கு வந்திருந்தேன். என்ன நடந்தாலும் சுயதணிக்கை இல்லாமல் நான் எடுத்த காட்சிகளை அவ்வாறே ஆவணப்படத்தில் உள்ளடக்க வேண்டும் முடிவெடுத்திருந்தேன். ஆனால், அவ்வாறு செய்ய முடியாது என்பதை பின்னர்தான் தெரிந்துகொண்டேன். ஏற்கனவே, படையினராலும், புலனாய்வுப் பிரிவினராலும், பௌத்த பிக்குகளாலும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கிவருகின்ற மக்களுக்கு மேலும் இந்த ஆவணப்படத்தின் ஊடாக எந்தவித பிரச்சினைகளும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். குறிப்பாக, இப்போது ஓரளவாவது வழிபாட்டுகளில் ஈடுபட்டுவரும் கோயில்களுக்கு முற்றிலுமாக போவதற்கு தடைவிதிக்குமளவுக்கு எனது ஆவணப்படம் காரணமாக அமைந்துவிடக் கூடாது. அதனால், பல காட்சிகளை தவிர்த்திருந்தேன். குறிப்பாக, செம்பீஸ்வரர் ஆலய வளாகத்தில் துப்பாக்கிகளுடன் இராணுவத்தினர் சப்பாத்து சகிதம் நடந்து திரிந்தது (பொங்கல் பொங்கும் அடுப்பின் அருகே, கோயில் வாசல்), என்னை விசாரித்த வீடியோ காட்சிகள், படையினருக்கு எதிரான மக்களது கருத்துகளை தணிக்கை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.
அதேபோல, ஆவணப்படம் வெளியானதன் பின்னர், சிங்கள பெளத்த அடிப்படைவாத கருத்துக்களைக் கொண்ட சமூக ஊடகங்களில், குறிப்பாக பேஸ்புக் பக்கங்களில் என்னைப் பற்றியும் ஆவணப்படத்தை தயாரித்த மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தைப் பற்றியும் மிகவும் மோசமாக விமர்சித்திருந்தார்கள்.
#Trincomalee #Kuchchaveli #Tamils #Land #Grabbing #SriLanka #Buddhism #Documentary #Film #Narrative #People #CPA



